சனி, 23 ஜூலை, 2011

"படி தாண்டா பத்தினி பெண்கள் "

திரைப்பட பின்னணி பாடகியாக
பெயர் வாங்க விரும்பிய
குயில் போல் பாடும் குரல் கொண்ட
மீனா இன்று பாடுகிறாள்
அவள் வீட்டு குளியறையில்....

கதைகள் எழுதி குவித்து
பெரும் பெயர் வாங்குவேன் என்று
சூளுரைத்த கவிதாவின் கதைகள்
இன்று வெளிவராமல் கிடக்கின்றன
அவள் வீட்டு பரண் மேல் ......

ஓட்ட பந்தயத்தில் எப்பொழுதும்
முதல் பரிசு வாங்கும் பவித்ராவின் கனவு
தடகளத்தில் இந்தியாவிற்கு முதல்பெயர்
வாங்கி தருவது இன்று அவள் ஓடுகிறாள்
பிள்ளைகளின் பின்னே ....

நல்லாசிரியர் பெயர் வாங்க
கனவு கண்ட வேணி அக்கா
இன்று ஆசிரியராக இருக்கிறாள்
அவள் பிள்ளைகளுக்கு மட்டும் ....

பல துறைகளில் பெயர் வாங்க துடித்த
இவர்கள் எல்லாம் இன்று ஒரே பெயர்
வாங்கினார்கள் ....
"படி தாண்டா பத்தினி பெண்கள்" என்று .........

செவ்வாய், 5 ஜூலை, 2011

மனிதம் தொலைத்தவன்

நேற்று வரை நோயின் பிடியில்
நல்ல உணவுக்கும் வழியில்லை
மருந்து வாங்கவும் பணமில்லை
குடிக்க நீர் தரவும் ஆளில்லை .....

சதை எதுவும் இல்லாமல் எலும்பும் தோலுமாய்
கிழிந்த பாயில் கிடந்த அந்த மனிதரின் இறப்பில் ....

இன்று ஊரெங்கும் இரங்கல் போஸ்டர்
தேர்போல் ஜோடனை பல்லாக்கு
சின்னதும் பெரியதுமாய் மாலைகள்
தெருவெங்கும் பூக்குவியல்
அரசியல்வாதிகளின் அணிவகுப்பு அதில்
கண்ணீரில்லாத கண்களை துடைத்து கொண்டு
தகப்பனின் சாவில் சுயவிளம்பரம்
தேடும் இவனுமொரு மனிதனா ...?
மனிதம் தொலைத்த மிருகமா ...........

வெள்ளி, 1 ஜூலை, 2011

.காத்திருக்கிறேன் .........

காத்திருக்க சொல்கிறாய்
காலம் கடக்கின்றது
நானும் காத்திருக்கிறேன்
கல்லாகி நிற்கிறாய் நீ
காலம் உன்னை கரைக்கவில்லை......
உன் நினைவினில்
கற்பூரமாய் கரைகிறேன் நான் .....
என்றோ ஒருநாள் நீ என்னை தேடி வருகையில்
காற்றினில் கரைந்திருப்பேன் நான்
ஆனாலும் உன்னோடு
என் வாசம் மட்டும் மிச்சமாய் ................

கட்டளைகள்

காதலித்த பெண்ணை கரம் பிடிக்க கட்டளைகள் இடுகிறாய்.......
திருமணமான பின்
உறவெல்லாம் உன் விருப்பப்படி
நட்பெல்லாம் நீ நாடியவரிடம் மட்டும்
சொந்தமெலாம் நீ சொன்னவரிடம் மட்டும்
எல்லாமே உன் விருப்பப்படி என்றால்
அவளுடைய மூளையை
என்ன செய்வது ......?....ஓ....
பொன்னுருக்கி செய்யாமல் அவள் மூளை உருக்கி
செய்வாயோ தாலி ........?