Friday, December 31, 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பணம் செய்யும் இயந்திரமாய்
வாழ்ந்தது போதும்
அன்பு கொள்ளும் மனிதனாய்
வாழ்வோம் இனி என்
உறுதி கொள்வோம்
புத்தாண்டு நன்னாளில் .....
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
அன்புடன் சுஜா

Wednesday, December 29, 2010

சுதந்திரத்தின் விலை

எப்போதும் அண்ணனின்
வீட்டினுள் சிறைகைதி போல்
இருந்த அம்மாவுக்கு
சுதந்திரம் கிடைத்தது
அம்மாவின் சொத்துக்கள்
அண்ணனின் பெயரில்
மாறிய ஒரு மாலை பொழுதினில் ......

Tuesday, December 28, 2010

வேண்டுதல்


மறந்து விடு என்று
உன்னிடம் சொல்லும்
ஒவ்வொரு முறையும்
மறக்காமல் வேண்டுகிறேன்
இறைவனிடம் நீ என்னை
மறக்க கூடாது என்று .....

இயந்திர இதயம்


குதிரைகளிலும் யானைகளிலும்
பயணப்பட்டனர் அன்று
பேருந்தும் ரயிலும் என
இயந்திரமாய் ஆனது இன்று ....

உழவுக்கு எருதுகளும்
பொதி சுமக்க கழுதைகளும்
மாறி இன்று வாகனங்கள் ஆயின .....

அன்பும் பரிவும் பாசமும் நேசமுமாய்
இருந்த மனித இதயங்களை
தேடிய போது தெரிந்தது
எல்லாம் மாறிய போது
இதயங்களும் மாறிவிட்டது இயந்திரமாய் என .....

Thursday, December 16, 2010

பிம்பங்கள்


காய்ந்த சருகாய் மனதில்
மக்கி அழிந்து போகின்றன
சில முகங்கள்
தேவை படுகின்ற பொழுதினில்
தோண்டி எடுத்து தேடி அலைகின்ற
வேளையிலும் நினைவினில்
வருவதில்லை அவர்களின் பிம்பங்கள் ...

தேவை இல்லையென மனதின்
ஆழத்தில் புதைத்து
பல நினைவுகளை போட்டு
அழுத்தி பூசி மொழுகினாலும்
மேலெழும்புகின்றன சில பிம்பங்கள்
பூமியில் புதைக்கப்பட்டும்
மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் போல ......

Friday, December 10, 2010

கோடி புடவை

கிழிந்த புடவைக்கு
மாற்று புடவை கூட
கொடுத்து உதவாத
சொந்தஙகளால் மனம் வெறுத்து
தற்கொலை செய்தவனின்
மரணத்தின் போது
மனைவிக்கு கோடியாய்
வந்து விழுந்த புடவைகள்
மொத்தம் நூறு .......

Monday, November 29, 2010

அணில் பிள்ளை

ராமர் போல் அவதாரமாய் இருந்திருந்தால்
இலங்கை அசுரர்களை அழித்திருப்போம் .....
அனுமன் போல் பலமிருந்திருந்தால்
இலங்கைக்கு தீ இட்டு இருப்போம் ...
ஓடி வந்து உதவிட மனமிருந்தும்
இயலாமையால் தவிக்கிறோம் ....
காலம் கனியும் பொழுதினில்
அவதாரமாய்,பலவானாய்..
உதவ இயலாவிட்டாலும்
நிச்சயம் துரும்பெடுத்து போடுவோம்
அணில் பிள்ளை போல் .................

Saturday, November 27, 2010

வார்த்தை பூக்கள்

வார்த்தை பூக்கள் பூத்தன
ஆயிரம் என் மனதில்
கோர்த்து வைத்து தேடினேன் உன்னை
அருகினில் நீ வந்த போது
நாணம் தடுத்தது மாலையிட
வெட்கப்பட்டு உனக்கு சூடாமலே
காய்ந்து கிடக்கிறது
பல வார்த்தை மாலைகள்
என் மன தோட்டத்தில் ......

Wednesday, November 24, 2010

பம்பரம்

சில நேரங்களில் சோகத்தோடு
பல நேரங்களில் ஆனந்தத்தோடு
சில நேரங்களில் அமைதியில்
பல நேரங்களில் சிந்தனையில்
புரியாத புதிராய் நான்
என்னை புரிந்தவர்கள் அறிவார்கள்
சுற்றுகின்ற பம்பரம் நான்
சுழட்டுகின்ற சாட்டை நீ
நீ சொடுக்கி விட்ட இடத்தில
சுழல்பவள் நானென்று ........

ஆயுதம்

ஆயுதங்கள் தேவையில்லை
எனைக் கொல்ல
உன் நினைவுகளே போதும் ....

Monday, November 22, 2010

பயணங்கள்


சுட்டெரிக்கும் சூரியன்
சுகமாய் குளிர்விக்கிறது ....
முட்செடிகள் பூக்களாய்
காட்சியளிக்கிறது ......
பல மைல் தூரங்கள்
நொடியில் கடக்கின்றன ..
கரடுமுரடான பாதைகள்
பஞ்சு மெத்தை போலாகின்றன ....
சாலையில் போவதை மறந்து
ஆகாயத்தில் மிதக்கிறேன்
உன்னுடனான பயண நேரங்களில் மட்டும் ....

Tuesday, November 16, 2010

சிந்தனை


சிந்தித்ததை எழுத்தில் வடிக்கவிடாமல்
எப்போதும் உன் தொந்தரவு
தனிமையில் சிந்தித்து
கற்பனைகளை கொட்டிவிட
பேராவல் உண்டானது எனக்கு
அத்தினமும் வந்தது ஓர்நாள்
மையூற்றி அமர்ந்தேன் நானும்
சிந்தனைகள் மட்டும்
சென்று விட்டது உன் பின்னே .........

Friday, November 12, 2010

அரசியல்


தொண்டை வரள குரல் கொடுத்து
உடல் வருத்தி உண்ணாநோன்பிருந்து
கண்ணீர் வழிய விவசாயின் துயரம் பேசி
தண்ணீர் தராத அண்டை மாநிலத்தின்
கல் நெஞ்சும் கரைய கெஞ்சி பேசி
தண்ணீர் பெற போராடிய
அரசியல்வாதி தம்பியை
பார்த்து சிரிக்கிறான் அவன் அண்ணன்
தன் வயலுக்கு வரும் நீரை
தடுத்து மடை எழுப்பி
பயிர் வாட செய்த அவன் செயலை எண்ணி .........

Saturday, November 6, 2010

ஈரம்


அரவமின்றி வந்திறங்கியது
அந்த உடல்
அழுது அரற்ற ஆளில்லை
கதறி அழுவோர் யாருமில்லை
ஆட்டோவில் வந்திறங்கி
ஒதுங்கியபடி நின்றனர்
ஒப்பாரி வைத்து அழுவது
நாகரீகம் இல்லையென
கண்ணீரை கைகுட்டையால்
ஒற்றி எடுத்தனர்
கடிகாரத்தை பார்த்து கொண்டே
பிணம் தூக்க காத்திருந்தனர்
ஊர் திரண்டு புலம்பி அழுது
வழியனுப்பி வைத்ததோர் காலம்
இன்று வெப்பமடைந்து காய்ந்து போனது
பூமி மட்டுமில்லை ........
ஈரம் இல்லாத மனித இதயங்களும் கூட ........

Sunday, October 31, 2010

பொக்கிஷம்உடைந்து போன
உபயோகம் இல்லாத
பொருள் தான் ஆனாலும்
பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்
உன்னை நினைவுபடுத்துவதால்...............

Thursday, October 28, 2010

ஆயுள்கைதி


பெரியவளாய் அறியப்பட்ட
ஓர் பொன் மாலை பொழுதினில்
பூட்டபட்டதுனக்கு ஓர் விலங்கு ........
ஆண்களின் வாசம் ஆகாதென்றும்
தனிமையில் பயணம் கூடாதென்றும்
வேலைகளை பொறுப்பாய் செய்யவும்
துணையுடன் வெளியில் சென்றுவரவும்
ஆயிரம் கட்டளைகள் இடபட்டதுனக்கு.......
வருடங்கள் பல கடந்த பின்னரும்
இன்னும் தொடர்கிறது கட்டளைகள் ......
தந்தையிடம் தொடங்கிய அது
இன்று கணவரது கைகளில் ....
பின் வரும் காலங்களில் மாறுமுன்
பிள்ளையின் கைகளில் .........
பெண்ணென்று பிறந்ததினால்
ஆயுள் கைதியாய் நீ ............
பூரிக்க ஒரு விஷயமுண்டு
எண்கள் இடவில்லை இன்னுமுனக்கு
பெயர் சொல்லியே அழைகின்றனர் ...............

Tuesday, October 26, 2010

பொம்மலாட்டம்


பொம்மலாட்ட கலைகள்
அழிந்ததாக சொன்னது யார் ....?
ஒவ்வொரு வீட்டிலேயும்
கயிறுகள் அசைக்கபடுகின்றன
கணவரது கைகளில்
பொம்மைகள் ஆடுகின்றன
மனைவி என்ற பெயரினில்......

Sunday, October 24, 2010

காளி


தெயவாம்சமாய் வாழ்வாள்
என் எண்ணி கட்டி வந்த
என் மருமகள்
தெய்வ வடிவமாகவே
உருவெடுக்கிறாள் அனுதினமும்
காளியாக ..........

மகன்


எப்போதும் என் பிள்ளையென்று
பெருமை கொள்ளும் மகனை
தவறுகள் செய்யும் போது மட்டும்
தாரை வார்க்கிறார் என்னிடம்
உன் பிள்ளையென்று .............

Wednesday, October 20, 2010

வேதனை


அழகழகான கூழாங்கற்கள்
வித விதமான அலங்கார பொருட்கள்
வண்ணமயமான விளக்குகள்
அதிசயமாய் பார்க்கும் பிள்ளைகள்
எதுவுமே ஆனந்தம் தரவில்லை
கண்ணாடி பெட்டியில்
அடைப்பட்டு கிடக்கும்
அலங்கார மீனுக்கு .......

பூமணம்


வாழ்நாள் முழுவதும்
பூவின் வாசம் அறியவிடாமல்
பூச்சூடவும் தடை விதிக்கப்பட்ட
விதவையின் இறுதி ஊர்வலம்
முழுவதும் பூக்களின் மணம் ....

அன்னை


பக்குவமாய் குளிப்பாட்டி
அழகாய் உடை மாற்றி
வேடிக்கை காட்டி சோறூட்டி
கட்டியணைத்து கதை சொல்லி
தூங்க வைக்கும் போது
அவளும் அன்னையாக உருவெடுகிறாள்
தனது பொம்மைக்கு .............

Tuesday, September 14, 2010

முகமூடி


உள்ளம் பூரிக்கும் மகிழ்ச்சியில்
உரத்து சிரிக்க வெட்கம்
மனதை அழுத்தும் வேதனையில்
கத்தி அழ தயக்கம்
கோபம் கொள்ளும் வேளையில்
பொங்கி எழ பயம்
இவை எதுவும் இல்லை குழைந்தைக்கு
வெளிபடுத்துகிறது எதையும்
தைரியமாக
குழைந்தகளாகவே இருந்திருக்கலாம்
முகமூடி அணியாமல் வாழ்வதற்கு.........

Saturday, September 11, 2010

விநாயகர்


பட்டும் பீதம்பரமுமாய்
துண்டும் மாலையுமாய்
நேற்றைக்கெல்லாம் கவனிக்கப்பட்ட
முச்சந்தி விநாயகர்
இன்று நிற்கிறார் கவனிப்பார் இல்லாமல்
தேர்தல் முடிந்த வாக்காளர் போல் ........

Thursday, September 9, 2010

உபதேசம் .


பேய்களும் பூதங்களும்
பொய்யென பாடம் நடத்தி
பிள்ளைகளின் பயம் போக்கிய
ஆசிரியை இரவானதும்
ஜன்னலை பார்த்து பயந்தபடி
நிற்கிறாள் பேய் வருமென ......

Tuesday, September 7, 2010

பத்மவியூகம்


பத்ம வியுகமாய் சில சூழல்கள்
உள்ளே நுழைகிறோம் அலட்சியமாய்
வெளிவரும் பாதை தெரிவதில்லை
வேதனைகள் தாக்கும் போது
வெளியேற துடிக்கிறோம்
போகும்பாதை தெரியாததால்
தடுமாறி தவிக்கிறோம்
நுழைந்தால் வெளியேற
முடியாத பத்ம வியூகத்தின்
மறுபெயர் காதல் .......

Saturday, September 4, 2010

ரசனை


வரிசையில் நிற்பதினால்
கடுப்பான கணவர் முகமும்
நிற்பதினால் உண்டான வலியையும்
காத்திருப்பதினால் உண்டாகும் எரிச்சலையும்
அனைத்தையும் மறக்க செய்கிறது
முன்னே நிற்கும் பெண்ணின்
தோளில் சாய்ந்து எனை பார்த்து
சிரிக்கும் குழந்தையின் பார்வையில் ......

Monday, August 30, 2010

...அப்பா


எத்தனையோ தலையணைகள்
மாற்றி விட்டேன் ....
எதுவும் தரவில்லை
உன் கையில் படுத்து
உறங்கிய போது கிடைத்த நிம்மதியை ........

Friday, August 27, 2010

எண்ண அலைகள்


இருவரும் அருகினில் இருக்கிறோம்
வெவ்வேறு எண்ண அலைகளின்
பின்னே பயணித்தபடி ......
பிரிந்ததும் பயணிக்கின்றன
நம் எண்ண அலைகள்
பிரிந்தவரின் பின்னே.........

எண்ண அலைகள்

இருவரும் அருகினில் இருக்கிறோம்
வெவ்வேறு எண்ண அலைகளின்
பின்னே பயணித்தபடி ......
பிரிந்ததும் பயணிக்கின்றன
நம் எண்ண அலைகள்
பிரிந்தவரின் பின்னே.........

Monday, August 23, 2010

நம்பிக்கைஇருள் சூழ்ந்த குழியின் உள்ளிருந்து
அண்ணாந்து தேடுகிறேன்
இழையாய் வருகிறது
நம்பிக்கை என்னும் ஒளி
கயிறாக இல்லையென
கலங்கி நிற்காமல்
இழை பற்றி ஏறுகிறேன்
என்றேனும் ஒருநாள்
ஒளி பிறக்குமென .....

Tuesday, August 17, 2010

என் பயணம்


என் பலவீனங்கள்
எல்லாம் உனக்கு பலம் ...
என் குற்றங்கள்
எல்லாம் உனக்கு சாதகம்....
என் வீழ்ச்சிகள் எல்லாம்
உன் உயர்வு ....
எப்போதும் என்னையே
உற்று நோக்கும் உன் பார்வையால்
எனக்கு சங்கடங்கள் ஏதுமில்லை...
பலவீனங்களும் குற்றங்களும்
வீழ்சிகளும் இல்லாமல்
என்னை பயணப்பட
வைக்கிறது உனது பார்வை .....

Friday, July 30, 2010

தவறுகள்


தவறுகள் எல்லாமே
தெரியாமல் செய்தவையாக
கருதபடுகின்றன
நமக்கு வேண்டியவர்கள்
செய்யும் போது மட்டும் ....

பார்வை

உயிர் கொல்லும் என்று
தெரிந்த பின்னும்
வேண்டுமென யாசிக்கிறேன்
உனது பார்வையை ....

நினைவு

உன்னை நினைக்க
எனக்குள் ஆயிரம் காரணங்கள்
என்னை மறக்க
உனக்குள் ஆயிரம் காரணங்கள் ...
அழியாத நினைவு சின்னங்கள்
என நீ கொடுத்த
பரிசு பொருட்கள் எல்லாம்
அழிந்தன காலப்போக்கில் ...
அழித்து விடு என நீ சொன்ன
உன் நினைவுகள் மட்டும்
அழியவில்லை இன்றுவரை ...

Monday, July 5, 2010

தொலைந்த சிறகுகள்

எனக்கு நினைவு தெரிந்த
நாள் முதலாய் தேடுகிறேன்
தொலைந்து போனதாய்
நான் நினைத்திருந்ததை

சகோதரன் துணையுடன்
கடைவீதிக்கு சென்றேன்
தந்தையின் கைப்பற்றி
தெருவில் நடந்தேன்
இன்று கணவனின் கண்காணிப்பில்
வலம் வருகின்றேன்

எனக்கென்ற சிறகுகள்
எங்கேயென தேடுகையில்
கிடைத்தது பதிலொன்று
தொப்புள் கொடியுடன்
பிய்த்தெறிந்து விட்டனர்
பெண்ணென்று தெரிந்ததால் ..........

Thursday, April 29, 2010

இதய வாசல்

இதய வாசலை
மூடி விட்டதால் என்னை
நுழைய விடாமல்
தடுக்கலாம் என்று நினைக்காதே.....
உன் இதய வாசல் வழியே
வந்து செல்லும் நினைவலைகள்
அல்ல நான்.....
உன் இதயத்தை
துடிக்க வைக்கும் துடிப்பலைகள் நான்......

கண்ணீர்

உதடுகள் உச்சரிக்காத
உள்ளத்து துயரங்களை
உரியவருக்கு உணர்த்திட
உருண்டோடி வரும் எழுதுகோல்

கதை

தான் படைத்த கதைகளை
சுமந்து கொண்டு
படவுலகில் அலைந்து தோற்று
களைத்து வீடு திரும்பிய
காதல் கணவனை ....
தோளோடு அணைத்து
தன்னம்பிக்கை ஊட்டி
ஆறுதலோடு தட்டி தூங்க வைத்த
காதல் மனைவி ......
இரவு முழுவதும் விழித்திருந்து
கண்ணீரோடு கதை புனைகிறாள்
மறுநாள் காலை வரப்போகும்
மளிகைக்கடை காரனுக்கும்
பால்காரனுக்கும் சொல்ல வேண்டிய பதில்களை

Sunday, April 18, 2010

பயணங்கள் ..

இலக்கில்லாத பயணங்கள்
மிகவும் இனிமையானது
நேரத்தோடு போராட
வேண்டிய அவசியம் இல்லை
எண்ணங்களை குவித்து
வேலைகளை முடிக்க
தேவையில்லை
எங்கெங்கோ சுற்றி திரியும்
எண்ண அலைகளின் பின்
நாமும் கவலை இல்லாமல்
சுற்றி களிக்கலாம்
இலக்கில்லாத பயணங்களை
முயன்று பாருங்கள்
இன்பம் இதுதான் என்று உணர்வீர்கள் .....

உரிமை

ஆண் பெண் நட்பு புனிதம்
நட்பு கொள்வது நமது உரிமை ...
திருமணத்திற்கு முன்
நீ பேசிய பேச்சுக்கள் இவை
ஆனால் இவையெல்லாம்
உனக்கு மட்டுமே
உரிமை என்பதை மட்டும்
சொல்ல மறந்தாயோ நீ?

Wednesday, April 14, 2010

திருப்தி .

ஆடுகளின் மேல் அமரும்
காக்கைகள் எழுந்து பறந்து
எருது மேல் அமர்கிறது
ஆனந்தம் இல்லையென
அந்தரத்தில் உயர்ந்து
மின்சார கம்பியில்
அமர்ந்து தீய்கிறது
சில மனங்களும் அதுபோல
எதிலும் திருப்தி கொள்ளாமல்
துன்பத்தில் மாட்டி தீய்கிறது ....

பூக்கள்

ஒரே இடத்தில்
ஆயிரம் பூக்கள் பார்த்தேன்
பள்ளி முடிந்ததும் வாசலில் .....

முரண்பாடுகள்

முரணான அறிவுரைகள் புகுந்த வீட்டை நேசி
கணவன் சொல் கேள்
பிறந்த வீடு பெருமை பேசாதே
என்று மகளுக்கும் ...
மாமியார் வீட்டுக்கு
அடிக்கடி போகாதே
மனைவி கைபாவையாக ஆகாதே
பிறந்த வீட்டை மறக்காதே
என்று மகனுக்கும் ........

ஞாபகம்

தீயில் இட்டு
சுட்டெரித்தாலும் பின்
மீண்டெழுந்து புது
வேகத்தோடு கிளம்பும்
பீனிக்ஸ் பறவை போன்றது
என்னுள்ளன உன் நினைவுகள்
நான் தீயிலிட்டு கொளுத்தினாலும்
புது வேகத்தோடு கிளர்ந்தெழுகின்றது ....

Tuesday, April 6, 2010

பொத்தல்

கடை கடையாய் ஏறி இறங்கி
காதல் மனைவிக்கு
பிடித்த நிறத்தில்
புடவை வாங்கி பரிசளித்தவன்
கழற்றிய சட்டையின் உள்
பனியனில் ஆயிரம் பொத்தல்கள்.......

Saturday, April 3, 2010

நினைவுகள்

எத்தனையோ போரட்டங்கள்
எவ்வளவோ பிரச்சனைகள்
வாழ்கையில் நிற்க முடியாமல்
கடிகாரத்தோடு ஓட்டங்கள் ...
எவ்வளவு ஓடினாலும்
கண்ணில்படும் பழங்கால
தேக்கு மரப்பெட்டி தாத்தாவையும்
முதுகு சொரியும் குச்சி ஆச்சியையும்
தேக்கு கைத்தடி அப்பாவையும்
நினைவில் கொண்டு வர
தவறுவதில்லை...

சிக்கல்

சிறிது நெகிழ்வு
சிறிது குழைவு
கொஞ்சம் வளைவு
கொஞ்சம் நெளிவு
பயன்படுத்தினால்
சிக்கல்கள் தீர்ந்துவிடும்
நூல்கண்டிலும் வாழ்விலும் ....

குணம்

முப்பதாயிரம் கொடுத்து
மூஞ்சுறு போல் நாய் வாங்கி
நடு வீட்டில் வளர்த்து
அது எச்சிலையும் கழிவையும்
முகம் சுளிக்காம அள்ளி
பெருமையோடு காத்திடுவான்
உண்ணாம உறங்காம
கருவிலே உன்னை காத்து
பசியோட பாடுபட்டு
நீ வச்ச மிச்சமெல்லாம்
நாயை போல தின்னு
உன்னை பொன்னு போல
காத்து வளர்த்த
உன் அன்பு தாயை
எழுந்து போய் கழியலைன்னு
தனி குடிசையில படுக்க வச்சான்
நாகரீக உலகமையா
வெகு நாசமான உலகமையா........

மரணம்

மரணம்
உன்னை பாதிக்காத
உன்
சொந்த விஷயம் ......

Friday, March 19, 2010

கொசு

குரல் கொடுக்கும் பூக்காரிக்கும்
கூவி அழைக்கும் குல்பிக்கரானுகும்
மௌனமே பதிலாக வருகிறது
கொசுவுக்கு பயந்து சாத்தப்பட்ட
கதவுகளிடமிருந்து ...........

Wednesday, March 17, 2010

நினைவு

என் கனவு சோலை
முழுவதும் பூக்களாக
உன் முகம் மட்டும் தான்
தெரிகிறது
உன் கனவு சோலையில்
பூக்களாக அல்ல
முட்களாகவாது என்
நினைவுகள் தோன்றுமா....?

கண்ணாடி

எந்த ஒரு விஷயத்திலும்
உன் முகம் காட்டும்
கோபமோ மகிழ்ச்சியோ
மட்டுமே நான் பிரதிபலிக்கிறேன்
பெண்ணாய் பிறந்ததை விட
நீ பார்க்கும் கண்ணாடியாய்
பிறந்திருக்கலாம்
வலிகளாவது மிஞ்சியிருக்கும் .....

Tuesday, March 16, 2010

நம்பிக்கை

இருள் சூழ்ந்த
குழியின் உள்ளிருந்து
அண்ணாந்து தேடுகிறேன்
இழையாய் வருகிறது
நம்பிக்கை எனும் ஒளி
கயிறாய் இல்லையென்று
கலங்கி நிற்காமல்
இழை பற்றி ஏறுகிறேன்
என்றேனும் ஒளி பிறக்குமென.......

வேண்டுதல் .

மூவாயிரம் தெய்வத்திடம்
வேண்டுகிறாள்
மூன்று பெண்களை
பெற்றவள் ....
வளம் கொழிக்கும் வாழ்வு
வேண்டி அல்ல
வரதட்சணை வாங்காத
மூன்று மருமகன்களை வேண்டி ......

அந்தஸ்து ..

தெருவில் அழுது
கொண்டே செல்லும்
குழந்தையை
வாரியணைத்து ஆறுதல்
சொல்ல விடாமல் தடுக்கிறது
மாடி வீடும், பணகார அந்தஸ்தும் ....

பொய் சுவடுகள்

உன் வாசல் கதவை
தாண்டும் போது மட்டும்
பூமி அதிர நடப்பாள்
அவள் கொலுசொலி
நீ கேட்க ....
அதுவரை புன்னகை
மட்டும் பூக்கும் அவள் இதழ்கள்
உன் வாசல் தாண்டும் போது
சத்தமாக சிரிக்கும் ....
காணாதவரை கண்டது போல்
நிறுத்தி வைத்து உன் வாசலில்
கதைப்பாள் ....
சுவடுகளை பின்பற்றி
காதெல்ன்று நீ போய்
சொன்னால்
ஐயோ இல்லையென்று
தந்தை பின்னே ஓடுவாள்
பொய் சுவடுகளை நம்பாதே
பின் வேதனையில் வெம்பாதே ........

பயணச்சீட்டு

வரிசையில் நிற்ப்பதில்லை!
போக்குவரத்தில் மாட்டுவதில்லை!
கூட்டத்தில் நசுங்குவதில்லை !
விபத்துகளும் நேருவதில்லை !
கொக்குகளே
உங்களுக்கு எங்கே கிடைத்தன
இந்த சுகமான பயணத்துக்கான
சீட்டுகள் ....?

பார்வை .

தந்தையின் கோபம்
தாயின் கண்டிப்பு
தேர்வின் தோல்வி
நண்பர்களின் கேலி
எதுவுமே தராத
மனவலியை தருகிறது
உனது கடைகண்ணின்
ஓர் அலட்சிய பார்வை ............

மலர்

என்னுள் மலர்ந்தது
காதல் மலரொன்று
அதை உன் கண்களில்
படாமல் மறைகிறேன் இன்று
மலரை நீ சூடாமல்
போனாலும் பரவாயில்லை
அதை வாடாமல் பாதுகாப்பேன்
என்றும் என் மனதில் வைத்தே ....

Friday, March 12, 2010

வாழ்க்கை..

நூறு பவுன் நகை
நூறு புடவை,மாட்டுவண்டி
பத்து ஏக்கர் நிலம்,வெள்ளி பாத்திரம்
சீதனமாக கொண்டு வந்ததாக
அகங்காரத்தோடு எல்லோரையும்
அடக்கி திரிந்தவள்
வெறும் கரும் புகையாய்
மறைகிறாள் இறந்ததும் ......

Wednesday, March 10, 2010

வாலி

எல்லோர்க்கும் அறிவாளி நான்
உன் முன்னே மட்டும் அறிவீலி
சூரியன் முன்னே மங்கிவிடும்
மெழுகு விளக்கா நான் ?
இல்லை என் அறிவில் பாதியை
எடுத்து கொள்ளும் வாலியா நீ?

நிழல் ..

நெடுந்தூர என் பயணத்தில்
அனலின் வெப்பத்தில்
நான் தகித்த போது
என் மேல் படர்ந்த
உன் நிழலின்
சுகத்தில் மயங்கி நின்றேன்
நிமிடத்தில் மறைந்ததும்
தான் புரிந்தது
நீ என்னை தொடரும்
நிலவின் நிழல் அல்ல
நிமிடத்தில் தாண்டும்
மேம்பால நிழல் என்று....

விருப்பங்கள் ..

என் விருப்பங்களை எல்லாம்
முழுமையாக நிறைவேற்றுவதாக
மமதை கொள்கிறாய்
உனக்கு தெரியாது
நான் விரும்புவது எல்லாம்
நீ நிறைவேற்ற கூடிய
விருப்பங்களை மட்டும்
தான் என்று........

Tuesday, March 9, 2010

ஏக்கம்

ஆடம்பரமான பங்களா
உல்லாசமான கார் பயணம்
கட்டு கட்டாய் பணம்
உடல் மூடும் நகைகள்
எல்லாமே தூசியாய் தெரிகிறது
தெருவில் விளையாடும் பிள்ளைகளை
ஏக்கதுடன் பார்க்கும் என் மகளின்
பார்வை முன் ..........

Monday, March 8, 2010

ஜன்னல்

எப்போதும் ஆறும்
நான்கும் அடிக்கும் என்
மகனின் மட்டைபந்து
இப்போதெலாம் மிக
மெதுவாகவே தட்டபடுகிறது
எதிர் வீடு ஜன்னலை
பார்த்துக்கொண்டே. ......

Friday, March 5, 2010

தகுதி

வசிக்க தகுதியில்லா
இடங்கள்
காற்றில்லாத அறை
காதலில்லாத மனது .....

பயணம்

திகிலூட்டும் பயணங்கள்
வேகமாக செல்லும் வண்டி
நெளிந்து வளைந்து
வாகனங்களின் ஊடே
பயணிக்கும் அனுபவங்கள்
நேற்று வரை ரசித்தேன்
இன்று என் மகன்
ஓட்டுவதை பார்க்கும் வரை ......

சூரியகாந்தி ..

என் கண்களும்
சூரியகாந்தி பூக்களும்
ஒன்று தான்
பூக்கள் சூரியன்
இருக்கும் திசையை
மட்டுமே நோக்குகின்றன
என் கண்கள்
நீ இருக்கும் திசையை
மட்டுமே நோக்குகின்றன .......

துருவங்கள்

நீ இதழ் மூடி மௌனம் காக்கிறாய்
நான் என் எண்ணங்களை எல்லாம்
வார்த்தையாய் வடிக்கிறேன்
இரு துருவங்களாய் நீயும் நானும்
ஆனாலும் ஒருவரை ஒருவர் ஈர்க்கிறோம்......

Wednesday, March 3, 2010

ஆசான்

வேதனைகள் ஏக்கங்கள்
ஏமாற்றங்கள் துன்பங்கள்
எல்லாவற்றையும் தொண்டைக்குழியில்
நிறுத்தி புன்னகை மட்டும் காடுகின்றாயே!
உனது ஆசான் பெயர் திருநீலகண்டரோ ?

மனம்

பாரங்களை ஏற்றாதிர்
மனம் ஒரு கழுதையல்ல ...
துக்கங்களை சுமக்காதிர்
மனம் ஒரு சுமைதாங்கி அல்ல ....
ஏக்கங்களை நிரப்பாதிர்
மனம் ஒரு அழுக்கு தொட்டி அல்ல ....
சல்லடையாய் வைத்திருங்கள்
மன சங்கடங்கள் ஓடி விடும் ...........

துக்கம்

தாய்மாமன் இறந்தாராம்
சேதி வந்து சேர்ந்தது
பிள்ளையை குளிக்க வைக்கணும்
மாமனுக்கு சோறு கொண்டு போகணும்
அத்தைக்கு கூழு கரைக்கனும்
வீட்டை கூட்டி பெருக்கணும்
மாட்டுக்கு தண்ணி காட்டனும்
அத்தனையும் முடிச்சுட்டு
நானும் போய் சேர்ந்தேன்
நான் படும் துன்பங்களும்
சேர்த்து வச்ச துக்கங்களும்
கரையும் வரை அழுதேன்
வீடு போய் சேர்ந்ததும்
வேற வேலை பர்க்கணுமுல...

Friday, February 26, 2010

அன்பு

அன்பின் அளவை
அளக்க முடியுமா
என்றனர் என்னிடம்
நான் உன் எடையை
சொன்னேன்......

முள் ...

கடிகார முள்ளாய்
என்னை சுற்றி வந்தாய்
அன்று
உன் பிரிவினால்
நெருஞ்சி முள்ளாய் குத்துகிறாய்
இன்று
அருகிலும் பிரிவிலும்
என்றுமே முள் தான்
நீ எனக்கு.........

வலி

அடிக்காமல் வலிக்க
வைக்க முடியுமா?
முடிகின்றதே உனது
மௌனத்தால் ..............
..

காதல்

மலர் ஒன்றை அனுப்பினேன்
என்மேல் காதல் உண்டென்றால்
சூடி கொண்டு வா
இல்லை என்றால் கையில்
ஏந்தி வா
என் கல்லறையில் வைத்திட .............

நினைவுகள்

உன் நினைவுகளே வேண்டாம் என்று
வெகுதூரம் ஓடிச்சென்று மூச்சிரைக்க
நின்று பார்கிறேன் என்முன்னே
நிழலாய் நீண்டிருகிறது
உன் நினைவுகள் ..................

தியாகம்

எப்போதும் நான் தோற்பதால்
நீ வீரன் என்று மமதை கொள்ளாதே
தோல்வியை நீ தாங்க மாட்டாய்
என்பதால் உனக்காக தோற்று
போகிறேன் நான் .........

சந்தேகம்

நோய் உள்ளவர்களுக்கு தான்
வலியாமே?
யார் சொன்னது?
உனக்கு வந்த நோய்க்கு
நான் அல்லவா வலியை
அனுபவிக்கிறேன்.................

Thursday, February 25, 2010

தாய்மை

தோளில் புத்தகபை
கையில் உணவு பை
கருவில் சுமந்தது போதாதென்று
தோளிலும் சுமக்கும்
தாய்மை...........................