வெள்ளி, 2 அக்டோபர், 2015

celebrating 24th anniversary with Saidai Damu

இயற்கை விரும்பி நான்
மின்சார உபகரணங்களே பிரியமுனக்கு

மழையின் காதலி நான்
நனைவதே ஆகாதுனக்கு

கமலின் ரசிகை நான்
படமே பிடிக்காதுனக்கு

சைவம் தான் பிடித்தமெனக்கு
அசைவம் இல்லாம உண்ண முடியாதுனக்கு

பயணங்கள் மீது காதலெனக்கு
வீடு தான் சொர்க்கமுனக்கு

இதயத்தின் வழியே யோசிப்பவள் நான்
மூளையின் சொல்லே  பிரதானம் உனக்கு

கோவம் உனது ஆயுதம்
மௌனமே எனது கேடயம்

அன்பில் ஆர்பரிக்கும் கடல் நீ
நதியின்  நிதானமெனக்கு

உணர்வுகள் வேறுபட்டாலும்
அன்பால் இணைந்திருக்கிறோம்

உன் உலகம் நானென
என் உலகம் நீயென .....




செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 7}2013 மீள் பதிவு 


       இரண்டாம் உலகப்போருக்குப் பின்  கேப் டவுனில் மக்கள் தொகை அதிகமாகி  இடப்பற்றாகுறை ஏற்பட்டதால் 196ஏக்கர் அளவில் கடல் நீரை பின்னுக்கு தள்ளி நிலமாக்கி உள்ளனர்.கேப் டவுனில் இருந்து வோர்செஸ்டேர் என்னும் செல்லும் பாதையை இரு வழியாக பிரித்து , மலையை சுற்றி இயற்கையை ரசித்து கொண்டே செல்ல ஒரு பாதையும்,மலையை குடைந்து நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்க பாதையும் அமைத்துள்ளனர் ....நாங்கள் சுரங்க பாதையில் பயணிக்க முடிவு செய்தோம்... பாதை  முழுக்க வெளிச்சமும், ஆபத்து நேரத்தில் தப்பிக்க அவசர வழியும் ஏற்படுத்தி உள்ளனர்  ,.வழி எங்கும் ஒயின் தயாரிக்கும் இடங்கள் உள்ளது ..எல்லோருக்கும் இலவசமாக ருசிப்பதற்க்கு ஒயின் கொடுகிக்றார்கள்..அடுத்து கேப் பாயிண்ட் என்னும் இடம் சென்றோம் ..வரலாறு பாடத்தில் நாம் படித்த வாஸ்கோடகாமா என்னும் போர்த்துகீசிய மாலுமி கண்டுபிடித்த நன்னம்பிக்கை முனை என்னும் இடம் இது தான்..இந்தியாவை கண்டறிய வந்த அவருக்குஇந்த முனை  நம்பிக்கையை ஏற்படுத்தியதால் இந்த பெயர் வந்தது.. பழங்கால கல் படிகட்டுகள்,கலங்கரை விளக்கம்,மூன்று பக்கமும் கடல் என அழகோடு மிளிர்கிறது நன்னம்பிக்கை முனை..அடுத்து நாங்கள்  காங்கோ வைல்ட் லைப் ரேஞ்சு போனோம்.ஆப்ரிக்கா நாட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகை மிக கொடுமையான விஷம் கொண்ட பாம்புகள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளன, வெள்ளை சிங்கம்,புலி,சிறுத்தை வகைகள் உள்ளன.அடுத்து ஆஸ்ட்ரிச் தலைநகரம் என அழைக்கப்படும் "அவுட்ஷர்ம்"   என்னும் இடத்திற்கு சென்றோம் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடம் ஆகையால் குளிர் மிக அதிகமாக உள்ளது..வெள்ளைகார பெண்மணிகள் சமையல் செய்கிறார்கள் கறுப்பர் இன மக்கள் மற்ற வேலைகளை செய்கிறார்கள்.பீப்,செம்மறி ஆடு,தான் முக்கிய உணவு ,சிக்கன் கறியும் பச்சையாக இருக்கிறது.பிரட் மற்றும் பழம் மட்டுமே பல நேரங்களில் எங்களது உணவாக இருந்தது ...நன்றாக உண்ணும் பழக்கம் உள்ள எங்களுக்கு உணவு பெரும் பிரச்சனையாக இருந்தது 

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

   பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6} மீள்பதிவு

                     தென்ஆப்ரிகாவின் பார்லிமென்ட் பார்த்தோம்....அதன் அருகில் டச்சுகாரர்கள் கம்பெனி வைத்திருந்த போது உருவாக்கிய கார்டன் தற்போது  கம்பெனி கார்டன் என அழைக்கப்பட்டு இன்றும் பல வகையான பழமைமிக்க மர,செடி வகைகளுடன் பராமரிக்கபடுகிறது.....1968 ல் டச்சுகாரர்கள் காலத்தில் இந்தியா மற்றும் மலேஷியாவில் இருந்து தென்னாப்ரிக்கா சென்று குடியேறியவர்கள் கட்டிய வீடுகள் இன்றும் பாதுகாக்கபடுகிறது ..அவர்களின் முதல் துறைமுகமாகிய   castle of good hope பார்த்தோம் ..அங்கே ஆங்கிலேயர்கள், டச்சு,மற்றும் அவர்களை ஆண்டவர்கள் ஏற்றிய கொடி கம்பங்கள் மட்டும் கொடிகள் இன்றி  இருக்கிறது ..1994 இல் திரு.நெல்சன் மண்டேலா அவர்கள் ஏற்றிய அந்நாட்டின்  புதிய கொடி பறக்கிறது..அங்கிருந்து houtbay என்னும் இடத்திற்கு போனோம் மூன்று பக்கமும் மலைகள் சூழ நடுவில் கடல்.... இதுவரை பார்த்திராத வகையில் கொள்ளை கொள்ளும் அழகுடன் மனதை மயக்குகிறது.hout என்பது வுட் என்னும் அர்த்தம் .தேக்கு மரங்கள் நிறைந்துள்ள இடம் என்பதால் அந்த பெயர் வைத்துள்ளனர்...அங்கிருந்து அடுத்து boulders பீச் சென்றோம்,ஆப்பிரிக்காவில் வேறெங்கும் காண முடியாத .அண்டார்டிகா வில் இருந்து இங்கு பரவிய பென்குயின் இங்குள்ள கடற்கரையின் ஒரு பகுதியில் பரவி இருக்கிறது ..அங்கிருந்து கார்டன் ரூட் என்னும் வழயில் பயணக் செய்தோம் பெயருக்கு ஏற்றார் போல் அவ்வளவு அழகான பாதை, பயணத்தில் ஒரு சலிப்பான நேரம் கூட வருவது இல்லை ..தோட்டங்களும் பசுமையான மலை முகடுகளும் ,சில்லென்ற சீதோஷனமும் ஐநூறு கிலோ மீட்டர் பயணம் செய்ததே தெரியாமல் கடந்து வந்தோம்...அழகாய் கோட் போட்டு கொண்டு நம் கார் அருகில் வரும் பிச்சைகாரர்கள் குட்மார்னிங் சொல்லி உடனே நகர்ந்து சென்று விடுகின்றனர் ....நாம் விரும்பினால் அழைத்து கொடுக்கலாம்...மலைசரிவு ஏற்ப்படாமல் இருக்க மலைப்பாதையில் தூண்கள் அமைத்து அரண் அமைத்து உள்ளனர் ...மக்கள் பாதுகாப்பில் மிக அதிக அக்கறை கொண்டுள்ளனர்...டோல்கேட்டில் பண பரிவர்த்தனை கிடையாது எல்லோரும் கார்டு தேய்த்து கொண்டு போக வேண்டியது தான் ......

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

மகனின் பள்ளியில் இருந்து 10 நாள் பயணம் தொடங்கினோம் ...முதலில் கேப்டவுன் போனோம்..சவுத் ஆப்ரிக்காவின் மூன்று தலைநகரங்களில் ஒன்றான கேப்டவுன் மிக அழகான ஊர் ...மிக சுத்தமான ஊரும் கூட ...நகரத்தில் நுழைந்ததும் முதலில் கண்ணில் படுவது டேபிள் மௌன்டென் என்னும் மலை ..அழகான மலை மேல் மேகத்தை வைத்து போல் இருக்கிறது,முதலில் வாட்டர் பிரண்ட் என்னும் இடத்திற்கு சென்றோம் ,அங்கு தான் ஆர்பர் உள்ளது, துறைமுகம் போல் இல்லாமல் பொழுதுபோக்கு இடம் போல் உள்ளது..மிக பெரிய ராட்டினம் ,குழந்தைகள் விளையாட்டு இடம், ஹோட்டல்கள் இருக்கிறது  ...டச்சுக்காரர்கள் பயணித்து  வந்த கப்பலை பார்வையிட வைத்திருக்கிறார்கள் ..இங்கே ராமேஸ்வரத்தில்   தூக்கும் பாலம் உள்ளது போல் அங்கு நகரும் பாலம் அமைத்து இருக்கிறார்கள் ..படகு வரும் நேரத்தில் நகர்ந்து வழி விடுகிறது .கடந்ததும் திரும்ப பழைய இடத்திற்கு வந்து பொருந்தி விடுகிறது..அடுத்து டேபிள் மௌன்டன் மேல் கேபிள் கார் மூலம் சென்றோம்...அந்த இடம் பல நேரங்களில் சீதோஷ்ண நிலையின் காரணமாக போக முடியாமல் போய் விடும்...நல்ல வேலையாக நாங்கள் போன போது எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது ... அருமையான அனுபவம் 1067 அடி உயரத்தில் சில்லென்ற மேகத்தின் ஊடே நடந்து சென்று மேலிருந்து கேப்டவுன் அழகை பார்க்க இரண்டு கண்கள் போதாது ...மலை,கடல் ,ஊர் மூன்றும் சேர்ந்து பார்க்கும் போது நிச்சயம் இயற்கையின் அதிசயத்தை வியக்காமல் இருக்க முடிவதில்லை ..

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

பால்யம்  கடக்கவில்லையோ என 

கொஞ்ச வைக்கிறாள் குழந்தையாய் 

 கைப்பொதிந்து பின்பற்றி நடக்கையில் 

சிறுமியகிறாள் சில நேரங்களில்

 காளையினரின் கண் படுகையில்

 குமரியென எண்ணிட வைக்கிறாள் 

தோள் அணைத்து அந்தரங்கம் பகிர்வதில் 

 தோழியகிறாள் பல பொழுதுகளில் 

 நாகரீகம்  கற்று கொடுத்து பழக 

சொல்வதில் ஆசிரியை ஆகிறாள் 

குட்டு வைத்து தவறை திருத்துகையில்

 சகோதரியகிறாள் சில பொழுகளில்  

அன்பை பொழிந்து மடி சாய்த்து கொள்வதில்

 அன்னையும் ஆகிறாள் இந்த பட்டாம்பூச்சி 

என் வாழ்வில் வண்ணங்கள் சேர்க்க வந்த 

இந்த தேவதையின் பிறந்தநாள் இன்று........

 

சனி, 1 ஆகஸ்ட், 2015

நண்பர்கள் தோழிகள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். ..
          19 வயதில் திருமணம் ஆனதுமுதல் கணவர் பிறகு பிள்ளைகள் என்பதை தவிர வேறு எதுவுமே தெரியாமல்
இருபது வருடங்களாக அடுப்படியே உலகமாகி  இருந்த எனக்குள்ளும் எழத முடியும் என்கிற தன்னம்பிக்கையயும் எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தையும் கொடுத்தது நட்புக்களாகிய உங்களது பாராட்டுகளும் விமர்சனங்களும் தான்....உங்கள் மூலமாக தான் என் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி சிறிது  நகர்ந்திருக்கிறேன்....நன்றி நட்புக்களே....🌷Happy friendship day my dear friends✌👑🎁💃😁😇😻🙋🙈

சனி, 18 ஜூலை, 2015

தோள் தாண்டி வளர்ந்தாலும் 
கடல் தாண்டி தனியே 
இருந்தவன் ஆனாலும் 
விளையாடி களைத்த குழந்தை 
தாய்மடி தேடி வருவதை போல் 
தேடி வருவதில் குழந்தை அவன்.....

என்னை பசித்திருக்க விடாதவன்  
பாதை கடக்கையில் 
கை பிடித்து கடப்பவன்
புகுந்த வீட்டினில் மகளின்
முகம் பார்த்து சூழலறியும்
தகப்பன் போல் என் 
முகம் பார்த்து மனமறிவதில்
என் தகப்பனவன்......... 

சனி, 11 ஜூலை, 2015

பயணத்தின் பதிவுகள் .....திருப்பதி

எப்போதும் காலை வேளையில் மட்டுமே பயணப்பட்டு இருந்த திருப்பதிக்கு இந்த முறை இரவில் பயணம் மேற்கொண்டோம் ...முன்பெலாம் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியெங்கும்  அடர்த்தியான மரங்கள் இருபக்கமும் நிறைந்து இருக்கும் மரங்களின் ஊடே பயணிப்பது அருமையாக இருக்கும்  ..இப்போது மரங்கள்  எல்லாம் வெட்டப்பட்டு சாலை மிக பெரியதாக ஆகி விட்டது ..ஆனால் வறண்ட சாலையில் பயணிப்பது தான் சலிப்பாக இருக்கிறது... மலை மேல் ஏறும் போது இரவு பத்து ஆகி விட்டது ...செக் போஸ்டில் தீவிரவாதி போலவே பரிசோதனை செய்கின்றனர் ..மேல் ஏறி செல்லும் போது வானத்தில் நட்சத்திரங்கள் குறைவாக இருந்தாலும் கீழ நகரத்தின் மின்விளக்குகளின் ஒளி மிக அழகாக நட்சத்திரங்கள் கீழ கொட்டி கிடப்பது போல் அவ்வளவு அழகு...,அதை பார்க்கவே மீண்டும் ஒரு பயணம் செல்லலாம்..நாங்கள் மேல் சென்று சேர்வதற்கு வெகுநேரம் ஆகி விட்டதால் அங்கு ஹோட்டல் எதுவும் இல்லை...தெருவோர கடைகள் மட்டுமே இருந்தது...அதெற்கென ஒரு இடம் ஒதுக்கி தெருவெங்கும் பாய் விரித்து வைத்துள்ளனர்..இரவு முழுவதும் சுட சுட உணவு கிடைக்கிறது....தெருவில் உண்பதும் ஒருவித புது அனுபவமாக இருந்தது ...காலை தரிசனம் செய்ய சென்றோம் ...அன்று கூட்டம் குறைவாக தான் இருந்தது ஆனாலும் தேவை இல்லாமல் இரண்டு மணி நேரம் காக்க வைத்து பின்பு கூட்டம் சேர்ந்ததும் நெருக்கடியாக அனுப்புகின்றனர்....கடவுளுக்கு எதற்கு விளம்பரம் என்றே தெரியவில்லை ..ஆனாலும் கருவறையின் முன் ஜருகண்டி ஜருகண்டி என்று பிடித்து தள்ளுவது குறைந்திருகிறது ...பொறுமையாக நின்று பார்த்து வரலாம்... எல்லா இடங்களைம் மிக சுத்தமாக பரமரிகின்றனர் ....சூடான பால் உணவு தண்ணீர் எல்லாம் இலவசமாகவே எல்லா இடங்களிலும் தருகின்றனர்...ஒவ்வொரு முறையும் திருப்பதி புது அனுபவத்தை தருகின்றது....

செவ்வாய், 16 ஜூன், 2015

.
               ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை 
               சான்றோன் எனக்கேட்ட தாய் ....  

              என் மகன் ...மழலை பருவத்தில்  அவனது ஆச்சி விளையாட்டாய் சொன்ன பைலட் ஆகணும் என்கிற வார்த்தையை துரத்தி பிடித்தவன்....சிறுவயதில் யார் கேட்டாலும் நான் பைலட் ஆக போகிறேன் என்பதே அவனது  பதிலாக இருக்கும்...வளர் பருவத்தில் கூட அவனது சிந்தனையை சிதற விட்டதோ மாற்றியதோ  இல்லை ...அவனுகென்று ஆசை வைத்து கொள்ளாமல் வற்புறுத்தலுமின்றி  எங்கள் கனவுகளை தன கனவாக மாற்றி துரத்தியவன்  ....கண்ணுக்குள் வைத்து வளர்த்த மகன் பக்கத்து இடங்களுக்கு கூட தனியே அனுப்பியது இல்லை அப்படிப்பட்டவனை முதன் முறையாக பிரிந்து வெளிநாடு அனுப்பி வைத்து கலங்கி நின்ற எங்களை தேற்றி சென்றவன்....தடைகளை தாண்டி தனிமையில் தடுமாறாமல்  தனது படிப்பை  வெற்றிகரமாக முடித்து  கமர்ஷியல் பைலட் (commercial pilot )பட்டம் பெற்று திரும்பும் எனது மகனை மனதார வாழ்த்துங்கள் தோழர் தோழிகளே........ .....

வெள்ளி, 12 ஜூன், 2015

சில பயணங்களும் சில நினைவுகளும் ....(.2007..ஆக்சிடென்ட் அனுபவம் )
நண்பர்கள் இருவரின் குடும்பத்துடன் ஏற்காடு மலைக்கு டெம்போ டிராவலர் வண்டியி டூர் சென்று இருந்தோம் ... ... இரண்டு நாட்கள் மிக சந்தோஷமாக முடிந்தது ... மூன்றாம் நாள் மலையில் இருந்து இறங்கி கொண்டிருந்தோம்...நான்காவது வளைவின் போது டயரில் இருந்து வாடை வர ஆரம்பிச்சது ..அதனால் வேகம் குறைந்த வண்டி சற்று மெதுவாகவே வளைவில் இறங்க ஆரம்பித்தது...மேலும் சில வளைவுகளை கடந்ததும் கண்ட்ரோல் இழந்த வாகனம் வளைவில் வேகமாக இறங்க ஆரம்பித்தது ..டிரைவர் பிரேக் பிடிக்க முடியாமல் இடது பக்கம் மலையின் மீது மோதினார்....வாகனம் வலது புறமாக சாய்ந்து விழுந்து பள்ளத்தின் நோக்கி தேய்த்து கொண்டே போனது தடுப்பு சுவற்றின் மீது மோதிய வாகனம் பள்ளத்தில் விழாமல் நின்றது...(நல்லவேளை அந்த தடுப்பு சுவர் கலப்படம் இல்லாத சிமென்டில் கட்டியது போலிருகிறது) ...எல்லோருக்கும் நல்ல அடி ...வண்டி சாய்ந்தவுடன் நினைவில் நின்றது ....நமக்கா ஆக்சிடன்ட் என்பதும் அடுத்தது சாக போகிறோம் என்ற நினைவு ........நல்ல வேலை அனைவரும் உயிர் பிழைத்தோம் ......
பின் சேலத்தில் வந்து ட்ரீட்மென்ட் எடுத்து பின் வீடு வந்து சேர்ந்தோம்...மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த அந்த டூர் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது ....
பின் சேலத்தில் வந்து ட்ரீட்மென்ட் எடுத்து பின் வீடு வந்து சேர்ந்தோம்...மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த அந்த டூர் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது ....

புதன், 10 ஜூன், 2015

வியாழன், 16 ஏப்ரல், 2015

பயணங்களின் பதிவுகள் (கொல்லி மலை)

பயணங்களின் பதிவுகள் (கொல்லி மலை)

      பயணம் எப்போதும் நம்மை புத்துணர்ச்சி கொள்ள வைக்கும்.வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு  வருடம் ஒரு முறையாவது  பயணம் சென்று வருவது வாழ்க்கையை புதியதாய் உணர வைக்கும் ...அதிக தூரம் உள்ள நாடுகளுக்கு தான் போக வேண்டும் என்பதில்லை..நமக்கு மிக அருகிலேயே நாம் பார்காமல் தவற விட்ட பல அருமையான இடங்கள் உள்ளது...அப்படி நாங்கள் வெகுநாளாய் தவற விட்டிருந்த கொல்லிமலை பார்க்க கிளம்பினோம் ...மலை மேல் ஏறும் வழி சற்று குறுகலாகவே  இருக்கிறது எதிரில் வாகனம் வரும் போது மிக கவனமாக செல்ல வேண்டும்...72 கொண்டைஊசி வளைவுகள் கொண்டது இந்த மலை ...ஏறும் போதினில பச்சை மூலிகையின் வாடையும்  குளிரும் வரவேற்க்கும்...ஏறியவுடன் சோளக்காடு என்ற ஊர் வருகிறது..அங்கு தான் கடைகள் இருக்கும்...அங்கிருந்து 3 கிலோமீட்டர் போனதும் ரிசார்ட்ஸ் இருக்கிறது...நாங்கள் P.A.ரிசார்ட்ஸ் என்னும் இடத்தில் தங்கினோம்..மிளகு கொடியும் பட்டை மரங்கள்,தைல மரங்கள்  சூழ்ந்து அழகாய் காட்சியளிக்கும்  அதில் சுத்தம் என்பது மட்டும் இல்லை...மிக குளிராக இருக்கும் என்பதால் அதற்கேற்ற உடைகலை  எடுத்து செல்வது நல்லது ....அரசு மூலிகை பண்ணை ,தற்கொலை முனை,அய்யாறு அருவி,கொல்லிப்பாவை கோவில்,சீக்குப்பாறை,அறப்பாலீஸ்வரர் ஆலயம் ஆகாய கங்கை படகு சவாரி ,வீயு பாயிண்ட்   என பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளது...ஓவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தாலும் பயணம் மிகவும் ரசிக்கும் படி உள்ளது...மேகங்களின் அடர்த்தியுள் நாம் பயணிப்பது அருமையாக இருக்கும்...வரும் வழியில் வீட்டிற்கு வேண்டிய தானியங்கள் அனைத்தையும் வாங்கி வரலாம்...மலை தேன் கிடைக்கும் ..பச்சை மிளகு பறித்து வரலாம்,பிள்ளைகளும் இந்த பயணத்தை மிகவும் ரசிப்பார்கள்...மொத்தத்தில் கொல்லிமலை பயணம் நமக்குள் ஏகாந்தமான மன அமைதியை தரும் இடமாகும்......











புதன், 4 பிப்ரவரி, 2015

50 வது பிறந்தநாள் கலாட்டா.....

          பிறந்தநாள் எல்லோருக்கும் எப்போதும் வருவது தானே அதை என்ன கொண்டாடுவது என்பது என் கணவரின் கருத்து....திருமணம் ஆனா வருடத்தில் இருந்தே அவரது பிறந்தநாள் அன்று பரிசு குடுத்து அவரை அசத்துவது என் வழக்கம்...அவர் அதை பற்றி திட்டினாலும்  பெரிதாக எடுத்து கொள்வது இல்லை ...பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவர்களும் அதையே பின்பற்றினார்கள்...இந்த வருடம் கணவரின்  50 வது பிறந்தநாள்... எப்போதும் போல முதலிலேயே சொல்லி விட்டார் பரிசு எதுவும் வாங்க கூடாது என்று ...நாங்களும் சரி சரி என்று தலையை ஆட்டி கொண்டோம்...இந்த பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட நானும் பிள்ளைகளும் ரகசிய திட்டம் தீட்டினோம்...முதலில் ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஹால் புக் பண்ணினோம்.. அவருக்கு தெரியாமல் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் என 50 பேர்க்கு  அழைப்பு விடுத்தோம்...7 மணிக்கு எல்லோரும் பார்ட்டி ஹாலில் ஆஜராகி விட வேண்டும் என்றோம்.இந்த விஷயம் எந்த காரணம் கொண்டும் அவருக்கு தெரிந்து விட கூடாது என்பதை மட்டும் எல்லோருக்கும் சொல்லி விட்டோம்....எல்லோரும் வந்ததை உறுதி படுத்தி கொண்ட பிறகு வழக்கம்  போல டின்னர்க்கு போகலாம் என்று அவரை அழைத்து கொண்டு கிளம்பினோம்...ஹோட்டல் அறையில் நுழைந்தவுடன் அனைவரும் ஒன்றாக  சேர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள் ...சில நிமிடங்களுக்கு அவருக்கு எதுவுமே புரியவில்லை ...மிக பெரிய இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்ற அவரை தேற்றவே சிறிது நேரம் பிடித்தது...சர்ப்ரைஸ் எல்லோருக்கும் பிடித்த விஷயம் தானே...அவரும் அதை வெகுவாக ரசித்தார்...அவருக்கு  மறக்க முடியாத 50 வது









பிறந்தநாள் கொண்டாட்டத்தை பரிசாக கொடுத்ததில் எனக்கும் பிள்ளைகளுக்கும் மிக்க மகிழ்ச்சி ......(கலந்து கொண்ட உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி )