Tuesday, January 3, 2017

கோடிட்ட இடங்கள்......

வாழ்கை சில வேளைகளில்
வெறுமையென சில கோடுகளை
இட்டு செல்கையில்

கோடிட்ட இடங்களை
சுவாரசியம் கொண்டு நிரப்புகிறது
உன்னை பற்றிய நினைவுகள் .......

Friday, December 2, 2016

என் மடிதனை
நனைக்கும் உன்
கண்ணீரின் வெம்மை சுடுகிறது.....
 ஆயினும் அசைவின்றி
காத்திருக்கிறேன்
பரசுராமரின் தூக்கம் கலைய
காத்திருந்த கர்ணனை
போல...
உன் துக்கம் கரையவே .........

Monday, November 14, 2016

தானென்ற மமதை 

சிரித்துமழுப்பும் உன் உதடுகளில்
அமர்ந்திருக்கிறது அது ....
 கையசைத்து பேசும் உன் விரல்களின் 
இடுக்கினிலிருந்து  பார்த்து சிரிக்கிறது.....
தொலைபேசியின் வழியினில் 
காதுகளில் கொக்கறிகிறது.....
யாரிடமோ பேசுவது போல் பார்க்கும் உன்
கண்களின் ஓரத்தில் பதுங்கியிருக்கிறது அது .....
உறவுகளின் மத்தியில் இருந்து 
உன் கால்களை பற்றி இழுத்து 
செல்கிறது அது......
 
என்றேனும் ஒருநாள் 
நீயாய் அதை கொல்லலாம்
இல்லை தானேனும் அது மரிக்கலாம் 
அன்பெனும் அகம் திறக்கும் அவ்வேளை 
உனை சூழ்ந்திருக்கும் ஒரு தன்னந்தனி தீவு .....

Wednesday, June 29, 2016

பெண்ணானவன்

பெண் ஒரு பறவை, சிறகுகள் உண்டு
இத்தனை உயரத்தில் இத்தனை வேகத்தில்
பறந்திட ஆணையுண்டு .....

பெண் ஒரு இயந்திரம்
இவ்வளவு வேகத்தில் இவ்வளவு வேலைகளை
முடித்திட உத்தரவுண்டு ......

பெண் ஒரு கைதி
சுதந்திரமாய் உள்ளேயே சுற்றிடவும்
இட்ட வேலையை செவ்வனே முடித்திடவும்
வரைகளுண்டு .....

பெண் ஒரு வாகனம்
வேகங்களை கட்டுக்குள் வைத்து
நினைத்த நேரத்தில் ஓட்டத்தை
தடுத்திட கட்டளைகளுண்டு ......

பெண் ஒரு பட்டாம்பூச்சி
அவளை கூட்டுப்புழுவென மாற்றிட
ஒழுக்கமென்னும்  ஆயுதமெடுக்கும்  மனங்களுண்டு.....

கட்டுகள் தளர்த்தி தன் சுயம்
தேடும் பெண்ணை
அன்பை காட்டி ஆளமுடியா ஆண்மகனவன் ....

பெண்ணுடலை வெளிச்சமிட்டு காட்டி
 சிறகொடித்து போடுமவன் ஆணல்ல
ஆணென்ற போர்வையில் வாழும் பெண்ணானவன் .......

Friday, April 15, 2016

கடவுள் இருக்கிறார்

அப்பாவின் சேவகியான அம்மாவின்
ஆன்மீக பயணங்களில் விடுதலையென ...
.
ஓடி போன பிள்ள திரும்பி வருவானென
காசு முடிச்சிடும் அத்தையின் நம்பிக்கையாக.....

அக்காவின் மாமாவின் காதலில்
பூ போடலில் தேர்ந்தெடுக்கப்படும் பூவாக  .....

அடங்கா காளையென திரியும்
அண்ணனிடம் அம்மா வாங்கும் சத்தியமாக .....

வாசல் தாண்டுமுன் ஆசிர்வதிக்கும்
ஆசிர்வதிக்கும் ஆச்சியின் கைகளில் திருநீராக .....

பரம்பரை செழித்திட
ஊர்முழுக்க அன்னமிடும் அப்பாவின் தர்மமென .....

கடவுள் இருக்கிறார்
அன்பெனும் வடிவத்தில் .....


Thursday, April 16, 2015

பயணங்களின் பதிவுகள் (கொல்லி மலை)

பயணங்களின் பதிவுகள் (கொல்லி மலை)

      பயணம் எப்போதும் நம்மை புத்துணர்ச்சி கொள்ள வைக்கும்.வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு  வருடம் ஒரு முறையாவது  பயணம் சென்று வருவது வாழ்க்கையை புதியதாய் உணர வைக்கும் ...அதிக தூரம் உள்ள நாடுகளுக்கு தான் போக வேண்டும் என்பதில்லை..நமக்கு மிக அருகிலேயே நாம் பார்காமல் தவற விட்ட பல அருமையான இடங்கள் உள்ளது...அப்படி நாங்கள் வெகுநாளாய் தவற விட்டிருந்த கொல்லிமலை பார்க்க கிளம்பினோம் ...மலை மேல் ஏறும் வழி சற்று குறுகலாகவே  இருக்கிறது எதிரில் வாகனம் வரும் போது மிக கவனமாக செல்ல வேண்டும்...72 கொண்டைஊசி வளைவுகள் கொண்டது இந்த மலை ...ஏறும் போதினில பச்சை மூலிகையின் வாடையும்  குளிரும் வரவேற்க்கும்...ஏறியவுடன் சோளக்காடு என்ற ஊர் வருகிறது..அங்கு தான் கடைகள் இருக்கும்...அங்கிருந்து 3 கிலோமீட்டர் போனதும் ரிசார்ட்ஸ் இருக்கிறது...நாங்கள் P.A.ரிசார்ட்ஸ் என்னும் இடத்தில் தங்கினோம்..மிளகு கொடியும் பட்டை மரங்கள்,தைல மரங்கள்  சூழ்ந்து அழகாய் காட்சியளிக்கும்  அதில் சுத்தம் என்பது மட்டும் இல்லை...மிக குளிராக இருக்கும் என்பதால் அதற்கேற்ற உடைகலை  எடுத்து செல்வது நல்லது ....அரசு மூலிகை பண்ணை ,தற்கொலை முனை,அய்யாறு அருவி,கொல்லிப்பாவை கோவில்,சீக்குப்பாறை,அறப்பாலீஸ்வரர் ஆலயம் ஆகாய கங்கை படகு சவாரி ,வீயு பாயிண்ட்   என பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளது...ஓவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தாலும் பயணம் மிகவும் ரசிக்கும் படி உள்ளது...மேகங்களின் அடர்த்தியுள் நாம் பயணிப்பது அருமையாக இருக்கும்...வரும் வழியில் வீட்டிற்கு வேண்டிய தானியங்கள் அனைத்தையும் வாங்கி வரலாம்...மலை தேன் கிடைக்கும் ..பச்சை மிளகு பறித்து வரலாம்,பிள்ளைகளும் இந்த பயணத்தை மிகவும் ரசிப்பார்கள்...மொத்தத்தில் கொல்லிமலை பயணம் நமக்குள் ஏகாந்தமான மன அமைதியை தரும் இடமாகும்......Wednesday, February 4, 2015

50 வது பிறந்தநாள் கலாட்டா.....

          பிறந்தநாள் எல்லோருக்கும் எப்போதும் வருவது தானே அதை என்ன கொண்டாடுவது என்பது என் கணவரின் கருத்து....திருமணம் ஆனா வருடத்தில் இருந்தே அவரது பிறந்தநாள் அன்று பரிசு குடுத்து அவரை அசத்துவது என் வழக்கம்...அவர் அதை பற்றி திட்டினாலும்  பெரிதாக எடுத்து கொள்வது இல்லை ...பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவர்களும் அதையே பின்பற்றினார்கள்...இந்த வருடம் கணவரின்  50 வது பிறந்தநாள்... எப்போதும் போல முதலிலேயே சொல்லி விட்டார் பரிசு எதுவும் வாங்க கூடாது என்று ...நாங்களும் சரி சரி என்று தலையை ஆட்டி கொண்டோம்...இந்த பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட நானும் பிள்ளைகளும் ரகசிய திட்டம் தீட்டினோம்...முதலில் ஹோட்டல் ஒன்றில் பார்ட்டி ஹால் புக் பண்ணினோம்.. அவருக்கு தெரியாமல் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் என 50 பேர்க்கு  அழைப்பு விடுத்தோம்...7 மணிக்கு எல்லோரும் பார்ட்டி ஹாலில் ஆஜராகி விட வேண்டும் என்றோம்.இந்த விஷயம் எந்த காரணம் கொண்டும் அவருக்கு தெரிந்து விட கூடாது என்பதை மட்டும் எல்லோருக்கும் சொல்லி விட்டோம்....எல்லோரும் வந்ததை உறுதி படுத்தி கொண்ட பிறகு வழக்கம்  போல டின்னர்க்கு போகலாம் என்று அவரை அழைத்து கொண்டு கிளம்பினோம்...ஹோட்டல் அறையில் நுழைந்தவுடன் அனைவரும் ஒன்றாக  சேர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்கள் ...சில நிமிடங்களுக்கு அவருக்கு எதுவுமே புரியவில்லை ...மிக பெரிய இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்ற அவரை தேற்றவே சிறிது நேரம் பிடித்தது...சர்ப்ரைஸ் எல்லோருக்கும் பிடித்த விஷயம் தானே...அவரும் அதை வெகுவாக ரசித்தார்...அவருக்கு  மறக்க முடியாத 50 வது

பிறந்தநாள் கொண்டாட்டத்தை பரிசாக கொடுத்ததில் எனக்கும் பிள்ளைகளுக்கும் மிக்க மகிழ்ச்சி ......(கலந்து கொண்ட உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி )