வியாழன், 29 ஏப்ரல், 2010

இதய வாசல்

இதய வாசலை
மூடி விட்டதால் என்னை
நுழைய விடாமல்
தடுக்கலாம் என்று நினைக்காதே.....
உன் இதய வாசல் வழியே
வந்து செல்லும் நினைவலைகள்
அல்ல நான்.....
உன் இதயத்தை
துடிக்க வைக்கும் துடிப்பலைகள் நான்......

கண்ணீர்

உதடுகள் உச்சரிக்காத
உள்ளத்து துயரங்களை
உரியவருக்கு உணர்த்திட
உருண்டோடி வரும் எழுதுகோல்

கதை

தான் படைத்த கதைகளை
சுமந்து கொண்டு
படவுலகில் அலைந்து தோற்று
களைத்து வீடு திரும்பிய
காதல் கணவனை ....
தோளோடு அணைத்து
தன்னம்பிக்கை ஊட்டி
ஆறுதலோடு தட்டி தூங்க வைத்த
காதல் மனைவி ......
இரவு முழுவதும் விழித்திருந்து
கண்ணீரோடு கதை புனைகிறாள்
மறுநாள் காலை வரப்போகும்
மளிகைக்கடை காரனுக்கும்
பால்காரனுக்கும் சொல்ல வேண்டிய பதில்களை

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பயணங்கள் ..

இலக்கில்லாத பயணங்கள்
மிகவும் இனிமையானது
நேரத்தோடு போராட
வேண்டிய அவசியம் இல்லை
எண்ணங்களை குவித்து
வேலைகளை முடிக்க
தேவையில்லை
எங்கெங்கோ சுற்றி திரியும்
எண்ண அலைகளின் பின்
நாமும் கவலை இல்லாமல்
சுற்றி களிக்கலாம்
இலக்கில்லாத பயணங்களை
முயன்று பாருங்கள்
இன்பம் இதுதான் என்று உணர்வீர்கள் .....

உரிமை

ஆண் பெண் நட்பு புனிதம்
நட்பு கொள்வது நமது உரிமை ...
திருமணத்திற்கு முன்
நீ பேசிய பேச்சுக்கள் இவை
ஆனால் இவையெல்லாம்
உனக்கு மட்டுமே
உரிமை என்பதை மட்டும்
சொல்ல மறந்தாயோ நீ?

புதன், 14 ஏப்ரல், 2010

திருப்தி .

ஆடுகளின் மேல் அமரும்
காக்கைகள் எழுந்து பறந்து
எருது மேல் அமர்கிறது
ஆனந்தம் இல்லையென
அந்தரத்தில் உயர்ந்து
மின்சார கம்பியில்
அமர்ந்து தீய்கிறது
சில மனங்களும் அதுபோல
எதிலும் திருப்தி கொள்ளாமல்
துன்பத்தில் மாட்டி தீய்கிறது ....

பூக்கள்

ஒரே இடத்தில்
ஆயிரம் பூக்கள் பார்த்தேன்
பள்ளி முடிந்ததும் வாசலில் .....

முரண்பாடுகள்

முரணான அறிவுரைகள் புகுந்த வீட்டை நேசி
கணவன் சொல் கேள்
பிறந்த வீடு பெருமை பேசாதே
என்று மகளுக்கும் ...
மாமியார் வீட்டுக்கு
அடிக்கடி போகாதே
மனைவி கைபாவையாக ஆகாதே
பிறந்த வீட்டை மறக்காதே
என்று மகனுக்கும் ........

ஞாபகம்

தீயில் இட்டு
சுட்டெரித்தாலும் பின்
மீண்டெழுந்து புது
வேகத்தோடு கிளம்பும்
பீனிக்ஸ் பறவை போன்றது
என்னுள்ளன உன் நினைவுகள்
நான் தீயிலிட்டு கொளுத்தினாலும்
புது வேகத்தோடு கிளர்ந்தெழுகின்றது ....

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

பொத்தல்

கடை கடையாய் ஏறி இறங்கி
காதல் மனைவிக்கு
பிடித்த நிறத்தில்
புடவை வாங்கி பரிசளித்தவன்
கழற்றிய சட்டையின் உள்
பனியனில் ஆயிரம் பொத்தல்கள்.......

சனி, 3 ஏப்ரல், 2010

நினைவுகள்

எத்தனையோ போரட்டங்கள்
எவ்வளவோ பிரச்சனைகள்
வாழ்கையில் நிற்க முடியாமல்
கடிகாரத்தோடு ஓட்டங்கள் ...
எவ்வளவு ஓடினாலும்
கண்ணில்படும் பழங்கால
தேக்கு மரப்பெட்டி தாத்தாவையும்
முதுகு சொரியும் குச்சி ஆச்சியையும்
தேக்கு கைத்தடி அப்பாவையும்
நினைவில் கொண்டு வர
தவறுவதில்லை...

சிக்கல்

சிறிது நெகிழ்வு
சிறிது குழைவு
கொஞ்சம் வளைவு
கொஞ்சம் நெளிவு
பயன்படுத்தினால்
சிக்கல்கள் தீர்ந்துவிடும்
நூல்கண்டிலும் வாழ்விலும் ....

குணம்

முப்பதாயிரம் கொடுத்து
மூஞ்சுறு போல் நாய் வாங்கி
நடு வீட்டில் வளர்த்து
அது எச்சிலையும் கழிவையும்
முகம் சுளிக்காம அள்ளி
பெருமையோடு காத்திடுவான்
உண்ணாம உறங்காம
கருவிலே உன்னை காத்து
பசியோட பாடுபட்டு
நீ வச்ச மிச்சமெல்லாம்
நாயை போல தின்னு
உன்னை பொன்னு போல
காத்து வளர்த்த
உன் அன்பு தாயை
எழுந்து போய் கழியலைன்னு
தனி குடிசையில படுக்க வச்சான்
நாகரீக உலகமையா
வெகு நாசமான உலகமையா........

மரணம்

மரணம்
உன்னை பாதிக்காத
உன்
சொந்த விஷயம் ......