திங்கள், 27 பிப்ரவரி, 2012

பறவையாய் இருந்த நான் ........

இணையாய் பறப்போமென்று இணைந்தோம்
திருமணத்தில் ....
பருந்தென நீ உயரும் போதெல்லாம்
ஊர்குருவியாய் வரையறுக்கப்பட்டது
என் எல்லைகள் ....
வெகு தூரங்களை நீ கடக்கும் போதெல்லாம்
அதில் பாதி தான் என் அளவென்றாய்....
சுதந்திரங்கள் என்பது உனக்கு மட்டும் சொந்தமாயின
என் கைகளுக்கு விலங்கிடப்பட்டு ....
நாட்கள் செல்ல செல்ல என் சிறகுகள் ஒவ்வொன்றாய்
பிடுங்கப்பட்டு நூல்களாய் கோர்க்கப்பட்டன....
நூல்கள் உன் கைகளில் சிறைபட்டு
பறவையாய் இருந்த நான் பட்டமானேன்....

வியாழன், 16 பிப்ரவரி, 2012

அழகோ அழகு .......

புதியதாய் பூத்த மலரின்
அழகை கண்டு ரசித்த நாளில்
இது தான் உலகிலேயே அழகென்று
எண்ணி வியந்தேன் ....

பௌர்ணமி நிலவின் ஒளி
விழுந்த கடல் அலைகளை
வெள்ளியின் உருகலாய்
பார்த்த அன்று இதுவன்றோ
அழகென்று சிலிர்தேன் ...

உச்சி மலையின் மீது
சில்லென்ற பனிகாற்றில்
மேக கூட்டத்தின் உள்
நடக்கையில் இதைவிட அழகுண்டா
என்று எண்ணி ரசித்தேன் ....

பார்த்து வியந்து சிலிர்த்து ரசித்த
காட்சிகளின் அழகெல்லாம் தோற்றது
இதழ் கடித்து நீ சிரித்த ஒற்றை சிரிப்பினில் .......