திங்கள், 30 டிசம்பர், 2019

பயணங்களின் பதிவுகள் (மும்பை )2018
எந்த டூர் கிளம்பினாலும் அதுல நேரடியா கோவில்களை சேர்க்காமல் அந்த இடத்திற்கு போனதும் பக்கத்துல இந்த கோயில் இருக்கு பார்த்துட்டு போய்டலாம்னு சொல்லி கூட்டிட்டு போய்டுவேன்.....வீட்டிலேயே சொன்னால் எடுத்ததுமே வேண்டாம்னு சொல்லிடுவாங்க பிள்ளைகளும் கணவரும்......இந்த முறை சீரடி போவதை முன்பே முடிவு செய்தே போனோம்...ஏன்னா இது மருமகள் விருப்பம்... ஆகையால் முதலிலேயே பிளான் பண்ணியாச்சு...காலையிலே கிளம்பிட்டோம் போகிற வழியில் பாதை கொஞ்சமும் சரியில்லை ....அதனால் மணி 11.30 மணி தாண்டி விட்டதால் ஆரத்தி தொடங்கி விட்டது .காத்திருக்கும் நேரத்தில் ஆரத்தி திரையிடுகிறார்கள் ,....தீபாவளிக்கு முந்தைய தினம் என்பதால் கூட்டமே இல்லாமல் மிக நிதானமாக பாபாவின் தரிசனம் பார்த்தோம் .....
... அங்கிருந்து வரும் வழியில் பக்கத்தில் தான் சனிசிக்னாபூர் எனும் சனீஸ்வரன் கோயில் என்றும் அதை பார்த்து விட்டு போகலாம் என்றும் சொன்னதுமே இன்னொரு கோயிலா என்று முகமே உம்மென்று மாறி விட்டது....இருந்தும் வேறு வழி இல்லை என்பதால் சரி என்று ஒத்துக்கொண்டனர் ....போகிற பாதை முழுவதும் அழகான வயல்வெளிகளும் கரும்பு தோட்டங்களும் நிறைந்து காணப்படுகிறது .....
.... வழி எங்கும் கரும்பு ஜூஸ் கடைகளாக இருக்கிறது....கடைகளை கலர் கலர் பலூன்கள் கட்டி ஏழு எட்டு ஊஞ்சல்கள் போட்டு கவர்ந்திழுக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள்..,செக்கில் எண்ணைய் எடுப்பது போல மாடுகளை வைத்து கரும்பு ஜூஸ் பிழிகிறார்கள் ....பார்க்கவே புதுமையாக இருக்கிறது .....ஊஞ்சலில் ஆடி கொண்டே ஆளுக்கு இரண்டு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடித்து கிளம்பினோம்.,,,
. சனி சிக்னாபூர் .....சனி பகவான் பூமியில் வந்து இறங்கிய இடம் இது என்கிறார்கள்...ஒற்றை கல் தூண் போல நிற்கிறார் சனி,,அங்கேயும் கூட்டம் இல்லாததால் நிதானமாக தரிசனம் பார்த்து கிளம்பினோம்......அடுத்த நாள் தீபாவளியை மருமகள் குடுபத்தினருடன் மகிழ்ச்சியாய் கொண்டாடி முடித்து சென்னை வந்து சேர்ந்தோம்...... 😊.(நிறைவு )




ஞாயிறு, 10 நவம்பர், 2019

நிலம்கொத்தி பறவை

மரம்கொத்தி  பறவையை
கண்டிருக்கிறோம்
மண்கொத்தி பறவையையும்
கண்டிருக்கிறோம்
இன்று
புதிதாய் முளைத்திருக்கிறது
நிலம்கொத்தி பறவையொன்று ...
விவசாயியின் வயிற்றிலடித்து
அவர்களின்
வறுமையை சாதகமாக்கி
அவர்தம் நிலங்களை
பிடுங்கி தின்று
உயிர் கொத்தி தின்கிறது

பெரும்வணிகம் எனும்
நிலம்கொத்தி பறவை. ....

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

. சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....4



புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....

       இந்த வாள் 2010 ல் நாங்க  ஜெய்ப்பூர் போயிருந்தபொழுது வாங்கியது. .அங்கே தெருக்களில் இதைப்போல நிறைய மாடல்களில் பல நிறங்களில் வாள்களை விற்கிறார்கள். ..அங்குள்ள வீடுகளில் இந்த ஒரு கலைபொருளை அனைவரும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.. , நெடுவாள்,சின்ன குத்துவாள் சிறிய கத்தி  என பலவிதமான வகையினில் இருந்தாலும் எனக்கு பிடித்தது இந்த போர்வாள் தான். ...இதை கையில் வைத்து பார்க்கும் போது ஒரு மகாராணி உணர்வை  தந்ததால் இதை விருப்பப்பட்டு வாங்கி வந்தேன். ...கம்பீரமான இந்த வாளை பார்க்கும் போதெல்லாம்  அந்த பிங்க் சிட்டியின் அழகு கண்ணில் வந்து போகும். .....உங்களுக்கும் அங்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் அவசியம் இதை வாங்கி வந்து நீங்களும் மகாராஜாவாகவோ மகாராணியாகவோ மாறிவிடுங்கள் 😆😛😜😜

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....3



புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....
   இந்த ஷோபீஸ் நான்  சவுத்ஆப்ரிக்கா போயிருந்தபொழுது  வாங்கியது...  அங்கே அவுட்ஷ்ரோம் னு ஒரு இடம்.. அங்கே உள்ள ஆஸ்ட்ரீச்(நெருப்புகோழி ) பண்ணைக்கு போயிருந்தோம் ..அதனுடைய  முட்டை ஓடு மிக பலமாக இருக்கும்.. அதன் மேல் ஏறி நின்றாலும் அது உடையாது..அவ்வளவு ஸ்ட்ராங் ..முன்பெல்லாம் ஆஸ்ட்ரீசோட இறகுகள் தங்கத்திற்கு இணையாக விற்பனை ஆகியதாம்..வெள்ளையர்கள் அதை அணிவதில் மிக பெருமை கொண்டார்களாம்..உலக போருக்கு பின் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையால் இறகு வாங்குவதை நிறுத்தியதால் அந்த தொழில் நசிந்து விட்டதாம் .. ..இப்பொழுது சில பண்ணைகள் மட்டுமே இருக்கிறது,அங்கு யானைசவாரி போல ஆஸ்ட்ரீச் மேல் நாம  சவாரி செய்யலாம் தைரியமிருந்தால். .. அங்கு இருக்கும் கடைகளில் ஆஸ்டிரிச் முட்டை ஓடுகளால் ஆன அலங்கார பொருட்களை விற்பனை செய்கிறார்கள். ..அந்த இடத்தின் நினைவாக ஆஸ்ட்ரீச்  ஓட்டின் மீது செய்த  து இந்த  ஷோபீஸ்😊...இதை பார்க்கும் போதெல்லாம் அதன் மேல் செய்த சவாரி நினைவினில் வந்துபோகும்😊

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....2


      புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....
      இந்த இரு பழங்குடி இனத்தவரின் பொம்மை வாங்கியது அந்தமானில். ..அந்தமானில் வசிக்கும் ஆதிவாசிகளை பார்ப்பது கொஞ்சம் அரிதான விஷயம் தான். ...முன்பெல்லாம் சகஜமாக நடமாடி கொண்டிருந்த அவர்களை அங்கு செல்லும் பயணிகள் திண்பண்டம்,போதைபொருட்கள் கொடுப்பது என பழக்கப்படுத்தியதால் இப்போதும் அவர்களை நெருங்க விடுவதில்லை. இப்போதெல்லாம் மிக கட்டுபாடுடன் போலீஸ் துணையுடன் தான் அப்பகுதியை சுற்றி பார்க்க அனுமதிக்கின்றனர். ..நாங்கள் சென்றபோது இரு ஆதிவாசி சிறுவர்களை கண்டோம்...மரத்தின் மீதமர்ந்து பளிச்சென்று மின்னும் கண்களுடன் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ...அந்த பயணத்தை என்றென்றும் நினைவில் கொள்ள அங்கிருந்து அழைத்துச் கொண்டு வந்ததோம் இந்த இருவரையும் 😆😛

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....

சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....
      புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....
       இந்த மரவேலைப்பாடுள்ள ஸ்டாண்ட் வாங்கியது 2013 ல் ....அப்பொழுது அப்பா பக்கவாத நோயால் ஒரு கையும் ,காலும்,  குரலும் செயலிழந்து இருந்தார் ...  ஆயினும் வாக்கிங் ஸ்டிக்  துணையுடன் நடப்பார் ...தன்  தேவைகளை இடது கையால் எழுதி காட்டுவார் .....பயணங்கள் மேல் என்போலவே பெரும் காதல் கொண்டவர்...அந்த நிலையிலும் 10 நாள் பயணமாக மூகாம்பிகை ஹூப்ளி .சாரதா மடம் .உடுப்பி, சிருங்கேரி. ஹம்பி .சாமுண்டீஸ்வரி கோவில் .மைசூர் அரண்மனை என கர்நாடகா முழுவதும் எங்களுடன் உற்சாகமாக சுற்றி வந்தார்...அது போலவே கலை பொருட்கள் சேகரிப்பதில் பேராவல் கொண்டவர்....அந்த பயணத்தை முடித்து  திரும்புகையில் மலைத்தொடரின் மேல் விற்று கொண்டிருந்த இதை வாங்க விரும்பினார் ....அவர் ஆசைக்காக வாங்கிய இந்த  ஸ்டாண்ட் அவரையும் அவருடனான அந்த கடைசி பயணத்தையும் எப்போதும் பசுமையாக என் நினைவில் வைத்திருக்கிறது ......

வியாழன், 31 ஜனவரி, 2019

கொலுசொலி

அப்பாவை எழுப்ப சென்ற
படுக்கையறை மூலையில் ஒரு முத்து
தம்பியை படிக்க சொல்லி மிரட்டிய
அறையின் கோடியில்  ஒருமுத்து
சமையலறையின் பரபரப்பில்
அம்மியின் பின் ஒளிந்த
ஒரு முத்து
வேலைக்காரியின் பின் அலைந்த
பொழுதினில் விழுந்த ஒரு முத்தென
வீடெங்கும் ஒளிந்து  கிடக்கும்
அம்மாவின் கொலுசு முத்துக்கள்
அவளில்லா இப்பொழுதிலும்
இசைத்து கொண்டிருக்கிறது
அவளின் இருப்பை .....