செவ்வாய், 28 ஜூன், 2011

உன்னைத்தவிர .......

எப்போதும் அமைதியான எனது விழிகள்
உன்னைக் கண்டதும் பரப்பரப்பதை கண்டு
உன்மேல் எனது பிரியத்தை புரிந்து கொண்டாள் அம்மா ........

யாருக்காகவும் காத்திராத என் கால்கள்
உன்னைக் காணவே கால்கடுக்க காத்திருப்பதை கண்டு
உன்மேல் நான் கொண்ட நேசத்தை தெரிந்து கொண்டார் அப்பா ....

ஏக்கம் கொண்ட மனதின் துயரையும்
தூக்கமில்லா பொழுதுகளையும் கண்டதால்
உனக்கான என் அன்பினை புரிந்து கொண்டாள் அக்கா.....

காரணம் இல்லாத சிரிப்பினையும்
உளறலான பேச்சினையும் ,என் தவிப்புகளையும் பார்த்து
உன் மேல் நான் கொண்ட ஆசையை அறிந்து கொண்டான் அண்ணன் .......

எல்லோரும் தெரிந்து கொண்டனர்
உன் மீதான எனது காதலை
உன்னைத்தவிர ................

ஞாயிறு, 26 ஜூன், 2011

முகமூடி மனிதர்கள்

பிறந்ததும் அழுதோம்
பின் தானாக சிரித்தோம்
பார்ப்பவர்களின் எண்ணம உணராமல்
தவழும் போதிலும் நடக்கும் வயதிலும்
நம் எண்ணம் போல் வீழ்ந்தோம்
பின் எழுந்தோம் .........
மாற்றான் எண்ணங்களை பற்றி
சிந்திக்க எண்ணிய வேளையினிலே
மாட்டி கொண்டோம் முகமூடியை
இயக்கங்கள் எல்லாம் மற்றவர்
எண்ணங்களை ஒட்டியே
நம் செயல்கள் எல்லாம் மற்றவர்
எண்ணம் போலவே ........
அடுத்தவர் சிந்தனை பற்றி
சிந்தித்தே நம் வாழ்வை இழக்கிறோம்
மாட்டிய முகமூடி கழட்டபடாமலே
வாழ்ந்து முடிக்கிறோம்
மண்ணில் புதையும் காலம் வரை .....

வெள்ளி, 24 ஜூன், 2011

நவீன தாய் .

பள்ளி விட்டு திரும்பிய
மகளை முகம் கழுவி வரச்சொல்லி
அவசரபடுத்தினாள்......
வகுப்பறையின் கதைகளை சொல்ல
ஆவலுடன் திறந்த அவள் வாயினுள்
அவசரமாய் உணவை அடைத்தாள் ....
வீட்டுப்பாடங்களை வேகமாய்
முடிக்க சொல்லி வேலைகளை
பார்க்கப் போனாள்......
படித்து முடித்த மகளின் வாயினுள்
திரும்ப சிறிது உணவையூட்டி
ஆசையாய் பேச வந்த குழந்தையை
நாளை பள்ளிக்கூடம் போகவேண்டுமென கூறி
அவசரமாய் தூங்க வைத்து
நிதானமாய் வந்து அமர்ந்தாள்
தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்
குழந்தையின் மழலை பேச்சு
தனக்கு பிடிக்கும் எனக்கூறி
அதனை ரசிப்பதற்கு.............

வியாழன், 16 ஜூன், 2011

ஆசை

ஒவ்வொரு முறை கடக்கும் போதும்
தீராத மோகம் கொண்டான்
அழகான சிலையொன்ரின் மேல் .........

நாளும் பொழுதும் அதன் நினைவாகவே
ஊனும் உறக்கமும் தொலைத்து
சொந்தமாகி கொள்ள
சிரமேற்கொண்டு முயற்சித்தான் ......

கையிருப்பெல்லாம் கரைத்து
கடன்பட்டு காசு சேர்த்து
ஆசையாய் வாங்கி வந்து
வீட்டு முன்னறையில் அழகாய் வைத்திருந்தான் .......

இன்று நின்று பார்க்க நேரமில்லை
ரசித்து பார்க்க பொழுதுமில்லை
கடக்கும் போதும் பார்வை அதன்மேல் படிவதில்லை
பரிதாபமாய் நிற்கிறது அந்த சிலை
காதலித்து மணந்த அவன் காதல்
மனைவியின் நிலை போலவே ..........

அழுக்கு மனம்


திருமண விழாவொன்றில்
சந்தித்த தோழியின்
அழகான சிறுகுழந்தை
கைவிரித்து தாவிவர
விழைகின்ற போதினில்
புதியதாய் உடுத்திய விலையுயர்ந்த
பட்டுபுடவை கசங்கிபோகுமோ
கறைபட்டு பாழாகுமோ
குழந்தை அழுக்காக்கி விடுமோ
என்றெல்லாம் எண்ணி கைகளை
பின்னல் இழுக்க சொல்கிறது
உள்ளிருக்கும் அழுக்கு மனம் .............