வெள்ளி, 2 டிசம்பர், 2016

என் மடிதனை
நனைக்கும் உன்
கண்ணீரின் வெம்மை சுடுகிறது.....
 ஆயினும் அசைவின்றி
காத்திருக்கிறேன்
பரசுராமரின் தூக்கம் கலைய
காத்திருந்த கர்ணனை
போல...
உன் துக்கம் கரையவே .........

திங்கள், 14 நவம்பர், 2016

தானென்ற மமதை 

சிரித்துமழுப்பும் உன் உதடுகளில்
அமர்ந்திருக்கிறது அது ....
 கையசைத்து பேசும் உன் விரல்களின் 
இடுக்கினிலிருந்து  பார்த்து சிரிக்கிறது.....
தொலைபேசியின் வழியினில் 
காதுகளில் கொக்கறிகிறது.....
யாரிடமோ பேசுவது போல் பார்க்கும் உன்
கண்களின் ஓரத்தில் பதுங்கியிருக்கிறது அது .....
உறவுகளின் மத்தியில் இருந்து 
உன் கால்களை பற்றி இழுத்து 
செல்கிறது அது......
 
என்றேனும் ஒருநாள் 
நீயாய் அதை கொல்லலாம்
இல்லை தானேனும் அது மரிக்கலாம் 
அன்பெனும் அகம் திறக்கும் அவ்வேளை 
உனை சூழ்ந்திருக்கும் ஒரு தன்னந்தனி தீவு .....

திங்கள், 18 ஜூலை, 2016

கிருஷ்ணனை போல் பொல்லாத குறும்புக்கார பிள்ளை இல்லை...முருகனை போல் கோபித்து செல்பவனும் இல்லை...கண்ணனை போல் கோபியருடன் திரிபவனுமில்லை....அம்மை அப்பனை சுற்றி வந்து வேண்டியதை பெற்று கொள்ளும் விக்னேஷ்வரன். ......என் மகன் விக்கி யின்  24 வது பிறந்தநாள் இன்று. ...அவன் வாழ்வில் என்றும் நலமுடனும் வளமுடனும் இன்புற்று வாழந்திட நல்லுள்ளங்கள் வாழ்த்துங்களேன்........

புதன், 29 ஜூன், 2016

பெண்ணானவன்

பெண் ஒரு பறவை, சிறகுகள் உண்டு
இத்தனை உயரத்தில் இத்தனை வேகத்தில்
பறந்திட ஆணையுண்டு .....

பெண் ஒரு இயந்திரம்
இவ்வளவு வேகத்தில் இவ்வளவு வேலைகளை
முடித்திட உத்தரவுண்டு ......

பெண் ஒரு கைதி
சுதந்திரமாய் உள்ளேயே சுற்றிடவும்
இட்ட வேலையை செவ்வனே முடித்திடவும்
வரைகளுண்டு .....

பெண் ஒரு வாகனம்
வேகங்களை கட்டுக்குள் வைத்து
நினைத்த நேரத்தில் ஓட்டத்தை
தடுத்திட கட்டளைகளுண்டு ......

பெண் ஒரு பட்டாம்பூச்சி
அவளை கூட்டுப்புழுவென மாற்றிட
ஒழுக்கமென்னும்  ஆயுதமெடுக்கும்  மனங்களுண்டு.....

கட்டுகள் தளர்த்தி தன் சுயம்
தேடும் பெண்ணை
அன்பை காட்டி ஆளமுடியா ஆண்மகனவன் ....

பெண்ணுடலை வெளிச்சமிட்டு காட்டி
 சிறகொடித்து போடுமவன் ஆணல்ல
ஆணென்ற போர்வையில் வாழும் பெண்ணானவன் .......

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

கடவுள் இருக்கிறார்

அப்பாவின் சேவகியான அம்மாவின்
ஆன்மீக பயணங்களில் விடுதலையென ...
.
ஓடி போன பிள்ள திரும்பி வருவானென
காசு முடிச்சிடும் அத்தையின் நம்பிக்கையாக.....

அக்காவின் மாமாவின் காதலில்
பூ போடலில் தேர்ந்தெடுக்கப்படும் பூவாக  .....

அடங்கா காளையென திரியும்
அண்ணனிடம் அம்மா வாங்கும் சத்தியமாக .....

வாசல் தாண்டுமுன் ஆசிர்வதிக்கும்
ஆசிர்வதிக்கும் ஆச்சியின் கைகளில் திருநீராக .....

பரம்பரை செழித்திட
ஊர்முழுக்க அன்னமிடும் அப்பாவின் தர்மமென .....

கடவுள் இருக்கிறார்
அன்பெனும் வடிவத்தில் .....