வெள்ளி, 21 ஜனவரி, 2011

அம்மா

உற்சாகமாய் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர் அனுவும் அவளது தோழி சுனிதாவும் .தன் தாயை தோழிக்கு அறிமுகப்படுத்தும் ஆவலில் அனுவும் தன் ஆத்மார்த்த கதாநாயகியான அனுவின் தாயை பார்க்க போவதில் சுனிதாவும் மிக ஆவலாக இருந்தனர் ...

அனுவுக்கு தன் தாயை பற்றி மிகுந்த பெருமிதம்உண்டு.சமையலில்,கைவேலையில், வெளிவேலைகளில்,தன் சிநேகிதிகளுடன் தோழி போல் பழகுவதில்,தன் தாய்க்கு இணை யாருமில்லை என பெருமிதம் கொண்டவள் அவள் ...

வீடு வந்து சேர்ந்ததும் தோழியை அமர வைத்து விட்டு தாயை தேடி போனாள் அனு.சுனிதா வீட்டை சுற்றி நோக்கினாள். அனு அம்மாவின் கைவண்ணத்தில் அழகாய் நேர்த்தியாக அலங்கரிக்க பட்டிருந்தது. அனுவின் அம்மா போல் அருமையாக சமைத்து தோழிகள் அனைவருக்கும் அன்பாக கொடுத்து அனுப்பும் மனம் யாருக்கும் வராது என் எண்ணினாள் சுனிதா ..சுனிதா தாய் இல்லாத பெண் ....

அனுவின் தாய் வந்ததும் சுனிதா புன்னகையுடன் உற்சாகமாக "ஹாய் ஆன்ட்டி" என்றாள்.ஹாய் என்று மெல்லிய புன்னகையுடன் எதிரில் அமர்ந்து நலன் விசாரித்தாள்..சிறிது நேரத்தில் உட்புறமாக சென்று இருவருக்கும் சிற்றுண்டி கொண்டு வந்தாள்..பின் உள்ளே சென்றவள் வரவேயில்லை ..சுனிதாவுக்கு சப்பென்று ஆகி விட்டது ..தோழியை போல் பழகுவாள் என எதிர்பார்த்து வந்தவள் அவளது இயல்பை பார்த்ததும் சுருங்கி போனாள ..சிறிது நேரம் கூட இருக்க பிடிக்காமல் உடனே கிளம்பி விட்டாள்..

அனுவுக்கு கண்ணீர் முட்டி கொண்டு வந்தது ..தன் தாயின் இன்றைய நடவடிக்கை
புரியாமல் தவித்தாள் அவள் ..தாயின் அருகில் வந்து கோபத்துடன் காரணம் கேட்டாள் அனு .புன்னகையுடன் பதிலளித்தாள் அவள் தாய் .."இதோ பார் அனுமா அவள் தாய் இல்லாத பெண் என்னை தன் கதாநாயகியாக நினைப்பதாக நீயே பல முறை கூறி இருக்கிறாய் ..இன்று அவளிடம் நான் தோழி போல் நெருக்கமாய் பழகினால் அவளுக்கு என்மேல் இன்னும் நேசம் அதிகமாகும் ..தன் தாய் இல்லாத சோகமும் .உன் தாயை பற்றிய பெருமையும் சேர்ந்து அவளுக்கு உன்மேல் பொறாமையை உண்டு பண்ண கூடும் அதன் காரணமாக உங்கள் நட்பில் விரிசல் உண்டாகலாம் ,அதனால் தான் நான் அப்படி நடந்து கொண்டேன்.இதனால் அவள் என்னை பற்றி தவறாக நினைத்தாலும் பரவாயில்லை ..அவள் மனதில் ஏக்கமும் பொறாமையும் உண்டாக நான் காரணமாக வேண்டாம் என்று தான் விலகி இருந்தேன் ..உங்கள் நட்பு என்றும் இது போல் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம் .என்று கூறிய தாயை இன்னும் அதிக பெருமையோடு பார்த்து ரசித்தாள் அனு ....

புதன், 19 ஜனவரி, 2011

தொலைந்த காதல்


தொலைந்து போன
பொருட்கள் எல்லாம்
என்றோ ஒரு நாள் கிடைத்தது
கிடைக்காத பொருட்களை
விலைகொடுத்து
வாங்கி கொண்டேன்
தேடி பார்த்தும் கிடைக்காத
விலை கொடுத்ததும்
வாங்க முடியாமல் தவிக்கும்
நான் தொலைத்த அரிய பொருள்
உன் காதல் .........

தாய்மனம்


கீழே நழுவும் ஒவ்வொரு
நேரமும் இறுக பற்றுகிறேன்
பிடி நழுவி விடுமோ
என்று பரிதவிகிறேன்
பனிக்காற்று பாதிக்குமோ
என் சேலை இழுத்து
மூட தவிக்கிறேன்
முன் செல்லும் வாகனத்தில்
தாய் மடி மீது பத்திரமாக
பயணிக்கும் குழந்தை தான்
இருந்தும் தவிக்கிறது தாய் உள்ளம .......

செவ்வாய், 11 ஜனவரி, 2011

புகைப்படம்


இறந்து போன அம்மாவின்
நகைகள் எல்லாம்
அண்ணியின் கழுத்தை அலங்கரித்தன ....

புடவைகள் எல்லாம் அண்ணியின்
பீரோவில் அழகாய் அடுக்கப்பட்டன ....

அம்மாவின் சொத்து பத்திரங்கள்
அண்ணாவின் பெட்டியில் பதுங்கின ...

பாட்டியின் கட்டிலையும் பீரோவையும்
ஆளுக்கொன்றாய் பகிர்ந்து கொண்டனர்
அண்ணனின் பிள்ளைகள் ......

அம்மாவின் புகைப்படமொன்று
தரப்பட்டது என்னிடம்
இறந்தவர்களின் புகைப்படம்
வீட்டில் மாட்ட கூடாதென்ற விளக்கத்துடன் .......

வியாழன், 6 ஜனவரி, 2011

காயம்


காயம் படும் வேளைகளிலெல்லாம்
உன்னை எண்ணி கொள்கிறேன்
நீ தந்த வலியை எண்ணி கொண்டால்
வேறெந்த வலியும் பாதிப்பதில்லை
என்னை பெரியதாக ....

திங்கள், 3 ஜனவரி, 2011

ரணம்

உன்னை போலவே
ஆயிரம் சுடுசொல்
தெரியும் எனக்கு ......
உன்னை போலவே
நாக்கில் சவுக்குண்டு எனக்கும் ....
உன்னை போலவே
மனதை ரணமாக்கும்
தேள் கொடுக்கு நாக்குண்டு எனக்கும் ....
ஆனால் அதை எல்லாம்
பயன்படுத்த முடியாதபடி
தடுக்கிறது உன்னிடம் இல்லாமல்
என்னிடம் மட்டுமே இருக்கும்
அளவில்லாத அன்பு ...
அது ஏற்கிறது உன் தவறுகள்
அனைத்தையும் புன்னகையோடு ......