வியாழன், 29 டிசம்பர், 2011

குமரியின் குமுறல்

குழந்தையாய் இருந்த நான்
குமரி ஆனேன் நேற்று ....
நேற்று வரை எனக்கும்
எனது தோழனுக்கும் இருந்த உறவு
இன்று ஆனது தப்பாய் ....
இதுவரை எங்களது பார்வையில்
அன்பும் சந்தோஷமும் கண்டவர்கள்
இன்று அதை காதல் என்கிறார்கள் ...
நேற்றுவரை எங்களது சிரிப்பை
உல்லாசம் குழந்தை தனம் என்றவர்கள்
இன்று கள்ளத்தனம் பல்லிளிப்பு என்கிறார்கள் ....
நேற்று வரை எங்களது கைகோர்பில்
வெள்ளந்தி தனமும் நட்பும் பார்த்தவர்கள்
இன்று அதை காமம் என்கிறார்கள் ....
குற்றம் எங்கள் மீதல்ல
இன்னமும் நாங்களே கடந்திராத எங்களது பால்யத்தை
நீங்கள் கடந்தது தான் குற்றம் .......

செவ்வாய், 20 டிசம்பர், 2011

ஆசை

தேர் போல் ஜோடனை
அழகான தோரணங்கள்
வித விதமான மாலைகள்
மனம் மயக்கும் வாசனை திரவியங்கள்
பாழும் மனதில் தோன்றுகிறது ஆசை
பாடையின் மீதும் .......

சனி, 17 டிசம்பர், 2011

கொலுசொலி

ஆளான நாள் முதலாய்
அணிய சொல்லி வற்புறுத்துகிறாள் அம்மா..
கொத்து கொத்தாய் முத்துகளோடு கூடி
சத்தமிடும் கொலுசுகளை ......
இன்று எடுத்து அணிந்தேன்
அழகான கொத்து கொலுசினை
சந்தோஷப் படுகிறாள் அம்மா
இன்றாவது தன் பேச்சை கேட்கிறாளே என்று....
புரியவில்லை அவர்களுக்கு
மெல்லிய எனது கொலுசொலி
உன் முகம் திருப்பும் அளவில்
சத்தமிடவில்லை என்பதால் மாற்றுகிறேன் என்று ....

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

மஞ்சள்நீராடு விழா


அரசியல்வாதி வீட்டு பெண்ணுக்கு
மஞ்சள்நீராட்டு விழா
தலைவர் பெயர் போட பாதிபக்கம்
துணை தலைவருக்கு மீதிபக்கம்
தொண்டர்களுக்கு சிறுபகுதி
பெண்ணுக்கோ மீதி பகுதி
பிரித்து போட்டு பத்திரிக்கை அடித்ததில்
மிச்சமேதும் இடமில்லை முறைசெய்யும்
தாய்மாமன் பெயரிட ........

வெள்ளி, 18 நவம்பர், 2011

எண்ணிப் பார்க்கிறேன்

எண்ணிப் பார்க்கிறேன்
என்று தோன்றியது உன்மீதான
என் ஆழமான நேசத்தின் வேர்...?

பருவ வயதினில் நான் மோகித்த
என் கதாநாயகனின் சாயலை நீ
கொண்டதாலா.....?

என் ஆசைகளை உன் ஆசையாய்
எண்ணி நிறைவேற்றுவதாலா....?

வாழ்வின் இன்பங்களை எல்லாம்
எனக்களிக்க வேண்டும் என்கிற
உன் எண்ணத்தினாலா ....?

அனைத்திலும் மேலாய்
பழகிய சில நாட்களில்
உன் கரம் பற்றி பாதுகாப்பாய்
பாதை கடந்த ஒரு மாலைபொழுதினில்
என் தந்தை கரத்தின் கதகதப்பும்
பாதுகாப்பும் உன் கரங்களில்
கண்ட நாள் முதலாய் வேர் விட்டது
இந்த நேசம்..........

நாட்குறிப்பு

என் நாட்குறிப்பினில்
எழுதப்படாத வெற்று தாள்கள்
உள்ள பக்கங்கள் எல்லாம் நான்
உன்னை சந்திக்காத நாட்கள்....

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

எங்கள் வீட்டு கொலு

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வீடெங்கும் ஏற்றுவோம் தீப ஒளியை
மனமெங்கும் ஏற்றுவோம் அன்பெனும் ஒளியை...
நண்பர்கள் தோழிகள் அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....சுஜா

சனி, 15 அக்டோபர், 2011

எங்கள் வீட்டு கொலு


எப்பொழுதும் என் ப்ளாக்கில் கவிதைகளையே ரசித்த என் தோழர்களே தோழிகளே எங்கள் வீட்டு கொலுவையும் கொஞ்சம் ரசியுங்களேன் ..........

வியாழன், 13 அக்டோபர், 2011

அரசியல் கூத்து

வாத்தியங்கள் முழக்கமிட
கட்டியக்காரன் முன்மொழி சொல்ல
களறி கட்டியவன் பின் வந்து
கூத்தாடும் தெருகூத்து பற்றி பாடத்தில்
படித்த என் மகள் கேட்கிறாள் ..?

பேண்டு வாத்தியங்கள் முழங்க
வாகனத்தில் வந்த ஒருவன்
ஒலிபெருக்கியில் முன்மொழிய
திறந்த வண்டியில் ஒளிவெள்ளம் மின்ன
நிறைவேற்றவே முடியாத பல நூறு
வாக்குறுதிகளை அள்ளி வீசி
வருகின்ற அரசியல்வாதியை பார்த்து
கேட்கிறாள் இது தானோ தெருகூத்து என்று....

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே
தரிசனம் தருகின்ற இவர்கள் ஆடுவது

தெருகூத்து அல்ல இது தான்
அரசியல் கூத்து என்றேன் நான் .......

வியாழன், 8 செப்டம்பர், 2011

அடையாளம் தொலைத்தவள்

அலுவலகம் செல்லும்
கணவனின் கழுத்தில் தொங்குகிறது
தான் இன்னாரென்று அறிவிக்கும்
அடையாள அட்டை .....

பள்ளி செல்லும் பிள்ளையின்
கழுத்தினில் அவன் யாரென்று
கூறும் அடையாள அட்டை .....

மழலையர் வகுப்பினில் தவழும்
குழந்தையின் கழுத்திலும் அவளைப் பற்றி
தகவல்களை பற்றிய அடையாள அட்டை ...

அவர்கள் வீட்டினில் கட்டி போடப்பட்டு இருக்கும்
நாயின் கழுத்தினிலும் ஓர் அடையாள அட்டை
அதனை பற்றிய விவரங்களோடு .....

அவரகளுக்காகவே நாள்முழுக்க பாடுபட்டு
அவர்களை எல்லாம் அன்போடு
பாதுகாக்கும் அந்த வீட்டு பெண்ணிடம் மட்டும்
எந்த வித அடையாளமுமில்லை
தானென்ற அடையாளம் தொலைத்தவள் அவள் .....

விசித்திர மனம்

உன் முகத்தில் விழிப்பதில்லை
உன் நிழல் விழும் இடங்களிலும் நிற்பதில்லை
உன் பார்வையில் படுவதில்லை
உன்னை எண்ணி பார்க்க போவதுமில்லை
நீ பேசினாலும் மறுபேச்சு பேசுவதில்லை
என்றெல்லாம் சபதமேற்றபடி
வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன் உனக்காக .........

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ஊழல் எதிர்ப்பு

வெகு தூரத்தில் நடக்கிறது
ஊழல் எதிர்ப்பு போராட்டம்
எப்படியேனும் கலந்து கொண்டு
காண்பிக்க வேண்டும் என் ஆதரவை
என்றெண்ணி தேடினேன் வாகனங்களை

வாகனம் ஒன்றும் கைவசமில்லை
பேருந்திலும் இடமில்லை
ரயில் வண்டியிலும் இடமில்லை

இறுதியாய் பெரும் முயற்சி செய்து
ரூபாய் நூறு கையூட்டளித்து
பயணசீட்டை பெற்று பயணப்பட்டேன் பெருமிதமாய் .....

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அந்தரங்க டயரிகள்

தினந்தோறும் இரவில்
எழுதபடுகிறது டயரி.....
எழுத கூடிய விஷயங்கள் தாள்களிலும்
மறைக்க வேண்டிய விஷயங்கள் மனதின்
ரகசிய அறைகளிலும்.......
என்றேனும் ஒருநாள் படிக்கப்படலாம்
தாள்களில் எழுதப்பட்டவை ...
என்றுமே வெளிவராமல் உடலோடு
புதைக்கபடுகின்றன பல அந்தரங்க டயரிகள்.....

சனி, 13 ஆகஸ்ட், 2011

மறவாத காதல்

நீ நடந்த பாதையில்
நடந்ததில் என் பாதை
எதுவென்று மறந்தேன் .......

நீ ரசித்தவற்றையே
நானும் ரசிப்பதனால்
என் ரசனைகளை மறந்தேன் ....

உன் பேச்சினையே
கிளிப்பிள்ளை போல்
நானும் பேசுவதால் என்
பேச்சு திறமையை மறந்தேன்......

எதை மறந்த போதிலும்
நான் மறவாத ஒன்று உண்டென்றால்
அது நான் உன் மேல் கொண்ட காதல் ......

சனி, 23 ஜூலை, 2011

"படி தாண்டா பத்தினி பெண்கள் "

திரைப்பட பின்னணி பாடகியாக
பெயர் வாங்க விரும்பிய
குயில் போல் பாடும் குரல் கொண்ட
மீனா இன்று பாடுகிறாள்
அவள் வீட்டு குளியறையில்....

கதைகள் எழுதி குவித்து
பெரும் பெயர் வாங்குவேன் என்று
சூளுரைத்த கவிதாவின் கதைகள்
இன்று வெளிவராமல் கிடக்கின்றன
அவள் வீட்டு பரண் மேல் ......

ஓட்ட பந்தயத்தில் எப்பொழுதும்
முதல் பரிசு வாங்கும் பவித்ராவின் கனவு
தடகளத்தில் இந்தியாவிற்கு முதல்பெயர்
வாங்கி தருவது இன்று அவள் ஓடுகிறாள்
பிள்ளைகளின் பின்னே ....

நல்லாசிரியர் பெயர் வாங்க
கனவு கண்ட வேணி அக்கா
இன்று ஆசிரியராக இருக்கிறாள்
அவள் பிள்ளைகளுக்கு மட்டும் ....

பல துறைகளில் பெயர் வாங்க துடித்த
இவர்கள் எல்லாம் இன்று ஒரே பெயர்
வாங்கினார்கள் ....
"படி தாண்டா பத்தினி பெண்கள்" என்று .........

செவ்வாய், 5 ஜூலை, 2011

மனிதம் தொலைத்தவன்

நேற்று வரை நோயின் பிடியில்
நல்ல உணவுக்கும் வழியில்லை
மருந்து வாங்கவும் பணமில்லை
குடிக்க நீர் தரவும் ஆளில்லை .....

சதை எதுவும் இல்லாமல் எலும்பும் தோலுமாய்
கிழிந்த பாயில் கிடந்த அந்த மனிதரின் இறப்பில் ....

இன்று ஊரெங்கும் இரங்கல் போஸ்டர்
தேர்போல் ஜோடனை பல்லாக்கு
சின்னதும் பெரியதுமாய் மாலைகள்
தெருவெங்கும் பூக்குவியல்
அரசியல்வாதிகளின் அணிவகுப்பு அதில்
கண்ணீரில்லாத கண்களை துடைத்து கொண்டு
தகப்பனின் சாவில் சுயவிளம்பரம்
தேடும் இவனுமொரு மனிதனா ...?
மனிதம் தொலைத்த மிருகமா ...........

வெள்ளி, 1 ஜூலை, 2011

.காத்திருக்கிறேன் .........

காத்திருக்க சொல்கிறாய்
காலம் கடக்கின்றது
நானும் காத்திருக்கிறேன்
கல்லாகி நிற்கிறாய் நீ
காலம் உன்னை கரைக்கவில்லை......
உன் நினைவினில்
கற்பூரமாய் கரைகிறேன் நான் .....
என்றோ ஒருநாள் நீ என்னை தேடி வருகையில்
காற்றினில் கரைந்திருப்பேன் நான்
ஆனாலும் உன்னோடு
என் வாசம் மட்டும் மிச்சமாய் ................

கட்டளைகள்

காதலித்த பெண்ணை கரம் பிடிக்க கட்டளைகள் இடுகிறாய்.......
திருமணமான பின்
உறவெல்லாம் உன் விருப்பப்படி
நட்பெல்லாம் நீ நாடியவரிடம் மட்டும்
சொந்தமெலாம் நீ சொன்னவரிடம் மட்டும்
எல்லாமே உன் விருப்பப்படி என்றால்
அவளுடைய மூளையை
என்ன செய்வது ......?....ஓ....
பொன்னுருக்கி செய்யாமல் அவள் மூளை உருக்கி
செய்வாயோ தாலி ........?

செவ்வாய், 28 ஜூன், 2011

உன்னைத்தவிர .......

எப்போதும் அமைதியான எனது விழிகள்
உன்னைக் கண்டதும் பரப்பரப்பதை கண்டு
உன்மேல் எனது பிரியத்தை புரிந்து கொண்டாள் அம்மா ........

யாருக்காகவும் காத்திராத என் கால்கள்
உன்னைக் காணவே கால்கடுக்க காத்திருப்பதை கண்டு
உன்மேல் நான் கொண்ட நேசத்தை தெரிந்து கொண்டார் அப்பா ....

ஏக்கம் கொண்ட மனதின் துயரையும்
தூக்கமில்லா பொழுதுகளையும் கண்டதால்
உனக்கான என் அன்பினை புரிந்து கொண்டாள் அக்கா.....

காரணம் இல்லாத சிரிப்பினையும்
உளறலான பேச்சினையும் ,என் தவிப்புகளையும் பார்த்து
உன் மேல் நான் கொண்ட ஆசையை அறிந்து கொண்டான் அண்ணன் .......

எல்லோரும் தெரிந்து கொண்டனர்
உன் மீதான எனது காதலை
உன்னைத்தவிர ................

ஞாயிறு, 26 ஜூன், 2011

முகமூடி மனிதர்கள்

பிறந்ததும் அழுதோம்
பின் தானாக சிரித்தோம்
பார்ப்பவர்களின் எண்ணம உணராமல்
தவழும் போதிலும் நடக்கும் வயதிலும்
நம் எண்ணம் போல் வீழ்ந்தோம்
பின் எழுந்தோம் .........
மாற்றான் எண்ணங்களை பற்றி
சிந்திக்க எண்ணிய வேளையினிலே
மாட்டி கொண்டோம் முகமூடியை
இயக்கங்கள் எல்லாம் மற்றவர்
எண்ணங்களை ஒட்டியே
நம் செயல்கள் எல்லாம் மற்றவர்
எண்ணம் போலவே ........
அடுத்தவர் சிந்தனை பற்றி
சிந்தித்தே நம் வாழ்வை இழக்கிறோம்
மாட்டிய முகமூடி கழட்டபடாமலே
வாழ்ந்து முடிக்கிறோம்
மண்ணில் புதையும் காலம் வரை .....

வெள்ளி, 24 ஜூன், 2011

நவீன தாய் .

பள்ளி விட்டு திரும்பிய
மகளை முகம் கழுவி வரச்சொல்லி
அவசரபடுத்தினாள்......
வகுப்பறையின் கதைகளை சொல்ல
ஆவலுடன் திறந்த அவள் வாயினுள்
அவசரமாய் உணவை அடைத்தாள் ....
வீட்டுப்பாடங்களை வேகமாய்
முடிக்க சொல்லி வேலைகளை
பார்க்கப் போனாள்......
படித்து முடித்த மகளின் வாயினுள்
திரும்ப சிறிது உணவையூட்டி
ஆசையாய் பேச வந்த குழந்தையை
நாளை பள்ளிக்கூடம் போகவேண்டுமென கூறி
அவசரமாய் தூங்க வைத்து
நிதானமாய் வந்து அமர்ந்தாள்
தொலைக்காட்சி தொடரில் நடிக்கும்
குழந்தையின் மழலை பேச்சு
தனக்கு பிடிக்கும் எனக்கூறி
அதனை ரசிப்பதற்கு.............

வியாழன், 16 ஜூன், 2011

ஆசை

ஒவ்வொரு முறை கடக்கும் போதும்
தீராத மோகம் கொண்டான்
அழகான சிலையொன்ரின் மேல் .........

நாளும் பொழுதும் அதன் நினைவாகவே
ஊனும் உறக்கமும் தொலைத்து
சொந்தமாகி கொள்ள
சிரமேற்கொண்டு முயற்சித்தான் ......

கையிருப்பெல்லாம் கரைத்து
கடன்பட்டு காசு சேர்த்து
ஆசையாய் வாங்கி வந்து
வீட்டு முன்னறையில் அழகாய் வைத்திருந்தான் .......

இன்று நின்று பார்க்க நேரமில்லை
ரசித்து பார்க்க பொழுதுமில்லை
கடக்கும் போதும் பார்வை அதன்மேல் படிவதில்லை
பரிதாபமாய் நிற்கிறது அந்த சிலை
காதலித்து மணந்த அவன் காதல்
மனைவியின் நிலை போலவே ..........

அழுக்கு மனம்


திருமண விழாவொன்றில்
சந்தித்த தோழியின்
அழகான சிறுகுழந்தை
கைவிரித்து தாவிவர
விழைகின்ற போதினில்
புதியதாய் உடுத்திய விலையுயர்ந்த
பட்டுபுடவை கசங்கிபோகுமோ
கறைபட்டு பாழாகுமோ
குழந்தை அழுக்காக்கி விடுமோ
என்றெல்லாம் எண்ணி கைகளை
பின்னல் இழுக்க சொல்கிறது
உள்ளிருக்கும் அழுக்கு மனம் .............

ஞாயிறு, 22 மே, 2011

DEAR FRIENDS

நான் மெகா டிவி யில் ருசியோ ருசி என்னும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் செய்து காட்டியுள்ளேன் .....நேரம் இருக்கும் நண்பர்கள் அந்த நிகழ்ச்சியை கண்டு விமர்சனகளை அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் ........

rusiyo rusi.....PENGAL.COM........at MEGA TV
DATE........23.5.2011 TO 27.5.2011......AND 30.5.2011 TO 31.5.2011
11.00am TO 12.00(I THINK ITS TELECOST AT 11.15am)

செவ்வாய், 10 மே, 2011

தொலைக்காட்சி


வீடுவீடாக ஏறி சென்று
தொலைக்காட்சி பார்த்த காலமொன்று
ஒளியும் ஒளியும் நாலணா
படம் பார்க்க எட்டணா ....
அப்பாவிடம் ஏச்சும்
அம்மாவிடம் தாஜாவும்
புரிந்து பெற்ற காசில்
கருப்பு வெள்ளை தொலைகாட்சியை
மெய்மறந்து ரசித்து பார்த்த காலமுண்டு .....
வண்ணத்தில் முதல்முதலாய்
வீட்டுக்கு தொலைக்காட்சி வந்ததும்
அக்காவிடமும் தம்பியுடனும்
சண்டை போட்டு ரசித்த நிகழ்ச்சிகள் ஏராளம் .......
இன்று வெவ்வேறு அளவினில்
ஒவ்வொரு அறையினிலும் தொலைக்காட்சி
காசு கொடுக்க வேண்டியதில்லை
சண்டை போட ஆளுமில்லை
கண்கள் வெறுமையுடன் பற்றில்லாமல் கடக்கின்றன
தொலைந்து போன பழைய காட்சிகளை எண்ணியபடி .....

தேர்வு முடிவுகள்

நேற்றுவரை பட்டாம்பூச்சியாய்
பறந்தவர்கள் தோல்வியால்
இன்று ஆனார்கள் கூட்டுபுழுக்களாய் ..

நேற்றுவரை கூட்டுபுழு போல்
முடங்கி படித்தவர்கள்
இன்று பறக்கின்றனர் பட்டாம்பூச்சியாய் ......

சனி, 7 மே, 2011

பஞ்சபூதம்


நெடுந்தொலைவில் இருந்தாலும்
தகித்து எரிக்கின்றாய்
என்னை சூரியனாய்....
காதல் நினைவினில் மூழ்கும்
போதெல்லாம் சில்லென குளிர்விக்கிறாய்
மழை நீராய்...
சில வேளைகளில் சூறாவளியாய்
சுழன்றடிகிறாய் என் நினைவினில்
காற்றாய்.....
காணும் இடங்களில்லெல்லாம்
நீயே நிறைந்திருகிறாய்
என் ஆகாயமாய் .....
எனக்கெல்லாமாய் இருப்பதினால்
அடக்கமாகின்றேன் உன்னிடம்
என் நிலமாய் ....
பஞ்சபூதங்கள் அடங்கியது
அகிலம் மட்டுமல்ல
என் காதலும் கூட .......

செவ்வாய், 3 மே, 2011

மகாலக்ஷ்மி

மாத கடைசி தேதி
கடன்காரர் வீட்டு வாசலில்
பிள்ளைகள் படிப்புக்காக
தண்டல்காரர் வீட்டு வாசலில்
சம்பள பாக்கி வாங்க
முதலாளி வீட்டு வாசலில்
தவமாய் தவம் கிடப்பவளின்
பெயர் மகாலக்ஷ்மி ......

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

அப்பாவும் நானும்


ஏசி காரில் சொகுசு பயணம்
தூசி படாமல் பயணிக்கும் அனுபவம்
ரயிலிலோ பேருந்ததிலோ நெரிசலில்
அவதியுற அவசியமில்லை
பயணம் என்னவோ சுகமானது தான்
ஆனால் .........
கால்கடுக்க காத்திருந்து பேருந்தில்
இடிபடாமல் பாதுகாத்து
கையிருப்பெல்லாம் கரைந்தாலும்
பிள்ளைகளின் முகமலர்வை மட்டுமே
கருத்தாக கொண்டு கதை சொல்லியே
நடக்க வைத்து வீடு கொண்டு வந்து
சேர்க்கும் அப்பாவுடனான பயணங்கள்
அளித்த ஆனந்தம் இல்லை
இன்றைய பயணங்களின் போது .......

சனி, 23 ஏப்ரல், 2011

அடிமை

பக்கத்து வீட்டு குழந்தையின்
குறும்பை ரசித்தாள்
பெற்றோரிடம் தொலைபேசியில்
நலம் விசாரித்தாள்
மண்டி கிடக்கும் புதர்களை
அகற்றி தோட்டத்தை அழகுபடுதினாள்
பிள்ளைகளின் படைப்புகளை
பொறுமையுடன் ரசித்தாள்
இவையெல்லாம் நடந்தது
மின்சாரம் தடைபட்டு அவள்
சீரியல் பார்க்க முடியாத
ஒரு மாலை பொழுதினில் ........

வியாழன், 21 ஏப்ரல், 2011

வாழ்வை தொலைத்தவர்கள்


திரைகடல் ஓடி திரவியம்சேர்த்தாலும்
போதுமென்ற மனதுடன்
சந்தோஷமாய் வாழ்ந்தனர் அன்று
வலைகடலில் மூழ்கி
இறுதி காலம் வரை திரவியம்
தேடுகின்றனர் இன்று ......

காலம் நேரம் பாராமல்
கணினி முன் பணிபுரிகின்றனர்
வீட்டுகடனுக்கும் வாகனகடனுக்கும்
பிள்ளைகளின் கல்விக்கும்
ஆடம்பர தேவைகளுக்கும்
தன் வாழ்வை அடமானம் வைக்கின்றனர் .....

அன்பு,பாசம்,நேசமென்றால்
தேவையில்லாத பேச்சு என்கின்றனர்
கணினியில் உழன்று உழன்று
இயந்திரமாய் மாறி போனவர்கள்
சொத்துக்கள் சேர்கின்றன
பிள்ளைகள் வளர்ந்து தன்வழியே போகின்றனர் ....

பணத்தின் பின்னே போனவர்கள்
தன்னந்தனியே வாழ்கின்றனர்
வங்கியின் இருப்பை கொண்டு
வைத்தியர்களின் துணையோடு
இழந்த வாழ்வை எண்ணி கொண்டு ......

புதன், 13 ஏப்ரல், 2011

குடும்ப தலைவி

திருமணமானதும் மாறியது
எனக்கு பிடித்தமான வண்ணங்கள் ,
உணவுகள் ,ஆசைகள் கணவரது
எண்ணங்களுகேற்றபடி .....

கணவருக்காக காட்டன் புடவைகளும்
பிள்ளைகளுக்காக நாகரீக உடைகளும்
மாற்றி கொண்டதில் மறைந்தே போனது
எனது பட்டுப்புடவை மோகங்கள் ......

கணவரது உறவினர்களையும்
பிள்ளைகளது தோழர் தோழிகளையும்
நேசிக்கும் பொழுதினில் நினைத்து
பார்க்கிறேன் தொலைந்து போன எனது
சொந்தங்களையும் தோழிகளையும் .......

பிள்ளையின் அலைபேசி அவனுக்காகவும்
பெண்ணுடைய அலைபேசி அவள் சொந்தமாகவும்
கணவர் அலைபேசி அவரது நண்பர்களுக்காகவும்
ஆகி போனதில் எனது அலைபேசி மட்டும்
பொதுவானது எனக்கெதுவும் அந்தரங்கம்
இல்லையென கூறி.......

கணவரது விருப்பதிற்காக அவர்
உறவினர் வீடுகளுக்கும்
பிள்ளைகள் விருப்பதிற்காக குளிர்
பிரதேசமும் பயணப்பட்டு களைத்ததில்
நிறைவேறாமல் போனது எனது அருவியில்
நனையும் ஆசைகள் .....

அலுவலகத்தில் கணவரும்
கணினி முன் பிள்ளையும்
தொலைக்காட்சிப் பெட்டியின் முன் மகளும்
முடங்கிப்போனதால் அடுப்படியே
உலகமாகிப் போனது எனக்கு ........

கடலில் இட்ட பெருங்காயாமாய்
என் கனவுகளை குடும்பத்தில் தொலைத்து
'நான்' என்ற சுயத்தை தொலைத்து பெற்றதோர்
பெயர் 'அருமையான குடும்ப தலைவி '

திங்கள், 11 ஏப்ரல், 2011

சிறகுகள்


ஒவ்வொரு இறகாய்
கோர்த்து பறக்க கற்றுகொடுத்தேன்
ஒவ்வொரு முறையும் இறகை
கோர்க்கும் போதும்
சிறகை விரித்து நீ பறப்பாய்
என எண்ணி காத்திருந்தேன்
உயர பறக்கவில்லை நீ
பிறகு உண்மை புரிந்தேன்
பறப்பதற்கு இறகுகள்
மட்டும் போதாது
மனதும் முயற்சியும் வேண்டும் என.....

வியாழன், 24 மார்ச், 2011

எல்லை கோடு


ஒவ்வொரு கல்லாக அடுக்கி
கட்டவில்லை உன்மேல்
எனது காதல் கோட்டையை
ஒவ்வொரு கல்லாக உருவி
தகர்த்தாய் என் இரும்பு மனதை.....

கடந்து போன யாரிடமும்
கொண்டதில்லை இந்த மயக்கம்
உன்னை கடந்து போக இயலவில்லை
பெண் மனதிலே கலக்கம் ....

தொண்டை குழியின் உள்ளே
போக இயலாதவாறு உணவையும்
இமைகளின் உள்ளே நுழைய
விடாமல் உறக்கத்தையும் கெடுத்தாய் ....

எல்லைகள் தாண்டாமல்
இருக்க பழகியவள் தான்
இன்று வேண்டுகிறேன் என்
எல்லை நீயாக இருக்க வேண்டுமென.......

சனி, 19 மார்ச், 2011

மனம்

பிள்ளைகள் படிக்கவில்லை என்றால்
நான் கற்பிப்பதில் குறை என்கிறாய்
வேலையாட்கள் பணிபுரியவில்லை என்றால்
நான் கண்காணிப்பதில் குறை என்கிறாய்
தொழிலில் நீ தோல்வியுற்றால்
என் ஆலோசனையில் தவறென்று சொல்கிறாய்
குடும்பத்தில் பிரச்சனைஎனில்
என் கட்டுகோப்பில் குறை என்கிறாய்
என் சமையல் ருசிக்கவில்லையெனில்
என் கவனத்தில் குறைஎன்கிறாய்
எவ்வளவு குறைகள் நீ கூறினாலும்
உன் விஷயத்தில் நிறை தான் எனக்கு
நீ என்பதே எதுவுமில்லை
நான் தான் உனக்கு எல்லாமே என்று ......

திங்கள், 14 மார்ச், 2011

முதலாளியம்மா


அவர்கள் இருவருக்கும்
ஒரே விதமான உரிமைகள்
ஏசி காரில் இருவருக்கும்
சொகுசு பயணங்கள் உண்டு
ஆடை அலங்காரங்கள்
குறைவில்லாமல் உண்டு
தேவைக்கு அதிகமாகவே
வித விதமான உணவுகள் உண்டு
இருவருக்குமே முதலாளியின்
படுக்கையறையில் இடமுண்டு
இருவரையுமே தன் அந்தஸ்தின்
அடையாளம் என்பார் முதலாளி
இருவருமே அவரை எதிர்த்து பேசுவதில்லை
அவர் சொல்லுக்கு அடங்கி
நடப்பது தான் இருவருக்கும் வேலை
அந்த இருவரில் ஒருவரை மட்டும்
முதலாளியம்மா என்றும்
மற்றொருவரை ஜிம்மி என்றும்
பெயர் சொல்லி அழைப்பதுண்டு........

வியாழன், 10 மார்ச், 2011

அம்மாவிற்கு பிறந்தநாள் பரிசு

அம்மா ..................
புரியாத வயதினில் இருந்தே
இப்பெயரிட்டே அழைக்கிறேன் உன்னை
உனகென்று இருந்த ஒர்பெயரை
தொலைத்து விட்டாய் திருமணமானதும்
இளவயதினில் மணம் புரிந்ததும்
இன்னாரின் மனைவி என்றும்
பிள்ளைகளாய் நாங்கள் பிறந்ததும்
எங்களின் தாய் என்றுமே அறியபட்டாய்.......

தீராத பஞ்சத்தின் பிடியினில்
வயிறு காய்ந்து நீ கிடந்த போதிலும்
எங்கள் வயிறு காயாதிருக்க
உன் ஊனுயிர் கரைத்து நீ உழைத்தாய் ....

கூலி கொடுத்து தைத்து தர
வழி இல்லாத நாட்களிலும்
பண்டிகை புதுத்துணி நாங்கள் உடுத்திட
இரவெலாம் கண்விழித்து நீ தைத்து தந்தாய் ....

பூப்ப்பைய்து நாங்கள் பெரியவர்கள் ஆனதும்
பூக்களினால் ஜடை தைத்து
நீ அழகு பார்த்தாய் ஆனால்
அன்றிலிருந்து நீ உன் அழகான நீள கூந்தலை
கொண்டை முடித்து பூக்களை மறந்தாய் .....

அழகாய் புடவையுடுத்தி அலங்காரம்
நாங்கள் புரிய ஆரம்பித்ததில் இருந்தே
நீ உன் அலங்காரங்களை துறந்து
வயதை அதிகமாக காட்டி கொண்டாய் ......

இப்போது நான் உணர்கிறேன் அம்மா
அம்மா என்கிற வார்த்தையின் பின்னால்
தியாகங்களும் அதனால் ஏற்படும் வலிகளும்
உள்ளதென்பதையும் தியாகங்கள் புரிகையில்
உனக்கும் வலித்திருக்கும் என்பதையும்........

எத்தனையோ பிறந்தநாள் பரிசுகள் நீ எனக்கு
கொடுத்திருக்கிறாய் என்னால் முடிந்த
கவிதை பரிசை உனக்கு அளிக்கிறேன் அம்மா
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...........

திங்கள், 7 மார்ச், 2011

பெண்விடுதலை


அதிகாலை எழுந்து
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும் உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட .........

சனி, 19 பிப்ரவரி, 2011

வேலைக்காரி


உயர் தர ஜாதி நாயை
சங்கிலி பிடித்து
தெருவோரம் அழைத்து சென்று
கழிவுகள் கழித்ததும் வீடு கொண்டு
வந்து சேர்க்கும் பணக்கார வீட்டு
வேலைகாரியின் பிள்ளை கிடக்கிறது
சிறுநீரில் நனைந்தபடி
துடைத்து விட ஆளில்லாமல் .....

கடிகாரம்


கடை கடையாய் தேடி பார்த்தேன்
உன் கைகளில் மிளிரும் அழகான
கடிகாரம் போல் வாங்கிட ....
தேடி அலுத்து கிடைக்காமல்
சோர்ந்த போது தான் புரிந்தது
அழகு அந்த கடிகாரத்தில் இல்லை என்பதும்
உனது கைகளில் அது உள்ளதால்
தான் அது அழகு என்பதும் ......

சனி, 12 பிப்ரவரி, 2011

காதலியின் தேவை


என் மவுனங்களையும் எண்ணங்களையும்
சொல்லில் வராத வார்த்தைகளையும்
கண்களின் மொழியில் புரிந்து
கொள்ளும் இதயம் தேவை .....

ஏதேதோ எண்ணங்களில் புரண்டாலும்
கண்ணுறங்கும் வேளையில்
என்னுருவம் இமைகளில் பொருத்தி
உறங்கும் இதயம் தேவை ....

என் கண்ணோரம் துளிர்க்கும்
சிறுதுளி கண்ணீரையும்
உணர்ந்து கலங்கி தவிக்கும்
அன்பு இதயம் தேவை ....

மொத்தத்தில் என்னையும் நேசிக்கும்
இதயம் தேவையில்லை
என்னை மட்டுமே நேசிக்கும்
காதல் இதயம் தேவை .....

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

குழந்தை


அம்மா அடித்ததற்காக
அழும் குழந்தையின்
அழுகையின் பின்னால்
ஒளிந்திருக்கிறது வாங்காமல்
போன விளையாட்டு பொருட்களும்
உடைந்து போன பொம்மைகளும்
அழைத்து போகாத இடங்களுக்குமான
ஏக்கங்களின் மிச்சங்கள் ....

தவறு

தவறுகள் செய்யாமல்
பெறும் ஒவ்வொரு
தண்டனையின் போதும்
மனசாத்தான் ஓடுகிறது
தவறுகளை நோக்கி .....

வெள்ளி, 21 ஜனவரி, 2011

அம்மா

உற்சாகமாய் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர் அனுவும் அவளது தோழி சுனிதாவும் .தன் தாயை தோழிக்கு அறிமுகப்படுத்தும் ஆவலில் அனுவும் தன் ஆத்மார்த்த கதாநாயகியான அனுவின் தாயை பார்க்க போவதில் சுனிதாவும் மிக ஆவலாக இருந்தனர் ...

அனுவுக்கு தன் தாயை பற்றி மிகுந்த பெருமிதம்உண்டு.சமையலில்,கைவேலையில், வெளிவேலைகளில்,தன் சிநேகிதிகளுடன் தோழி போல் பழகுவதில்,தன் தாய்க்கு இணை யாருமில்லை என பெருமிதம் கொண்டவள் அவள் ...

வீடு வந்து சேர்ந்ததும் தோழியை அமர வைத்து விட்டு தாயை தேடி போனாள் அனு.சுனிதா வீட்டை சுற்றி நோக்கினாள். அனு அம்மாவின் கைவண்ணத்தில் அழகாய் நேர்த்தியாக அலங்கரிக்க பட்டிருந்தது. அனுவின் அம்மா போல் அருமையாக சமைத்து தோழிகள் அனைவருக்கும் அன்பாக கொடுத்து அனுப்பும் மனம் யாருக்கும் வராது என் எண்ணினாள் சுனிதா ..சுனிதா தாய் இல்லாத பெண் ....

அனுவின் தாய் வந்ததும் சுனிதா புன்னகையுடன் உற்சாகமாக "ஹாய் ஆன்ட்டி" என்றாள்.ஹாய் என்று மெல்லிய புன்னகையுடன் எதிரில் அமர்ந்து நலன் விசாரித்தாள்..சிறிது நேரத்தில் உட்புறமாக சென்று இருவருக்கும் சிற்றுண்டி கொண்டு வந்தாள்..பின் உள்ளே சென்றவள் வரவேயில்லை ..சுனிதாவுக்கு சப்பென்று ஆகி விட்டது ..தோழியை போல் பழகுவாள் என எதிர்பார்த்து வந்தவள் அவளது இயல்பை பார்த்ததும் சுருங்கி போனாள ..சிறிது நேரம் கூட இருக்க பிடிக்காமல் உடனே கிளம்பி விட்டாள்..

அனுவுக்கு கண்ணீர் முட்டி கொண்டு வந்தது ..தன் தாயின் இன்றைய நடவடிக்கை
புரியாமல் தவித்தாள் அவள் ..தாயின் அருகில் வந்து கோபத்துடன் காரணம் கேட்டாள் அனு .புன்னகையுடன் பதிலளித்தாள் அவள் தாய் .."இதோ பார் அனுமா அவள் தாய் இல்லாத பெண் என்னை தன் கதாநாயகியாக நினைப்பதாக நீயே பல முறை கூறி இருக்கிறாய் ..இன்று அவளிடம் நான் தோழி போல் நெருக்கமாய் பழகினால் அவளுக்கு என்மேல் இன்னும் நேசம் அதிகமாகும் ..தன் தாய் இல்லாத சோகமும் .உன் தாயை பற்றிய பெருமையும் சேர்ந்து அவளுக்கு உன்மேல் பொறாமையை உண்டு பண்ண கூடும் அதன் காரணமாக உங்கள் நட்பில் விரிசல் உண்டாகலாம் ,அதனால் தான் நான் அப்படி நடந்து கொண்டேன்.இதனால் அவள் என்னை பற்றி தவறாக நினைத்தாலும் பரவாயில்லை ..அவள் மனதில் ஏக்கமும் பொறாமையும் உண்டாக நான் காரணமாக வேண்டாம் என்று தான் விலகி இருந்தேன் ..உங்கள் நட்பு என்றும் இது போல் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம் .என்று கூறிய தாயை இன்னும் அதிக பெருமையோடு பார்த்து ரசித்தாள் அனு ....

புதன், 19 ஜனவரி, 2011

தொலைந்த காதல்


தொலைந்து போன
பொருட்கள் எல்லாம்
என்றோ ஒரு நாள் கிடைத்தது
கிடைக்காத பொருட்களை
விலைகொடுத்து
வாங்கி கொண்டேன்
தேடி பார்த்தும் கிடைக்காத
விலை கொடுத்ததும்
வாங்க முடியாமல் தவிக்கும்
நான் தொலைத்த அரிய பொருள்
உன் காதல் .........

தாய்மனம்


கீழே நழுவும் ஒவ்வொரு
நேரமும் இறுக பற்றுகிறேன்
பிடி நழுவி விடுமோ
என்று பரிதவிகிறேன்
பனிக்காற்று பாதிக்குமோ
என் சேலை இழுத்து
மூட தவிக்கிறேன்
முன் செல்லும் வாகனத்தில்
தாய் மடி மீது பத்திரமாக
பயணிக்கும் குழந்தை தான்
இருந்தும் தவிக்கிறது தாய் உள்ளம .......

செவ்வாய், 11 ஜனவரி, 2011

புகைப்படம்


இறந்து போன அம்மாவின்
நகைகள் எல்லாம்
அண்ணியின் கழுத்தை அலங்கரித்தன ....

புடவைகள் எல்லாம் அண்ணியின்
பீரோவில் அழகாய் அடுக்கப்பட்டன ....

அம்மாவின் சொத்து பத்திரங்கள்
அண்ணாவின் பெட்டியில் பதுங்கின ...

பாட்டியின் கட்டிலையும் பீரோவையும்
ஆளுக்கொன்றாய் பகிர்ந்து கொண்டனர்
அண்ணனின் பிள்ளைகள் ......

அம்மாவின் புகைப்படமொன்று
தரப்பட்டது என்னிடம்
இறந்தவர்களின் புகைப்படம்
வீட்டில் மாட்ட கூடாதென்ற விளக்கத்துடன் .......

வியாழன், 6 ஜனவரி, 2011

காயம்


காயம் படும் வேளைகளிலெல்லாம்
உன்னை எண்ணி கொள்கிறேன்
நீ தந்த வலியை எண்ணி கொண்டால்
வேறெந்த வலியும் பாதிப்பதில்லை
என்னை பெரியதாக ....

திங்கள், 3 ஜனவரி, 2011

ரணம்

உன்னை போலவே
ஆயிரம் சுடுசொல்
தெரியும் எனக்கு ......
உன்னை போலவே
நாக்கில் சவுக்குண்டு எனக்கும் ....
உன்னை போலவே
மனதை ரணமாக்கும்
தேள் கொடுக்கு நாக்குண்டு எனக்கும் ....
ஆனால் அதை எல்லாம்
பயன்படுத்த முடியாதபடி
தடுக்கிறது உன்னிடம் இல்லாமல்
என்னிடம் மட்டுமே இருக்கும்
அளவில்லாத அன்பு ...
அது ஏற்கிறது உன் தவறுகள்
அனைத்தையும் புன்னகையோடு ......