வெள்ளி, 29 ஏப்ரல், 2011

அப்பாவும் நானும்


ஏசி காரில் சொகுசு பயணம்
தூசி படாமல் பயணிக்கும் அனுபவம்
ரயிலிலோ பேருந்ததிலோ நெரிசலில்
அவதியுற அவசியமில்லை
பயணம் என்னவோ சுகமானது தான்
ஆனால் .........
கால்கடுக்க காத்திருந்து பேருந்தில்
இடிபடாமல் பாதுகாத்து
கையிருப்பெல்லாம் கரைந்தாலும்
பிள்ளைகளின் முகமலர்வை மட்டுமே
கருத்தாக கொண்டு கதை சொல்லியே
நடக்க வைத்து வீடு கொண்டு வந்து
சேர்க்கும் அப்பாவுடனான பயணங்கள்
அளித்த ஆனந்தம் இல்லை
இன்றைய பயணங்களின் போது .......

சனி, 23 ஏப்ரல், 2011

அடிமை

பக்கத்து வீட்டு குழந்தையின்
குறும்பை ரசித்தாள்
பெற்றோரிடம் தொலைபேசியில்
நலம் விசாரித்தாள்
மண்டி கிடக்கும் புதர்களை
அகற்றி தோட்டத்தை அழகுபடுதினாள்
பிள்ளைகளின் படைப்புகளை
பொறுமையுடன் ரசித்தாள்
இவையெல்லாம் நடந்தது
மின்சாரம் தடைபட்டு அவள்
சீரியல் பார்க்க முடியாத
ஒரு மாலை பொழுதினில் ........

வியாழன், 21 ஏப்ரல், 2011

வாழ்வை தொலைத்தவர்கள்


திரைகடல் ஓடி திரவியம்சேர்த்தாலும்
போதுமென்ற மனதுடன்
சந்தோஷமாய் வாழ்ந்தனர் அன்று
வலைகடலில் மூழ்கி
இறுதி காலம் வரை திரவியம்
தேடுகின்றனர் இன்று ......

காலம் நேரம் பாராமல்
கணினி முன் பணிபுரிகின்றனர்
வீட்டுகடனுக்கும் வாகனகடனுக்கும்
பிள்ளைகளின் கல்விக்கும்
ஆடம்பர தேவைகளுக்கும்
தன் வாழ்வை அடமானம் வைக்கின்றனர் .....

அன்பு,பாசம்,நேசமென்றால்
தேவையில்லாத பேச்சு என்கின்றனர்
கணினியில் உழன்று உழன்று
இயந்திரமாய் மாறி போனவர்கள்
சொத்துக்கள் சேர்கின்றன
பிள்ளைகள் வளர்ந்து தன்வழியே போகின்றனர் ....

பணத்தின் பின்னே போனவர்கள்
தன்னந்தனியே வாழ்கின்றனர்
வங்கியின் இருப்பை கொண்டு
வைத்தியர்களின் துணையோடு
இழந்த வாழ்வை எண்ணி கொண்டு ......

புதன், 13 ஏப்ரல், 2011

குடும்ப தலைவி

திருமணமானதும் மாறியது
எனக்கு பிடித்தமான வண்ணங்கள் ,
உணவுகள் ,ஆசைகள் கணவரது
எண்ணங்களுகேற்றபடி .....

கணவருக்காக காட்டன் புடவைகளும்
பிள்ளைகளுக்காக நாகரீக உடைகளும்
மாற்றி கொண்டதில் மறைந்தே போனது
எனது பட்டுப்புடவை மோகங்கள் ......

கணவரது உறவினர்களையும்
பிள்ளைகளது தோழர் தோழிகளையும்
நேசிக்கும் பொழுதினில் நினைத்து
பார்க்கிறேன் தொலைந்து போன எனது
சொந்தங்களையும் தோழிகளையும் .......

பிள்ளையின் அலைபேசி அவனுக்காகவும்
பெண்ணுடைய அலைபேசி அவள் சொந்தமாகவும்
கணவர் அலைபேசி அவரது நண்பர்களுக்காகவும்
ஆகி போனதில் எனது அலைபேசி மட்டும்
பொதுவானது எனக்கெதுவும் அந்தரங்கம்
இல்லையென கூறி.......

கணவரது விருப்பதிற்காக அவர்
உறவினர் வீடுகளுக்கும்
பிள்ளைகள் விருப்பதிற்காக குளிர்
பிரதேசமும் பயணப்பட்டு களைத்ததில்
நிறைவேறாமல் போனது எனது அருவியில்
நனையும் ஆசைகள் .....

அலுவலகத்தில் கணவரும்
கணினி முன் பிள்ளையும்
தொலைக்காட்சிப் பெட்டியின் முன் மகளும்
முடங்கிப்போனதால் அடுப்படியே
உலகமாகிப் போனது எனக்கு ........

கடலில் இட்ட பெருங்காயாமாய்
என் கனவுகளை குடும்பத்தில் தொலைத்து
'நான்' என்ற சுயத்தை தொலைத்து பெற்றதோர்
பெயர் 'அருமையான குடும்ப தலைவி '

திங்கள், 11 ஏப்ரல், 2011

சிறகுகள்


ஒவ்வொரு இறகாய்
கோர்த்து பறக்க கற்றுகொடுத்தேன்
ஒவ்வொரு முறையும் இறகை
கோர்க்கும் போதும்
சிறகை விரித்து நீ பறப்பாய்
என எண்ணி காத்திருந்தேன்
உயர பறக்கவில்லை நீ
பிறகு உண்மை புரிந்தேன்
பறப்பதற்கு இறகுகள்
மட்டும் போதாது
மனதும் முயற்சியும் வேண்டும் என.....