சனி, 20 ஜூலை, 2013

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 8}

இன்று அவுட்ஷ்ரோமில் உள்ள ஆஸ்ட்ரீச்(நெருப்புகோழி ) பண்ணைக்கு சென்றோம்.அதன் முட்டை ஓடு மிக பலமாக இருக்கிறது அதன் மேல் ஏறி நின்றாலும் அது உடைவதில்லை ..முன்பெல்லாம் அதன் இறகுகள் தங்கத்திற்கு இணையாக விற்பனை ஆகியதாம்..வெள்ளையர்கள் அதை அணிவதில் மிக பெருமை கொண்டார்களாம்..உலக போருக்கு பின் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையால் இறகு வாங்குவதை நிறுத்தியதால் அந்த தொழில் நசிந்து விட்டதாம் .. அடுத்ததாக காங்கோ கேவ்ஸ் சென்றோம்..மிக பிரமாண்டமாய் இருக்கிறது , 2000 ஆண்டுகளாக தன்னால் உருவான அந்த குகையை அழகாக அலங்காரபடுத்தி உள்ளனர்..உள்ளே செல்ல ஒருவருக்கு 540 ரூபாய் வசூல் செய்கின்றனர் ஒவ்வொரு குரூப் ஆட்களுக்கும் ஒரு கைடு வந்து அழகாய் விளக்கம் அளிக்கிறார்.பொறுமையாகவும் அன்பாகவும் பேசுகின்றனர் ..டிப்ஸ் கொடுத்தாலும் மறுத்து விடுகின்றனர் ..குகையின் உள்ளே சிறிது தூரம் மட்டுமே செல்ல முடிகிறது அதன் பிறகு உள்ள இடங்களில்  ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டுமே செல்லலாம்  என்பதால் நாங்கள் செல்லவில்லை ..ஆங்காங்கே மின் விளக்கின் ஒளியில் அந்த குகை பார்ப்பதற்கு ஆங்கில படங்களில் புதையல் தேடி செல்லும் இடம் போல் இருக்கிறது ...மூச்சு விட சிறிது சிரமமாக உள்ளது ..அங்கிருந்து ஜார்ஜ் சென்றோம் மிக அழகான ஊர் மலை அதன் அருகில் கடல் அதை ஒட்டியே வீடுகள் அங்கு வசிபவர்கள் மிக அதிர்ஷ்டசாலிகள் இயற்கையின் அழகை எல்லாம் ஒருசேர அனுபவிக்கிறார்கள்  ...ஜார்ஜ் பென்னிட் என்பவர் தனது அழகான மனைவியை காதலனிடம் இருந்து பிரித்து சிறை வைக்க 1850 ல் கண்டுபிடித்த அழகிய இடம் ..மனைவியை காண வந்த அவனது தலையை வெட்டி விட்டதாகவும் அவனது ஆவி இன்றும் தலை இல்லாமல் இப்போதும் அங்கே சுற்றுவதாகவும் நம்புகின்றனர்.....












தொடரும்.....

ஞாயிறு, 14 ஜூலை, 2013

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 7}

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 7}

       இரண்டாம் உலக போருக்குப் பின்  கேப் டவுனில் மக்கள் தொகை அதிகமாகி  இட பற்றாகுறை ஏற்பட்டதால் 196ஏக்கர் அளவில் கடல் நீரை பின்னுக்கு தள்ளி நிலமாக்கி உள்ளனர்.கேப் டவுனில் இருந்து வோர்செஸ்டேர் என்னும் செல்லும் பாதையை இரு வழியாக பிரித்து உள்ளனர், மலையை சுற்றி இயற்கையை ரசித்து கொண்டே செல்ல ஒரு பாதையும்,மலையை குடைந்து நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்க பாதையும் அமைத்துள்ளனர் நாங்கள் சுரங்க பாதையில் பயணித்தோம் பாதை  முழுக்க வெளிச்சமும் ஆபத்து நேரத்தில் தப்பிக்க அவசர வழியும் ஏற்படுத்தி உள்ளனர்  ,.வழி எங்கும் ஒயின் தயாரிக்கும் இடங்கள் உள்ளது ..எல்லோருக்கும் இலவசமாக ருசிப்பதற்க்கு கொடுகிறார்கள்..அடுத்து கேப் பாயிண்ட் என்னும் இடம் சென்றோம் ..வரலாறு பாடத்தில் நாம் படித்த வாஸ்கோடகாமா என்னும் போர்த்துகீசிய மாலுமி கண்டுபிடித்த நன்னம்பிக்கை முனை என்னும் இடம் இது தான்..இந்தியாவை கண்டறிய வந்த அவருக்குஇந்த முனை  நம்பிக்கையை ஏற்படுத்தியதால் இந்த பெயர் வந்தது.. பழங்கால கல் படிகட்டுகள்,கலங்கரை விளக்கம்,மூன்று பக்கமும் கடல் என அழகோடு மிளிர்கிறது நன்னம்பிக்கை முனை..அடுத்து நாங்கள்  காங்கோ வைல்ட் லைப் ரேஞ்சு போனோம்.ஆப்ரிக்கா நாட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகை மிக கொடுமையான விஷம் கொண்ட பாம்புகள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளன, வெள்ளை சிங்கம்,புலி,சிறுத்தை வகைகள் உள்ளன.அடுத்து ஆஸ்ட்ரிச் தலைநகரம் என அழைக்கப்படும் "அவுட்ஷர்ம்"   என்னும் இடத்திற்கு சென்றோம் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இடம் ஆகையால் குளிர் மிக அதிகமாக உள்ளது..வெள்ளைகார பெண்மணிகள் சமையல் செய்கிறார்கள் கறுப்பர் இன மக்கள் மற்ற வேலைகளை செய்கிறார்கள்.பீப்,செம்மறி ஆடு,தான் முக்கிய உணவு ,சிக்கன் கறியும் பச்சையாக இருக்கிறது.பிரட் மற்றும் பழம் மட்டுமே பல நேரங்களில் எங்களது உணவாக இருந்தது ...நன்றாக உண்ணும் பழக்கம் உள்ள எங்களுக்கு உணவு பெரும் பிரச்சனையாக இருந்தது ........











தொடரும்.

வியாழன், 4 ஜூலை, 2013

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 6}

டேபிள் மௌன்டைன் மேல் இருந்து பார்க்கும் போது திரு.நெல்சன் மண்டேலா அவர்கள் சிறை வைக்கப்பட்டு இருந்த ராபின் தீவை பார்க்கலாம் ..அங்கிருந்து சென்று பார்லிமென்ட் பார்த்தோம்.டச்சுகாரர்கள் கம்பெனி வைத்திருந்த போது உருவாக்கிய கார்டன் தற்போது  கம்பெனி கார்டன் என அழைக்கப்பட்டு இன்றும் பல வகையான பழமைமிக்க மர,செடி வகைகளுடன் பராமரிக்கபடுகிறது.1968 ல் டச்சுகாரர்கள் காலத்தில் இந்தியா மற்றும் மலேஷியாவில் இருந்து குடியேறியவர்கள் கட்டிய வீடுகள் இன்றும் பாதுகாக்கபடுகிறது ..அவர்களின் முதல் துறைமுகமாகிய   castle of good hope பார்த்தோம் ..அங்கே ஆங்கிலேயர்கள், டச்சு,மற்றும் அவர்களை ஆண்டவர்கள் ஏற்றிய கொடி கம்பங்கள் மட்டும் இருக்கிறது ..1994 இல் திரு.நெல்சன் மண்டேலா அவர்கள் ஏற்றிய அந்நாட்டின்  புதிய கொடி பறக்கிறது..அங்கிருந்து houtbay என்னும் இடத்திற்கு போனோம் மூன்று பக்கமும் மலைகள் நடுவில் கடலும் இதுவரை பார்த்திராத வகையில் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் மனதை மயக்குகிறது.hout என்பது வுட் என்னும் அர்த்தம் .தேக்கு மரங்கள் நிறைந்துள்ள இடம் என்பதால் அந்த பெயர் வைத்துள்ளனர்...அங்கிருந்து அடுத்து boulders பீச் சென்றோம்,ஆப்பிரிக்காவில் வேறெங்கும் காண முடியாத .அண்டார்டிகா வில் இருந்து இங்கு பரவிய பென்குயின் இங்குள்ள கடற்கரையின் ஒரு பகுதியில் பரவி இருக்கிறது ..அங்கிருந்து கார்டன் ரூட் என்னும் வழயில் பயணக் செய்தோம் பெயருக்கு ஏற்றார் போல் அவ்வளவு அழகான பாதை, பயணத்தில் ஒரு சலிப்பான நேரம் கூட வருவது இல்லை ..தோட்டங்களும் பசுமையான மலை முகடுகளும் ,சில்லென்ற சீதோஷனமும் ஐநூறு கிலோ மீட்டர் பயணம் செய்ததே தெரியாமல் கடந்து வந்தோம்...அழகாய் கோட் போட்டு கொண்டு நம் கார் அருகில் வரும் பிச்சைகாரர்கள் குட்மார்னிங் சொல்லி உடனே நகர்ந்து சென்று விடுகின்றனர் ....நாம் விரும்பினால் அழைத்து கொடுக்கலாம்...மலைசரிவு ஏற்ப்படாமல் இருக்க மலைப்பாதையில் தூண்கள் அமைத்து அரண் அமைத்து உள்ளனர் ...மக்கள் பாதுகாப்பில் மிக அதிக அக்கறை கொண்டுள்ளனர்...டோல்கேட்டில் பண பரிவர்த்தனை கிடையாது எல்லோரும் கார்டு தேய்த்து கொண்டு போக வேண்டும்...

திங்கள், 24 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் [ சவுத் ஆப்ரிக்கா 5}


    10 நாள் பயணம் தொடங்கினோம் முதலில் கேப்டவுன் போனோம்..சவுத் ஆப்ரிக்காவின் மூன்று தலைநகரங்களில் ஒன்றான கேப்டவுன் மிக அழகான ஊர் ...மிக சுத்தமான ஊரும கூட .நகரத்தில் நுழைந்ததும் முதலில் கண்ணில் படுவது டேபிள் மௌன்டென் என்னும் மலை ..அழகான மலை மேல் மேகத்தை வைத்து போல் இருக்கிறது,முதலில் வாட்டர் பிரண்ட் என்னும் இடத்திற்கு சென்றோம் ,அங்கு தான் ஆர்பர் உள்ளது, துறைமுகம் போல் இல்லாமல் பொழுதுபோக்கு இடம் போல் உள்ளது..மிக பெரிய ராட்டினம் ,குழந்தைகள் விளையாட்டு இடம், ஹோட்டல்கள் இருக்கிறது  .டச்சுக்காரர்கள் வந்த கப்பலை பார்வையிட வைத்திருக்கிறார்கள் ..இங்கே ராமேஸ்வரத்தில் தூக்கும் பாலம் உள்ளது போல் அங்கு நகரும் பாலம் அமைத்து இருக்கிறார்கள் ..படகு வரும் நேரத்தில் நகர்ந்து வழி விடுகிறது .கடந்ததும் திரும்ப பழைய இடத்திற்கு வந்து பொருந்தி விடுகிறது..அடுத்து டேபிள் மௌன்டன் மேல் கேபிள் கார் மூலம் சென்றோம் அருமையான அனுபவம் 1067 அடி உயரத்தில் சில்லென்ற மேகத்தின் ஊடே நடந்து சென்று மேலிருந்து கேப்டவுன் அழகை பார்க்க இரண்டு கண்கள் போதாது ...மலை,கடல் ,ஊர் மூன்றும் சேர்ந்து பார்க்கும் போது நிச்சயம் இயற்கையின் அதிசயத்தை வியக்காமல் இருக்க முடிவதில்லை ..











திங்கள், 17 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா 4 }

எங்களது மகன் முதன்முறையாக எங்களை அவனது பயிற்சி விமானத்தில் அழைத்து சென்றான்.அவன் அருகில் அமர்ந்து பயணம் செய்வது மிக வித்தியாசமாக இருந்தது .அருகில் உள்ள கிம்பர்ளே என்னும் ஊருக்கு அழைத்துசென்றான்.மேல் இருந்து பார்க்கும் போது அழகான வட்ட வடிவில் தெரிகிறது  விவசாய நிலங்கள்..தண்ணீர் பாய்ச்ச ஏதுவாக  வட்ட வடிவில் விவசாயம் செய்கிறார்கள் .கிம்பர்ளே வைர சுரங்கத்திற்கு பெயர்ப்பெற்ற ஊர்.அங்கு முன் காலத்தில் மனிதர்களாலே தோண்டப்பட்ட{MAN MADE HOLE} சுரங்கத்தை பார்த்தோம்...பிளெமிங் பறவை நிறைந்து இருந்த{FLEMING BIRD DAM} அணை பார்த்தோம்..நாம் கார் பார்கிங் செய்வது போல கிம்பர்ளே ரன்வேயில் விமானத்தை நிறுத்தி விட்டு அதற்கான பார்கிங் கட்டணத்தை செலுத்தி விட்டு ஊருக்குள் சென்றோம்.பெரிய மால்கள் உள்ளது எல்லா பொருட்களுமே விலை மிக அதிகமாக உள்ளது .அங்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம்.வெறும் உருளைகிழங்கு சிப்ஸ் கொஞ்சம் மீன் பச்சை காய்கறிகள் இது தான் மதிய உணவு ..மீன் வேண்டாம் என்றால் சிக்கன் மட்டன் பீப் அதுவும் பார்க்க பச்சையாகவே இருக்கிறது ...சாப்பாடே வேண்டாம் என்று மில்க்ஷேக் குடித்தேன்..பள்ளிக்கு திரும்பியதும் DJ வீட்டுக்கு சென்றோம்.மிருகங்களின் உடலை பாடம் செய்து வைத்துள்ளார்கள்.ஆஸ்ட்ரிச் மற்றும் மாட்டு பண்ணை வைத்து வளர்கிறார்கள் .எப்போதும் குளிராகவே இருப்பதால் மனதும் லேசாக இருக்கிறது ...மே மாதம் அதுவுமாய் வெயிலில் இருந்து தப்பித்து சில்லென்று இருந்தோம்.....