வியாழன், 19 ஜூன், 2014

பயணங்களின் பதிவுகள் (அந்தமான் பாகம் 1)

   அந்தமான் பயணதிற்கு போக முடிவு செய்ததுமே அங்கே என்ன இருக்கிறது அது வெறும் தீவு அதில் மரங்களும் மணல்வெளி மட்டுமே இருக்கும் என பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர்.நாமும் போய் அதை பார்த்து விட்டு வருவோம் என்று கிளம்பினோம்...அந்தமான் ஏர்போர்ட் மிக சிறியதாக இருந்தது ..அனலும் சென்னைக்கு குறைவில்லாமல் இருந்தது..உணவு வகைகள் விலை அதிகம் இல்லை ..ஹோட்டல் அறைகளும் நியாமான வாடகையில் கிடைக்கிறது...முதலில் செல்லுலார் ஜெயில் பார்த்தோம்..பாழடைந்து போன சிறை அறைகள் மிக சிறிய அளவினில் இருந்தது வெளிச்சம் வர சிறிய ஜன்னல் ஒன்றும் உள்ளது ...அதனுள் நின்று புகைப்படம் எடுத்து கொண்டோம்... நாம் இப்படி சுதந்திரமாய் சுற்றி திரிய தம் வாழ்க்கையையே இந்த சிறிய அறையினுள் தொலைத்த பல்லாயிரம் தியாகிகளை நினைவு படுத்தாமல் இருக்க முடியவில்லை..தூக்கு மேடையும் ,செக்கிழுத்த இடமும் அதை மேற்பார்வைட வெள்ளையர்கள் அமர்ந்திருந்த நாற்காலியும் அப்படியே இருக்கிறது ...முதலில் சக்கர வடிவில் கட்டப்பட இந்த சிறை இயற்கையின் சீற்றத்தால்  அழிந்து இப்போது ஒரு பகுதி மட்டும் மிச்சம் உள்ளது ..மாலை நேரத்தில் லேசர் ஒலி ஒளி அமைப்பு மூலம் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த சிறையினில் பட்ட அடிகள். சித்ரவதைகள் இவற்றை ஒளிபரப்புகின்றனர்




கேட்பவர்கள் கண்கலங்குகின்றனர்....தியாகிகளின் நினைவாக அணையா விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது...சிறை வாழ்கையை கண்காட்சியாக வைத்து இருகின்றனர் அதை பார்க்கும் போது அந்த காலத்திற்கே  சென்று வந்தது போல் உணர்ந்தோம் .........தொடரும் 

சனி, 31 மே, 2014

புதன், 28 மே, 2014

இவள் அவளல்ல .....


"புன்னகை இல்லா இம்முகம் அவளுடையதில்லைகோபம் அவளது குணமில்லைபிறர் துயர் கடந்து நடந்திடும் மனதில்லை அவளுக்குஅந்தஸ்து பார்த்து நேசம் கொள்ளதெரியாது அவளுக்கு வெறுப்பாய் உமிழும் வார்த்தைகள் அவளுடையதில்லை" சுயம் மென்று தின்று கணவனின் பிம்பம் பிரதிபலிக்கும் இவள் அவளல்ல......

ஞாயிறு, 18 மே, 2014

மௌனப்பாறை


"உனக்கும் எனக்கும் இடையில்
மௌனம் அமர்ந்திருக்கிறது
ஒரு பாறையென"

"நீ விலக்க நினைக்கையில்நானும்
நான் விலக்கிட நினைக்கையில்
நீயும் இறுக்க பற்றி இருந்தோம் "


"இன்றிருவருமே தவித்திருக்கிறோம்
அப்பாறை உடைத்திட வழியின்றி"


"காலம் கடந்து கொண்டிருந்தாலும்
காத்து கொண்டிருக்கிறோம் "


என்றேனும் ஒரு நாள்
அப்பாறை சிறகு முளைத்து
தானாய் பறக்குமென .....

ஞாயிறு, 11 மே, 2014

               அன்னையர் தின வாழ்த்துக்கள் 


அவள் மட்டுமே அறிவாள்

"பிள்ளைகளின் புன்னகைக்கு
பின்னே மறைத்திருக்கும் 
வருத்தங்களை "

"சிரித்த முகத்தினுள் புதைதிருக்கும் 
சோகங்களை"

"மனதில் புதைதிருக்கும்
ரகசியங்களை "
"பிறர் மேல் காட்ட இயலாத 
கோபங்களின் சுவடுகளை"
"தோல்விகளின் வலிகளை"

"தாங்கிட இயலா மனபாரங்களை"
"முகமூடியினுள் புதைந்திருக்கும் 
பிள்ளைகளின் நிஜமுக தரிசனங்களை 
அவள் மட்டுமே அறிவாள்"

அவள் தான் 

அம்மா .........


வியாழன், 8 மே, 2014

பயணங்களின் பதிவுகள்( ஊட்டி )

      சில வருடங்களுக்கு முன் ஊட்டி ஒரு சொர்க்கபுரி ,மலை ஏறும் வழி எங்கும் நிறைந்திருக்கும் தேயிலை தோட்டங்கள் பசுமையின் வழிநடத்தி நம்மை அழைத்து செல்லும் ..உடலை ஊடுருவும் குளிர் இறுக்க போர்த்தி கொள்ள சொல்லும் ...சூரிய வெப்பம் எவ்வளவு முயன்றாலும் நம்மை தாக்க முடியாமல் தோற்று போகும் ..இரவில் குளிர் வாட்டி விடும் ....அடுக்கி வைத்து போல் வளர்ந்து நிற்கும் தேயிலை தோட்டங்களின் இடையே நடப்பது அப்படி ஒரு சந்தோஷம் அளிக்கும்.....பொட்டானிக்கல் தோட்டம் புல்தரை பஞ்சு மெத்தை விரித்தது போல் பரந்து கிடக்கும் அனைவரும் அதில் உருண்டு புரண்டு விளையாடி உலகை மறப்பார்கள் ..கால்கள் புதைய அதில் நாள் முழுவதும் நடந்தாலும் களைப்பு என்பதே தெரியாது ... மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா இதன் மேல் இருந்து  பார்க்க டெலஸ்கோப் இருக்கும் அதன் வழியாக ஊட்டி குன்னூர் கோத்தகிரி இவற்றின் அழகை ரசிக்கலாம் ...ஊசியென குத்தும் குளிருக்கு இதமாய் சூடான சோளம் ,வேர்கடலை,சுண்டல் விற்பார்கள் .. நேரம் போவதே தெரியாமல் அங்கு அமர்ந்து இருப்பது மனதுக்கு அமைதியாக இருக்கும்...அடுத்து பைகாரா நீர்வீழிச்சி கரை புரண்டு ஓடும் தண்ணீரை காண்பது அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்..ஊட்டி படகு துறை குடும்பம் குடும்பமாக படகு சவாரி செய்வது என ஊட்டி நம்மை புதியதாய் பிறந்தது போல் உற்சாகமாக உணர வைக்கும் ...இதெல்லாம் ஒரு காலம் இன்றைய ஊட்டியின் நிலையே வேறாக உள்ளது எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் ....எங்கேயாவது ஓரிரு இடங்களின் தான் தோட்டங்களை பார்க்க முடிகிறது ...பசுமையை அழித்து கட்டிடங்கள் ஆக்கி விட்டதால் வெப்பம் கொளுத்துகிறது ...பகல் பொழுது சூரியன் சுடுகிறது ...நாம் சென்னையில் இருகிறோமோ என்றே என்ன தோன்றுகிறது ...இரவிலும் குளிர் தாக்குவதில்லை ....அடைத்து வைத்து போல் மூச்சு முட்டுகிறது...எங்கு பார்த்தாலும் ட்ராபிக் மலை பாதை என்பதால் பயணத்திலேயே நேரம் வீணாகிறது ...பொட்டானிக்கல் தோட்டம் காய்ந்து போய் உட்கார இடம் இல்லாமல் சேறாக உள்ளது ...தொட்டபெட்டாவில் டெலஸ்கோப் பழுதாகி விட்டதால்எடுத்து விட்டார்கள் ...கழிப்பிடங்களில் தண்ணீர் வசதி இல்லை...நீர்வீழ்ச்சி என்ற பெயர் தான் உள்ளது அதில் தண்ணீர் இல்லை ...படகு துறையில் திறமை உள்ளவர்களுக்கே முன்னுரிமை ...மொத்தத்தில் மலைகளின் ராணி பாரம் தாங்க முடியாமல் மூச்சு திணறுகிறாள் ...அவளை சற்று இளைப்பாற விடுவோம்..... ஊட்டி செல்வதை தவிர்ப்போம் ....





  

சனி, 26 ஏப்ரல், 2014

பயணங்களின் பதிவுகள் (சிம்லா மணாலி)

கோடைக்கு இதமாக சிம்லா மணாலி பயணம் பற்றி எழுதுகிறேன் ...      பெரும் எதிர்பார்போடு சென்ற சிம்லா சிறிது ஏமாற்றமே அளித்தது சிம்லாவில் ஹோட்டல் ரூம் வாசலில் இருந்து நிமிர்ந்து பார்த்தால் மலை மேல் அடுக்கி வைத்து போல் கட்டிடங்கள் நிற்கிறது...குளிர் அதிகமாக இல்லை ஊட்டி குளிர் போல் இதமாக இருந்தது...அங்கிருந்து குப்ரி  என்ற இடத்திற்கு சென்றோம் ..அது ஒரு மலை பாதை குதிரை மேல் ஏறி அரைமணி நேரம் பயணம் ...மலை பாதையில் பழக்கமான குதிரை வேகமாக போகிறது ..எங்கே கால் தவறி பள்ளத்தில் விழுந்து விடுமோ என்கிற  பயத்துடனே பிரயாணம் செய்தோம் ..ஆனாலும் மிக ரசித்து பயணித்தோம் ...அங்கிருந்து மணிக்கரன்  சென்றோம் அங்கு குளிர்  சற்று அதிகமாக இருந்தது அங்குள்ள வெந்நீர் ஊற்றில் குளித்தோம் ..சில்லென்ற பியாஸ் நதியில் வெந்நீர் ஊற்று பார்க்க மிக ரம்மியமாக இருந்தது ...வழி எங்கும் ஆப்பிள் மரங்கள் இருக்கிறது நாங்கள் சென்ற நேரம் பழங்கள் இல்லை வெறும் மரங்களை மட்டும் பார்த்தோம் ...அங்கிருந்து  அடுத்து மணாலி சென்றோம் செல்லும் வழி எங்கும் பியாஸ் நதி அழகை ரசித்து கொண்டே சென்றோம் ...மணாலியில் இரவு தங்கி இருந்தோம் ..மறுநாள் காலை கண்விழித்து வெளியில் வந்து பார்த்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது   கண்ணுக்கெட்டிய தூரம் முழுவதும் வெண்ணிற மலைகள் ..ஐஸ் மலை பார்த்ததும் அப்படியொரு பேரானந்தம் எங்களுக்கு ...சந்தோஷத்தில் துள்ளி குதித்து எல்லோரையும் எழுப்பி காண்பித்து எங்களது இன்பத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டோம் ...அங்கிருந்து ஜீப்பில் ரோதங் பாஸ் சென்றோம் அங்கு வழி எங்கும் பனிபாறைகள் வெட்டி அமைத்தது போல்  சாலை  இருந்தது ..அங்கு நிறைய கடைகள் உள்ளது அந்த கடைகளில் குளிர் தாங்கும் ஆடைகள் வாடகைக்கு கிடைக்கிறது ...அதை எடுத்து மாட்டி கொண்டு நடப்பது நிலவில் நடப்பது போல் கடினமாக இருந்தது ....பனி மலையின் மீது சிரமப்பட்டு ஏறி செல்லும் போது கால்கள் புதைந்து பல முறை வழுக்கி விழுந்தோம் ...புதைந்த கால்களின் ஷூவின்  உள்ளே பனி கட்டிகள் போனதும் முதலில் சில் என்று இருந்தாலும் சிறிது நேரத்தில் வலிக்கிறது...ஒருவர் வீழுந்தால் மற்றவரையும் சேர்த்து இழுத்து பனியில் உருண்டு ஒருவர் மீது ஒருவர் பனியை வாரி அடித்து விளையாடி மகிழ்ந்தது மறக்க முடியாத பயணமாக அமைந்தது .......(முக்கியமாக இந்த புகைப்படம்.... நான் விழுந்ததும் என் கணவரையும் சேர்த்து விழ வைத்து விட்டேன்  ..விழுந்ததையும் கொண்டாடும் நானும் என் கணவரும் ..அவமானமாக கருதிய என் மகள் என்னமா இது எழுந்திருமா என்று சலிப்பதையும் என் மகன் இதை பார்த்து ரசித்து சிரிப்பதும் மறக்க முடியாத எனக்கு மிகவும் பிடித்த புகைப்படமாக அமைந்து விட்டது ....)