திங்கள், 2 ஏப்ரல், 2018

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

பயணங்களின் பதிவுகள் ஒகேனகல் மசினகுடி ....2






மே மாதம் மட்டுமே பெரும்பாலும் பயணம் செல்லும் நாங்கள் இந்த மாதம் சென்றது என் மகனால்...அவன் நண்பர்களுடன் செல்ல ஏற்பாடு செய்திருந்த டூரில் எங்களையும் சேர்த்து கொண்டான்...பிள்ளைகள் போகும் பயணத்தில் எப்படி போவது என்று தயங்கிய எங்களை .... பிள்ளைகள் தயக்கமே இல்லாமல் சேர்ந்து போகலாம் என்று உற்சாகமாக சொன்னார்கள்....
முதலில் சென்னையில் இருந்து தருமபுரி சென்று ஒகேனகல் சென்று சேர்ந்தோம்....மெயின் அருவி பரிசல் சவாரி என்று ஏற்கனவே இரண்டு முறை போன இடம் தான் ...இந்த முறை வித்தியாசமான அனுபவமாக இருந்தது ...மெயின் அருவியில் தண்ணீர் அதிகமாக போவதால் பரிசலை சினி பால்ஸ் இருக்கும் பக்கம் மட்டுமே இயக்குகிறார்கள்....அதுவும் புதுவிதமாக அழகாக இருக்கிறது ....பரிசலில் பயணித்து அங்கிருந்து அருவி விழும் அழகை ரசித்து பின் சினி பால்சில் குளித்து மாலை வரை இளைப்பாறி பின் பரிசலில் திரும்பினோம் ...சினி பால்ஸ் அழகான சிறிய அருவியாக இருந்தாலும் நீர் விழும் வேகம் அதிகமாகவே இருக்கிறது .....எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விடுவதும் சமைத்து தருவதையும் அங்குள்ளவர்கள் சுயதொழிலாக செய்து வருகிறார்கள்....விருப்பமுள்ளவர்கள் அவர்களை அணுகலாம் ......குளித்து சாப்பிட்டு அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினோம்......தொடரும்

பயணங்களின் பதிவுகள் (ஒக்கனகல் மசினகுடி )

பயணங்களின் பதிவுகள்





சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு டூர்....சென்னையில் இருந்து ஒகேனக்கல் அங்கிருந்து மசினகுடி மீண்டும் சென்னை .....நான்கு நாட்கள் பிளான் செய்து கொண்டோம்.....
பயணம் செல்ல முதலில் வேண்டியது மனது .... வீட்டை பூட்டும் போதே நம் பிரச்சனைகளையும் கவலைகளையும் சேர்த்து பூட்டி விட்டு கிளம்புங்கள்....வந்துதும் மீண்டும் புத்துணர்வோடு சுமக்கலாம் ....ஒரு இடத்திருக்கு பயணம் போகும் என்பது போய் சேரும் இடம் மட்டும் அல்ல போகும் பாதை கூட தான்...அதை மனதில் வைத்து கொண்டு பயணியுங்கள் .....முன்பெல்லாம் இரண்டு வழி பாதை தான் அதில் வழி முழுவதும் மரங்கள் , கடைகள்.... எங்கு வேண்டுமென்றாலும் நின்று விரும்பியதை வாங்கி கொண்டு மரநிழலில் ஓய்வெடுத்து கொண்டு சென்ற அந்த பயணங்கள் தான் இனிமை....இப்போதெல்லாம் நான்கு வழி பாதை என்றாலும் வறண்டு போன மரங்கள் அற்ற கடைகள் அற்ற அந்த பாதைகள் பிடிப்பதேயில்லை ....முடிந்த அளவு மாற்று பாதைகளை தேடுவதே என் வேலை....
முன்பு பல விதங்களில் மேப் வாங்கி வைத்திருப்பேன்...போகும் வழியை அதில் ஸ்கெட்ச் செய்து வைத்து கொண்டு பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து கொண்டே வருவேன்....இப்போ அறிவியல் அதை எளிதாக்கி விட்டது ...கூகுளே எல்லா இடத்திற்கும் எளிதாக வழி காட்டி விடுகிறது ....கூகுளின் உதவியோடு இம்முறை கிளம்பினோம்...முதலில் ஒக்கேனக்கல்.......தொடரும்

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

சில பயணங்களும் சில படிப்பினைகளும் (வயநாடு )

   கேரளாவின்  வயநாட்டில் எங்கேயும் தங்கி ரசிக்க வேண்டிய தேவையே இல்லை ...வாகனத்தில் சுற்றி வருவதே அவ்வளவு அழகான காட்சி....எங்கும் நிறைந்திருக்கும் பச்சை ..பயணம் நீண்டு கொண்டே இருக்காதா என்று நினைக்க வைக்கும்...பகலில் இதமான வெயிலும் இரவில் மழையும் பெய்கிறது அங்கு நண்பர் ஒருவர் வீட்டில் தங்கினோம்...அடர்ந்த காடு போல மிளகு கொடியும் காப்பி தோட்டங்களும் நிறைந்திருக்கும் பகுதியின் நடுவில் அமைதிருந்தது அவ்வீடு ...பள்ளமென இறக்கத்தில் இறங்கி செல்ல வேண்டும்  ...அங்கு இருந்தவர்கள் காரை நெடுஞ்சாலையில் விட்டு வரலாம் இரவில் மழை பெய்யும் என்றும் கார் மேலே செல்ல முடியாது என்றும் கூறினார்கள் ...அப்பொழுது கார் வாங்கி 2 வருடம் தான் ஆகி இருந்தது ...அதன் மேல் நம்பிக்கை வைத்து அவர்களிடம் எங்கள் கார் எங்கேயும் சுலபமாக ஏறி விடும் என பெருமை பீத்தலாக  சொல்லி காரை  அங்கேயே நிறுத்தினோம்...இரவெல்லாம் பெய்த மழையில் பாதை முழுவதும் சேறாகி விட்டது...கார் ஏற முடியவில்லை வெகு நேரம் முயற்சித்த பின் டிராக்டரில் கட்டி இழுத்து நெடுஞ்சாலையில் நிறுத்தினார்கள் .....ஒரு இடத்திற்கு செல்லும் போது அங்கே வசிப்பவர்களின் யோசனையை கேட்டு நடப்பது தான் நல்லது என புரிந்து கொண்ட பயணம் .......

சனி, 25 மார்ச், 2017

ஒதுங்கி கிடக்கும் முந்தானையை 
சரி செய்கிறாள் ஒருத்தி 
கை அசைத்து சிரிக்கிறது 
குழந்தை ஒன்று 
வெள்ளை கோட்டின் உள்ளே செல்கிறான் 
இரு சக்கர ஓட்டி ஒருவன் 
சாலை தாண்ட முன்னெடுத்த காலை 
பின்னெடுத்து வைக்கிறான் பாதசாரி 
முன்செல்லும் பேருந்தின் கண்ணாடி வழியே
பார்கிறார் பேருந்தின் ஓட்டுனர் 
அவர் அவருக்கென எண்ணுகின்றனர் 
பின் வரும் காரின் 
ஒற்றை ஒலி கேட்டவர்கள் .....

செவ்வாய், 14 மார்ச், 2017

அம்மாவின் எழுபதாவது பிறந்தநாளைக்கு என்ன பரிசளிப்பது என்று சற்றே குழப்பமாக இருந்தது ...எது அவர்களுக்கு சந்தோஷம் தரும் என யோசித்து பார்த்த போது ஒரு யோசனை வந்தது....அவர்களது அப்பா வைத்த தென்னை மரத்தை பற்றி இன்றும் அம்மா   பெருமையாக பேசி கொண்டு இருப்பார்கள்...அது போல் இவர்களது கையால் மரம் நாளைய தலைமுறையினர் இதை பற்றி பேசி இவரை நினைவில் வைத்து கொள்ள வகைசெயயலாமே என்று முடிவு செய்து அதற்கு தேவையான மரகன்றுகள் உரம் எல்லாம் வாங்கி சென்று பரிசளித்தோம் ...உண்மையாகவே அம்மா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள் ... அம்மாவின் பிறந்தநாள் அன்று அவரது கைகளாலே மரங்களை நட செய்தோம் ...அவருக்கு மிக பிடித்த விஷயத்தை பரிசளிததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.....

ஞாயிறு, 5 மார்ச், 2017

பயணங்களின் பதிவுகள் தேனி மாவட்டம் (வீரபாண்டி )

      இந்த இடத்தை பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை ....அந்த வழியாக மேகமலை செல்லும் போது வழயில் நீரோடும் இந்த இடத்தை பார்த்ததும் மறுநாளே போக முடிவெடுத்தோம்....பம்ப் செட்டை பார்த்தாலே விடாத நாங்கள் இவ்வளவு அழகிய இடத்தை பார்த்ததும் மறுநாள் கிளம்பி போனோம் ...கோவில் அருகில் செல்லும் இந்த ஆற்றில் சபரிமலை செல்லும் சாமிகளே அதிக அளவில் வருகின்றனர்....ஓடும் ஆற்றில் குளிக்காமல் நீர் வழியும் இடத்திற்கு கொஞ்சம் சிரமப்பட்டே சென்றோம்....வழி எங்கும் திறந்தவெளி கழிப்பறை போல இருக்கிறது...அதை சீர்படுத்தி விட்டால் மிக அழகான இடம் இது ...வழிந்தோடும் தண்ணீரின் உள்ளே அமர்ந்து குளிக்கையில் விழும் தண்ணீர் நம் முன் கண்ணாடி போல் தெரிகிறது ....மிக அழகான அனுபவமாக இருக்கிறது .....இது போன்ற நீரோட்டத்தை இதற்கு முன் பார்த்ததில்லை என்பதால் மிகவும் ரசித்தோம் .....அதிக அளவில் கூட்டம் இல்லாத நேரமாக இருந்ததால் நிம்மதியாக குளித்தோம்.......நகராட்சி ஒரு கழிப்பறை அமைத்தால் இது  ஒரு  அழகிய சுற்றுலாத்தளமாக இருக்கும் .....