ஞாயிறு, 22 ஜூன், 2025

பயணங்களின் பதிவுகள் தாய்லாந்து 4

 





டைகர் ஷோ முடிந்ததும் திரும்ப அதே வண்டியில் கொண்டு வந்து பார்க்கிங் கில் விட்டுவிட்டார்கள்.... டிரைவர் ஹோட்டலில் கொண்டு வந்து டிராப் பண்ணினாங்க.. அது ஒரு இண்டியன் ரிசார்ட் அங்கே ரெஸ்ட் எடுத்துட்டு மதிய லன்ச் அங்கேயே முடிச்சுட்டு அடுத்து கிளம்பி போன இடம் பட்டாயா ஃபுளோட்டிங் மார்க்கெட்... கூட வந்த டிரைவர் டிக்கெட் கொடுத்துட்டு வாசலில் விட்டுவிட நாங்க ரெண்டு பேரும் உள்ளே போனோம்... படகின் இருபக்கமும் கடைகள் படகில் பயணிச்சுகிட்டே வேண்டியதை வாங்கலாம்... ஒரிஜினல் மார்க்கெட் பாங்காங் கில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகவும் அதன் நகலை இங்கு உருவாக்கி டூரிஸ்ட் ஸ்பாட் ஆக்கி விட்டதாகவும் சொல்கிறார்கள்... எங்களுக்கு இது புதிய விஷயமாக இருந்ததால் அதில் பயணித்தது மிக மகிழ்ச்சியான நேரமாக  இருந்தது....ஒரு சுற்று சுற்றி இறக்கி விட்டதும் நடைபாதையில் திரும்ப ஒரு ரவுண்டு கடைகளை சுற்றி வந்தோம்...ஆனால் எதுவும் வாங்கும் விலையில் இல்லை... வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு வரலாம்...ஏதாவது சாப்பிடலாம்னு  பார்த்தால் எங்கேப் பார்த்தாலும் முதலைகறி தான் பிரதானமா இருக்கு...சரி பிரட் டோஸ்ட் சாப்பிடலாம் னு போனால் முட்டை கூட வெள்ளை நிறத்தில் இல்லாமல் பிரவுன் கலரில் இருக்கிறது ... அதிலும் வாழைபழம் இல்லையெனில் மாம்பழம் சேர்த்து டோஸ்ட் போட்டு தருகிறார்கள் ரிஸ்கே வேண்டாமென்று ஆளுக்கொரு ஜூஸ் மட்டும் குடித்து விட்டு வெளியேறினோம்..... வெளியே வரும் வழியில் தாய்லாந்தின் பாரம்பரிய உடையணிந்து புகைப்படம் எடுத்து கொள்ள ஒரு இடம் வைத்திருக்கிறார்கள்... விருப்பமெனில் எடுத்துக் கொள்ளலாம்...பாரம்பரிய நடன நிகழ்ச்சி ஒன்றும் நடந்து கொண்டிருந்தது...நின்று ரசித்து பார்த்து விட்டு கிளம்பினோம்.....அங்கிருந்து அடுத்த நிகழ்ச்சியாக நாங்கள் சென்றது அல்காசர் ஷோ எனும் வண்ணமயமான  நிகழ்ச்சி ஒன்றுக்கு.... தொடரும்

பயணங்களின் பதிவுகள் (தாய்லாந்து 3)



 


பாங்காங் ஏர்போர்டில் இறங்கி நேராக இமிக்ரேஷன் போனோம் அதற்கான பேப்பர்ஸ் தனித்தனியா ஃபைல் பண்ணி ஆளுக்கு 10000 பாத் கையில் வச்சுக்கிட்டு போய் நின்னால் ஒரு லேடி வந்து ஃபேமிலியானு கேட்டுட்டு ஒருத்தர் நின்னா போதும் னு சொல்லி என்னை வெளியே  அனுப்பிட்டாங்க ... 2 நிமிடத்தில் மகளும் விசா எடுத்துட்டு வந்துட்டா...விசாவுக்கு இருவருக்கும் 4400 பாத் வாங்கினார்கள்...எந்த கேள்வியும் கேட்காமல் பேப்பர்சும் பார்க்காமல் உடனே விசா கொடுத்துட்டாங்க...(இதுக்கு மகன் ஆபிஸ் ரூமில் எடுத்து கொடுத்த ஜெராக்ஸ் சரியில்வைனு வெளியே வேற எடுத்துட்டு வர சொல்லி அடம் புடிச்சு கொண்டு வந்தேன்)  பேக்கேஜ் எடுத்துட்டு உடனே வெளியே வந்துட்டோம்... ஏர்போர்ட் உள்ளேயே கண்ணாடி கதவுக்கு முன்பே  வெளியே நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் டிரைவருக்காக ஒரு போர்டில் நம் பெயர் ஒட்டியிருக்கறார்கள் நாம் போய் நம் பெயரை சொன்னதும் டிரைவருக்கு இன் ஃபார்ம் பண்றாங்க... கார் நம்பர் சொன்னதும் நானும் மகளும் காரிடம் போனோம் சிரித்த முகத்துடன் வணக்கம் தெரிவித்து சூட்கேஸ் ஏற்றினார் டிரைவர்... 1 மணி நேரம் பயணத்திற்கு பின் காஃபி என்ற டிரைவரிடம் எஸ் என்றேன்... நிறுத்திய இடத்தில் வரிசையாக கடைகள்... 7 மணிக்கு எல்லா கடைகளிலும் கறியின் வாடை..புதுசுபுதுசா கறியில் என்னென்னவோ செய்து வைக்கிறார்கள்....வேடிக்கை பார்த்துக்கிட்டே  Cafe Amazon ல் போய் 2 பேரும் காஃபி குடிச்சிட்டு திரும்ப  வண்டி ஏறும் போது தான் கவனிச்சேன்  டிரைவர் ஒரு லேடினு..சரினு பேச்சு கொடுத்தால் அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாதாம்   .... இங்கு பெரும்பாலானோர் தாய்  thai மொழி மட்டுமே தெரிந்திருக்கிறார்கள்... ஆங்கிலத்தில் பேசினால் புரிவதில்லை.. சைகை மொழி தான் உதவுகிறது... அங்கிருந்து நேராக நாங்கள் போன முதல் இடம் டைகர் பார்க் .... அங்கேயே பிரஷ்அப் பண்ணிட்டு   பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட  அங்கேயே இன்டியன்ஃபுட்  புக் பண்ணியிருந்தாங்க ...

 சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும்  zoo வண்டியில் ஏறி உள்ளே உள்ளே போனோம்... இறங்கியதும் முதலில் முதலை பண்ணை அதன் பிறகு புலி கூண்டு என பார்த்து கொண்டே போனோம்... விரும்புபவர்கள்  முதலைக்கு உணவு வாங்கி போடலாம்... புலிகளுடன் புகைப்படம் எடுக்கலாம் ... புலிகளின் வகைகேற்ப கட்டணம் வசூலிக்கிறார்கள்.... 10.30 மணிக்கு டைகர்ஷோ நடத்தினார்கள்... புலிகளை நன்றாக பழக்கி சர்க்கஸ் வித்தை காட்டுகிறார்கள்...ஆனால் இந்த புலிகளை பார்க்கும் போது ரொம்ப பாவமாக தான் இருந்தது... ஒவ்வொரு வித்தை முடிந்ததும் ஒரு துண்டு உணவு தருகிறார்கள் அதற்காக அவையும் பூனை  போல விளையாடுதுங்க இதை பார்த்தால் எனக்கொரு பாடல்தான் நினைவுக்கு வருகிறது 

வயத்துக்காக மனுஷன்(புலிகள்) இங்கே கயித்தில் ஆடுறான் பாரு ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு......புலிகளுக்கு கூட இந்த நிலைமை தான் போல....தொடரும்

திங்கள், 15 ஏப்ரல், 2024

பயணங்களின் பதிவுகள் (தாய்லாந்து 2)

 


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. என்பதகேற்ப பயணத்துக்கான ஏற்பாடுகளை பண்ண ஆரம்பித்தோம்...
முதலில் தாய்லாந்து பயணத்திற்கு தேவையான டிக்கெட்... விசா.. தாய்லாந்து பாத்(பணம்) மாற்றுவது என முதற்கட்டவேலைகள் தொடங்கினோம் ...டிக்கெட் ரெடி..அடுத்து விசா ஆன்லைனில் எடுப்பதை விட அங்கேயே போய் ஆன்அரைவல் விசா எடுப்பது தான் ஈஸி என்று சொன்னதால்அதை அங்கேயே எடுக்கலாம்னு முடிவெடுத்தாச்சு..டிராவல்ஸில் இருந்து பட்டாயா வில் 2 நாள் பாங்காங்கில் 2 நாள் என  ரூம் புக் பண்ணி வவுச்சர் அனுப்பியிருந்தார் ...பணத்தை தாய்பாத்தாக ஒரு ஆளுக்கு 10000 பாத் என 20000 பாத் மாற்றி எடுத்துக் கொண்டோம் விசா விற்கு காட்ட இது அவசியம் ... விசா பார்ம் ,வெள்ளை பேக்கிரவுண்டில் 4 ஃபோட்டோ , பாஸ்போர்ட் காப்பி.தங்குமிடங்களின் பதிவுகாப்பி என எல்லாம் விசாவிற்கு ரெடி பண்ணி ஃபைல் பண்ணி வைத்து கொண்டோம்..இதற்கு நடுவில் தாய்லாந்தா போறிங்க வேற ஊருக்கு போகலாம்ல என்று முகத்தை சுழித்து கேட்வர்களிடம் ஹி ஹி என மழுப்பினாலும் அய்யய்யோ என்ன இப்படி சொல்றாங்கனு கொஞ்சம் குழப்பமாவும் ஆயிடுச்சு..அவ்வளவு கெட்ட பேர் எடுத்து வச்சிருக்கு அந்த ஊர் 🤣.பையனும் மருமருகளும் தாய்லாந்து க்கு நாங்க கியாரண்டினு சொன்ன பிறகு தான் தெளிவாச்சு..அப்புறம் தான் முக்கியமான விஷயம் ஷாப்பிங் 😝மகளும் மருமகளும் பார்த்து பார்த்து எடுத்து தந்த புது டிரஸை எல்லாம் சூட்கேஸ்ல போட்டு பேக் பண்ணி மகளும் நானும் முதன்முறையா குடும்பத்தை விட்டு தனியா கிளம்பியாச்சு....மகன் மருமகள் பேத்தி ஏர்போர்ட் வந்தாங்க கணவர் வீட்டு வாசலில் இருந்து வழியனுப்பும் போதே கண்ணெல்லாம் கலங்கிட்டார் போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே னு பாடாத குறைதான்😜...)ஏர்போர்ட் இப்போ மிக பெரியதா இருந்தாலும் ரொம்ப காலியா இருக்க மாதிரி ஃபீலாகுது... ஏர்போர்ட் பார்மாலிட்டிஸ் எல்லாம் ஸ்மூத்தா முடிஞ்சு மூன்றரை மணிநேர பயணத்தில் பாங்காங்  Don Muang airport ல் போய் இறங்கினோம்..... தொடரும்

#Thailand #Motherdaughter #Travelstories

புதன், 26 ஜூலை, 2023

பயணங்களின் பதிவுகள் (தாய்லாந்து 1)

 



Life is unpredictable
இந்த வரிகள் எவ்வளவு உண்மையானது என்பதை உணர்த்திய பயணம்✈
20 நாட்களுக்கு முன் இப்படி ஒரு விஷயம் நடக்கும் னு சொன்னால் நம்பியிருக்க வே மாட்டேன்...
என் வாழ்க்கை முதலில் அப்பா பிறகு கணவர் இப்பொழுது மகன் இப்படி ஆண்களை சார்ந்ததாகவே இருந்தது அதுவும் கணவரின் ஆளுமை மிக அதிகம் திருமணமாகி 32 வருமாகிறது இதுவரை ஒருநாள் கூட அவரில்லாமல் தனியே நான் போனதே கிடையாது அம்மா வீட்டிற்கு கூட சேர்ந்தே போவோம்... கடைக்கு போனால் கூட 10 போன் போடுவார் எங்கே போனாலும் சாயங்காலத்துக்குள் வீட்டுக்குள் வந்து டனும் இப்படி எல்லாம் இருந்தவர் இப்ப கொஞ்ச வருஷமா தான் ஷாப்பிங் போனால் அதிகம் போன் செய்வது கிடையாது 9 மணியானாலும் ஒண்ணும் சொல்வதில்லை... இப்படி இருந்தவர் திடீரென்று நீயும் மகளும் எங்கேயாவது வெளிநாடு போய்ட்டு வாங்களேன் என்றதும் சிரிச்சுட்டேன்... என்னை கிண்டல் பண்றார்னு அவர் நிஜமாவே சீரியசா சொன்னார்..மகனும் மருமகளும் ஏற்கனவே போய் வந்த இடம்  தாய்லாந்து..அதனால பையனும் ஏதாவது தாய்லாந்து  பேக்கேஜ் பாருமானு  சொன்னதும் இது கனவா நிஜமானு புரியாமல் ஷாக் ஆயிட்டேன்.... அனுப்பறாங்களோ இல்லையோ சும்மாவாச்சும் பார்க்கலாம்னு பார்த்தால் பெரிய டிராவல்ஸ் எல்லாம் கம்மியா ஆஃபர் போட்டிருந்தாலும் இடமும் ரொம்ப கம்மியா தான் போட்டிருந்தாங்க...... சரி வேற யாரையாவது பார்க்கலாம்னு  Facebook  ல 2 வருஷமா நான் ஃபாலோ பண்ற பேஜ் ல ஃபோன் பண்ணி பேசினேன் அவர் பேச்சில் நம்பிக்கை வரவே அவரிடம் நான் பார்க்க வேண்டிய இடங்களை லிஸ்ட் பண்ணி அனுப்பி வைத்ததும் அவர் பயணதிட்டமும் கட்டணமும் அனுப்பினார் கணவரிடம் காட்டியதும் உனக்கு ஓக்கேனா புரொசீட் பண்ணு ஆனா ஒரே ஒரு விஷயம் இந்த பயணத்தில் வர்ற எல்லா நல்ல கெட்ட விஷயங்களுக்கும் நீதான் பொறுப்பு னு குண்டை தூக்கி போட்டுட்டார்... சரிஓக்கே முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம் னு நினைச்சு பயண திட்டத்தை தொடங்கினோம்... தொடரும்

வியாழன், 6 ஜனவரி, 2022

பயணங்களின் பதிவுகள் ஏற்காடு 2022 (1)

  

     வருடம் தவறாமல் வரும் திருவிழா மாதிரி வருடம் தவறாமல் ஒரு டூர் போறது என்னுடைய பழக்கம்... ரெண்டு வருஷமா போக முடியாத சூழ்நிலை...ஆனால் இந்த






புத்தாண்டின்  முதல் நாளே நான் போன இடம் இந்த 2வருஷத்துக்கான சந்தோஷத்தையும் சேர்த்து  தரும்னு நினைச்சு கூட பார்க்கலை..... ஏற்காடு ஏற்கனவே 2010 ல் ஒருமுறை போய்ட்டு வந்த இடம் தான்...நார்மலா எப்பவும் போற டூர் மாதிரி தான் இருந்தது....அப்போ போனது மே மாதம்  க்ளைமேட் சில்லுனு இருந்தாலும் இந்த டிசம்பர் க்ளைமேட் தந்த சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியாது... சினிமாவில் வர்ற மாதிரி பனிபடர்ந்த இடங்களும் அமைதியான சூழலும் வார்த்தையில் வர்ணிக்க முடியாது... அதுவும் 1ம் தேதி வருஷபிறப்பு அதுவுமா  அண்ணாமலையார் கோயிலில் சிவன் தரிசனமும் அதை சுற்றி பனி சூழ்ந்த மலையும் அவ்வளவு அழகாக மனதை கொள்ளை கொண்ட இடமாக இருந்தது...வாழ்க்கையில் மறக்கவே முடியாத புத்தாண்டாக அமைந்தது இந்த பயணம்......

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

தோழி

ஊர் சுமையெல்லாம்
சேர்த்து சுமக்கிறாயே
என்று கடிந்து கொண்டே வந்தவள்
தானும் ஒரு சுமையை
தூக்கி வைக்கிறாள்
வீட்டில் சேர்ந்துவிட சொல்லி...
சூதனமாய் பிழைத்து கொள்
எனசொல்லி நகர்ந்தவளை
எந்த விதத்தில் சேர்ப்பதென
வழி மயங்கி நிற்க்கிறேன்......

புதன், 18 மார்ச், 2020

உலகை உலுக்கும் கொரோனா வைரஸும் அதை தடுக்க சில வழிகளும்

அனைவருக்கும் வணக்கம்.வணக்கம் என்கிற நல்ல பழக்கம் நம் இந்தியர்களின் பாரம்பரிய சொத்து .அதை உலகம் எங்கும் எல்லோரையும் ஏற்று கொள்ள வைத்திருக்கிறது இந்த கொரோனா .அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதற்கொண்டு அனைவரும் இப்பொழுது இந்த நல்ல பழக்கத்தை பின்பற்ற ஆரம்பித்து இருக்கின்றனர் ...யாரிடமும் கைகுலுக்காமல் அனைவருக்கும் வணக்கம் என்று சொல்வது இந்த வைரஸில் இருந்து தப்பிக்க முதல் வழி ..
கைகளின் மூலமே பெரும்பாலான வைரஸ் பரவுகிறது அதனால் கைகளை சுத்தமாக வைத்திருப்போம்..அடிக்கடி கைகளை கழுவி கொண்டு இருப்பதும் சானிடைசர் கொண்டு சுத்த படுத்துவதும் முடிந்த அளவு கைகளுக்கு உறை மாட்டி கொள்வதும் பொது இடங்களுக்கு செல்லும் போது கைகளால் அல்லாமல் முழங்கையின் துணையுடன் கதவை திறப்பதோ அல்லது மூடுவதோ போன்ற செய்லகளை செய்வதும் இதை தடுக்க முதல் வழி ...மூச்சு காற்றில் பரவாதவாறு முகத்தை மூடும்படி முகமூடி அணிந்து கொள்வது மிக பெரிய பயன் தரும் .பொது இடங்களுக்கு செல்லாமல் முடிந்த அளவு வீட்டின் உள்ளேயே இருக்க பாருங்கள் ...அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் ...உணவு வழக்கத்தை பொறுத்த அளவில் சிக்கனில் வருகிறது மட்டனில் வருகிறது என வரும் வதந்திகளை நம்பாமல் அரசு சொல்லும் செய்திகளை மட்டும் நம்புங்கள் சிக்கன் மட்டன் மீன் போன்ற உணவுகளை நன்கு வேக வைத்து பின் சாப்பிடவும் ...உணவில் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள் .மிளகு சீரகம் போன்ற அஞ்சறைப்பெட்டி மருந்துகளையும் அடிக்கடி உண்ணுங்கள் .இது கொரோனவை அழிக்கும் என்பதற்காக இல்லை பொதுவாகவே நம் பாட்டிகள் வைத்தியம் எந்த நோயும் இன்றி வாழ சொல்லி கொடுத்த நம் அடுப்பங்கரை முதலுதவி பொருட்கள் இவை தான் ..நம் உணவு தான் நமக்கு மிக பெரிய மருந்து .முடிந்த அளவு நாம் நம் முயறிச்சியில் வைரஸ் பரவாமல் தடுப்போம்..அதையும் தாண்டி சளி இருமல் காய்ச்சல் என ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் தாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செண்டு ஒரு பரிசோதனை செய்து கொள்வது அனைவருக்கும் நலம் தரும் ..குழந்தைகள் விடுமுறை விட்டதும் வெளியில் செல்ல விரும்புவது இயல்பு தான் அவர்கள் கவனத்தி திசை திருப்பி அவர்களுடன் பேசி பழகி விளையாடி கவனத்த்தை ஈர்த்து வெளியில் செல்ல விடாமல் தடுப்பது பெற்றோரின் கடமை..வயதானவர்களும் கோவில் குளம் என்று சுற்றாமல் வீட்டிலே இருக்க அறிவுறுத்துங்கள் .. குழந்தை என்றும் வயதானவர்கள் என்றும் பணக்காரன் என்றும் ஏழை என்றும் நோய்க்கு தெரியாது ..எனக்கு வராது என்று யாரும் அலட்சியத்துடன் இருக்காமல் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் நோயில் இருந்து நம்மை கொள்ளலாம் .எச்சரிக்கையுடன் இருப்போம் வைரஸை வெல்லுவோம் ..

சனி, 7 மார்ச், 2020

தேவதை ஒன்று பூமியில் பிறந்தது 
வண்ணங்கள் பல கொண்ட
 அழகிய சிறகோடு 
தந்தையென்றும்  தமயனென்றும் 
மாமனென்றும் 
காவல் காப்பதாய்  எண்ணி  
சிறகினை பிடித்து கொண்டதில் 
பறப்பென்பதே தெரியாதது அத்தேவதைக்கு 
மணமுடித்து கொடுத்த இடத்திலும் 
சிறகுகள் கைமாறி சென்றது 
குடும்பமென்றும் பிள்ளைகள் என்றுமானதில் 
சிறகுகள் மறந்தே போனதே அத்தேவதைக்கு 
இறுதியாய் தானொரு தேவதையென 
உணராமலே இவ்வுலகை  விட்டு போனது 
அந்த அழகிய தேவதை ....
   

தேவதைகளின் சிறகினை முறிக்காமல் வலிமையோடு பறக்க வைப்போம் இனிவரும் காலங்களில் ...அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ..






புதன், 4 மார்ச், 2020

மொறு மொறு முறுக்கு சுட சுட தயார்

ஒரு பண்டிகை வந்தா தான் பலகாரம் செய்யணுமா என்ன?...எப்போ எல்லாம் சாப்பிடணுமுன்னு தோணுதோ அப்பவே பலகாரம் பண்ணிடனும்...முறுக்கு செய்யறது மிக பெரிய வேலையா நினைச்சு தீபாவளி வந்தா தான் செய்வேன் முன்னே எல்லாம் ஆனா இப்போ அப்படி இல்லை நினைச்ச உடனே ஈஸியா செய்து சாப்பிடறேன் அது எப்படினு உங்களுக்கும் சொல்லி தரட்டுமா இப்போ ....
தேவையான பொருட்கள்

1 கிலோ பச்சரிசி
1/4 கிலோ உளுந்து
வெள்ளை எள்ளு 2ஸ்பூன்
வேர்க்கடலை 1/2 கிளாஸ்
உடைத்த கடலை 1/2 கிளாஸ்
வெண்ணை 1 கரண்டி
பெருங்காயம் 1 ஸ்பூன்
சீரகம் 2 ஸ்பூன்

செய்முறை

பச்சரிசியை கழுவி ஈரப்பதம் போக ஒரு வெள்ளை துணியில் போட்டு பேன் காதுல காய வச்சிடுங்க கையில பிடிச்சு பாத காய்ந்த மாதிரி இருக்கனும் அந்த மாதிரி வந்ததும் எடுத்து பாத்திரத்துல போட்டுக்குங்க ....உளுந்தை வாணலியில் போட்டு பொன்னிறமா ஆகிற மாதிரி வருது எடுத்துக்கோங்க...அதுல சீரகம் பெருங்காயம் வேர்க்கடலை உடைச்ச கடலை எல்லாத்தையும் வருது அது கூட போட்டு மிசின் ல கொடுத்து அரைச்சு எடுத்துக்கோங்க ...அரைச்சிட்டு வந்த அரிசி உளுந்து எல்லாத்தையும் ஒண்ணா கலந்து எடுத்துக்கிட்டு சலிச்சிக்கோங்க ...
அதுல தேவையான அளவு உப்பு வெண்ணை மிளகாய் தூள் வெள்ளை எள்ளு போட்டு பிசைந்துக்கோங்க...ரொம்ப தண்ணிய விடாம கைக்கு நல்லா மெது மெத்துன்னு வர மாதிரி வந்ததும் ஒரு வெள்ளை துணியை போட்டி மூடி வச்சிடுங்க...
முறுக்கு குழாயை எடுத்து அதுக்கு உள்ளார எண்ணைய் கொஞ்சம் போட்டு நல்லா தடவி விடுங்க...இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமா எடுத்து அதுக்கு உள்ள போட்டு நல்லா மூடிட்டு ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதுல எண்ணைய் தடவி முள்ளு முறுக்கு தட்டு போட்டு நல்ல பிழிஞ்சு விடுங்க....அடுப்பை பத்த வச்சு எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைங்க...எண்ணைய் காய்ந்ததும் இந்த முறுக்கை ஒன்னு ஒண்ணாக எடுத்து அதுல போட்டு நல்ல சிவந்ததும் எடுத்து தட்டுல போட்டு ஆற வச்சிடுங்க...முறுக்கை சுட சுட சாப்பிட கொஞ்சம் மெத்துன்னு இருக்கும் நல்லா ஆற வச்சு சாப்பிடுங்க அப்போ தான் மொறு மொறுனு இருக்கும் ....


இந்தியாவின் ஆடம்பர ஹோட்டலும் பாரம்பரிய நுழைவுவாயிலும் கொண்ட மும்பை

மும்பை ...நாம எந்த வெளிநாடு போனாலும் இந்தியாவில் இருந்து வரும்னு சொன்னதும் அவங்க முதலில் நம்மை கேட்கும் கேள்வி மும்பையில் இருந்தா என்று தான் ...அந்த அளவுக்கு இந்தியா னு சொன்னதுமே நம் தலைநகர் டெல்லியை விட எல்லோருக்கும் தெரிந்த இடம் மும்பை தான் ..அப்படிப்பட்ட மும்பையை பார்க்காம இருக்கலாமா?....அதான் கிளம்பிடேன் மும்பையை பார்க்கா ...
மும்பையின் நுழைவு சிறப்பே கடலுக்கு நடுவில கட்டி இருக்கிற அந்த பாலம் தான் ..அதோட பேர் .பாந்த்ரா வோர்லி ஸீலின்க் ...கடலுக்கு நடுவில வண்டியில போகும் போது ரெண்டு பாகமும் கடல் அலைகள் வாவ் செம அழகு ....
அடுத்து நாங்க பார்க்க போனது இந்தியாவின் நுழைவு வாயில் ....பெருமை வாய்ந்த இந்த இடம் நம் நாட்டின் வரலாற்று பொக்கிஷம்..முன்பெல்லாம் உள்ளே பார்க்க அனுமதி அளித்து இருந்தார்கள் இப்பொழுது உள்ளே செல்ல முடியாது .. நாயகன் கோபுர வாசலிலே இதை மாதிரி படம் பார்த்தவங்களுக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும் ..கமல் சரண்யா நடந்து வரும் போது புறா நடந்து வர அந்த சீன் ரொம்ப பேமஸ் ...இப்போ வெளியே இருந்தே பார்க்க வேண்டியது தான்...
அடுத்து பார்த்தது தாஜ் ஹோட்டல்.. பார்த்தது என்றால் வெளியே இருந்து பார்த்தது ...இந்திய வரும் சுற்றுலா பயணிகள் தங்க விரும்பும் மிக பிரமாண்டமான ஹோட்டல் இது ...இதை மிக பிரபலம் ஆக்கியது மும்பை தாக்குதல் ..இங்கு நடந்த தாக்குதல் நம் மிக பெரிய தலைகுனிவு...இதை விரிவாக தெரிந்து கொள்ள ஹோட்டல் மும்பை என்னும் படம் பார்த்தல் போதும்..நடந்த விஷயத்தை கண்முன்னே பார்த்தது போல் இருக்கும் .எரிந்து போன அந்த கட்டிடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புது பொலிவுடன் நிமிர்ந்து நிற்கிறது...
அப்புறம் மும் பையிலே பார்க்க வேண்டிய இடம் னு பார்த்தால் ஷாப்பிங் ...ஷாப்பிங் னு சொன்னால் பெரிய கடைங்க இல்லை ..ரோடு கடைங்க தான் ...இந்தியால எந்த புது மாடல் வந்தாலும் முதல்ல இந்த ரோடு கடைங்களா வந்துட்டு தான் பெரிய பெரிய மாலுங்களுக்கே வரும் ..அப்புறம் பார்க்...ஷாருக்கான் அமிதாப்பச்சன் வீடு மிக அழகான நீண்ட கடற்கரை புறாக்கள் பறக்கும் கடலோரம் இவை எல்லாமே சேர்ந்தது தான் மும்பை ....

சனி, 29 பிப்ரவரி, 2020

நாவூற வைக்கும் சூப்பர் சிக்கன் பிரியாணி

பிரியாணியில் பலவகை இருக்கு ...ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகை டேஸ்டா இருக்கும் ...தலப்பாக்கட்டு பிரியாணி பார்த்தீங்கன்னா அரிசியில் பண்ணுவாங்க அது எப்படி இருக்கும்னா குட்டி குட்டியா இருக்கும் .பிரியாணி கொஞ்சம் பிரவுன் கலர் ல இருக்கும்...சுவையா இருந்தாலும் நிறைய பேருக்கு அது பிடிக்காது ..பிரியாணின்னு சொன்னாலே அது பாசுமதி அரிசியில் பண்ற முஸ்லீம் பிரியாணி தான் ...அதுக்கு தனியா ஒரு சுவையும் மனமும் இருக்கு ...அந்த வாசனையே நிறைய சாப்பிட தூண்டும் ....சுவையான ஒரு முஸ்லீம் கல்யாண பிரியாணி எப்படி செய்யறதுன்னு பார்ப்போமா?....தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி 3 கிளாஸ்
பட்டை மசாலா கிராம்பு ஏலக்காய்
வெங்காயம் 6
தக்காளி 4
பச்சை மிளகாய் 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 கரண்டி
தனி மிளகாய் தூள் 2 ஸ்பூன்
தயிர் 1/2 கப்
புதினா கொத்தமல்லி 2 கைப்பிடி
சிக்கன் 3/4 கிலோ
கல் உப்பு தேவையிலான அளவு
தண்ணீர் 3 கிளாஸ்
எண்ணெய் 3 கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை மசாலா போட்டு தாளிக்கவும் நன்றாக பொரிந்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும் அது வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கி சிக்கனை போடவும் பிறகு பச்சைமிளகாய் தயிர் மிளகாய்த்தூள் புதினா கொத்தமல்லி கல் உப்பு என வரிசையாக போட்டு எல்லாமும் சுருங்க வதங்கி மேலே எண்ணெய் மிதந்து வந்ததும் தண்ணீரை ஊற்றவும் ..தண்ணீர் அரிசி எவ்வளவு அளவோ அவ்வளவு அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் அரிசியை போடவும் அரிசியும் சேர்ந்து நன்றாக கொதித்ததும் வேறொரு அடுப்பின் மேல் தோசைக்கல்லை போட்டு அதன் மேல் இந்த பிரியாணி பாத்திரத்தை தூக்கி வைத்து 15 நிமிடம் தம்மில் போட்டு வைக்கவும்...தம்மில் வைக்கும் போது மேலே ஒரு கனமான பாத்திரமோ இல்லை தண்ணீர் நிரம்பிய கிண்ணமோ வைத்து விடவும் அப்போது தான்கீழே உள்ள பதத்திற்கு ஏற்றவாறு மேல் பக்கமும் வெந்திருக்கும் ...15 நிமிடம் ஆனதும் சுவையான சிக்கன் பிரியாணி தயார் ...

சமைப்போம் சுவைப்போம் மகிழ்ந்திருப்போம் ...

மெழுகு சிலைகளும் தலைவர்களின் தத்ரூப தரிசனங்களும்

நாம இழந்த மிக பெரிய தலைவர்கள் இல்லை நாம மிக விரும்பி நெருங்கி பார்க்க துடிக்கிற பிரபலமானவர்கள் இவங்க கூட புகைப்படம் எடுத்துகிற வாய்ப்பு கிடைச்ச எப்படி இருக்கும்...ஆனா அது நாம விருப்பபடி கிடைக்காதே ...அந்த குறையை தீர்க்கிற மாதிரியான ஒரு விஷயம் தான் இந்த மெழுகு சிலை அரங்கம் ....புனே லோனாவாலா பக்கத்துல காந்தளூர்னு ஒரு இடம் இருக்கு அங்கே நிறைய மெழுகு சிலை அரங்கம் இருக்கு ..அதுல ஒன்னு சுனில் வேக்ஸ் மியூசியம் ..அது தான் அங்கே பெஸ்ட் மியூஸியம் னு சொன்னாங்க...நானும் இது வரை மியூசியம் பார்த்ததில்லை அதனால போய் பார்க்கலாமுன்னு போனோம் ...நிஜமாவே அசந்து போற மாதிரி இடம் தான் அது ...நாம நேரில் பார்க்க முடியாத பலரையும் அங்கே மெழுகு வடிவத்துல பார்த்து அசந்து போனோம் ...சும்மா ஏனோ தானோனு இல்லை ...நேரிலே பார்க்கும் போது எவ்வளவு தத்ரூபமா இருக்குமோ அவ்வளவு தத்ரூபம் இந்த சிலைகள் கிட்டேயும் ...மெழுகு சிலை வடிக்க போகிறவரர்களை முதலில் இஞ்ச் விடாம அளந்துக்கிறாங்க...ஒரு சிறு பிழை கூட இல்லாம ஒரு கரும்புள்ளியோ மச்சமோ இருந்தா அதை கூட ரொம்ப துல்லியமா அந்த இடத்துல வச்சு நேரில் பக்கத்துல அவங்க வந்து நின்னால் இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியாத அளவு அவ்வளவு துல்லியமா வடிவமைக்கிறாங்க...இந்த சில்லை பக்கத்துல நிற்கும் போது அவங்க பக்கத்திலேயே நிற்கிற மாதிரி அப்படி ஒரு பீலிங் வருது ...அன்னை தெரசா,நெல்சன் மண்டேலா ,அப்துல் கலாம்,மஹாத்மா காந்தி ,எம் ஜி ஆர் , ஜாக்கிஜான் ஜேம்ஸபாண்ட் அமிதாப்பச்சன் ரஜினிகாந்த் விஜய் .சதாம் ஹுசைன் இன்னும் நிறையபேர் எல்லாமே சிலைகள்னு சொன்னால்நம்பவே முடியாது..நம்ம பக்கத்துல இருக்கிற மாதிரியே ஒரு நிஜமான உணர்வு ...பார்த்து உண்மையிலே அசந்து தான் போனேன் நான்.

நெல்லிக்காயில் ஒரு அருமையான இனிப்பு மிட்டாய் (ஆம்லா கேண்டி )

ஒரு அருமையான வடஇந்திய இனிப்பு நெல்லிக்காய் மிட்டாய் நெல்லிக்காயியலை எவ்ளோ நல்ல விஷயங்கள் இருக்குனு சொல்லி விளக்க வேண்டிய அவசியமே இல்லை ..பெரிய நெல்லிக்காயை ஒரு இளமை தரும் கனி னு சொல்லலாம் ..அதை சாப்பிடறவங்களுக்கு தோலில் இருக்கிற ரத்த ஓட்டத்தை தூண்டி சுருக்கம் வராம நல்ல பொலிவோடு இருக்க வைக்கும் ...இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிட சிலருக்கு பிடிக்காது அதோட துவர்ப்பு சுவையால அதை விரும்ப மாட்டாங்க...ஊறுகாய் போட்டு வச்ச ரொம்ப நல்ல இருக்கும் ஆனா பிள்ளைங்க சாப்பிட மாட்டாங்க.. அதையே இனிப்பா பச்சடி செய்து கொடுத்தா பிள்ளைங்க நல்லா விரும்பி சாப்பிடுவாங்க .... பெரியவங்க சின்னவங்க எல்லோரும் விரும்பி சாப்பிடற ஒரு நெல்லிக்காய் டிஷ் ஷை எப்படி செய்யறதுன்னு பார்ப்போமா ....அதற்கு தேவையான பொருட்கள்

பெரிய நெல்லிக்காய் 2 kg
சர்க்கரை 1kg
சர்க்கரை 1/2kg
செய்முறை

நெல்லிக்காய் வாங்கும் போது நல்ல பெரிய சைஸ்லகருப்பு புள்ளிக இல்லாம முதல் தரமான நெல்லிக்காயா பார்த்து வாங்கிக்கோங்க... முதல்ல நெல்லிக்காயை மண்ணு தூசி இல்லாம நல்லா சுத்தமா துடைச்சு எடுத்துக்கிட்டு அதை குக்கர்ல 2 விசில் விட்டு வேக வச்சு எடுத்துக்கோங்க ஒரு பாத்திரத்துல ஒரு கிலோ சர்க்கரையை போட்டு மூணு டம்ளர் தண்ணீர் விட்டு நல்லா கொதிக்க வச்சு ஒரு கம்பி பதம் வர அளவுக்கு பாகு வச்சு எடுத்துக்கோங்க ..
நெல்லிக்காய் வெந்து நல்ல ஆறினதும் அதுல உள்ள சுளைகளை பீஸ் பீஸா எடுத்துக்கோங்க பிரித்து எடுத்த சுளைகளை ஆறி இருக்கிற சர்க்கரை பாகில் போட்டு இரண்டு நாள் தொடாமல் ஊற வச்சிடுங்க
இரண்டாவது நாள் ராத்திரி அதை வடிகட்டியிலே போட்டு விட்ருங்க ..ராத்திரி முழுக்க சாறு எல்லாம் நல்ல வடிஞ்சதும் அடுத்த நாள் காலைல தண்ணி நாலா வடிஞ்சதும் பெரிய தாம்பாள தட்டுல போட்டு பரப்பி வச்சு காய வச்சிருந்த ...இதே மாதிரி நாலு நாள் காய வைக்கணும் ...தட்டு மேல ஒரு நெட் மாதிரி துணி போட்டு காய வைக்கணும் ...நல்ல காய்ஞ்சு சுருங்கி போனதும் எடுத்து ஒரு பாட்டிலே போட்டு வச்சுக்கோங்க...இதை பிள்ளைங்க முதல் பெரியவங்க வரை எப்படி போட்டி போட்டு சாப்பிடறாங்கனு பாருங்க....

திங்கள், 30 டிசம்பர், 2019

பயணங்களின் பதிவுகள் (மும்பை )2018
எந்த டூர் கிளம்பினாலும் அதுல நேரடியா கோவில்களை சேர்க்காமல் அந்த இடத்திற்கு போனதும் பக்கத்துல இந்த கோயில் இருக்கு பார்த்துட்டு போய்டலாம்னு சொல்லி கூட்டிட்டு போய்டுவேன்.....வீட்டிலேயே சொன்னால் எடுத்ததுமே வேண்டாம்னு சொல்லிடுவாங்க பிள்ளைகளும் கணவரும்......இந்த முறை சீரடி போவதை முன்பே முடிவு செய்தே போனோம்...ஏன்னா இது மருமகள் விருப்பம்... ஆகையால் முதலிலேயே பிளான் பண்ணியாச்சு...காலையிலே கிளம்பிட்டோம் போகிற வழியில் பாதை கொஞ்சமும் சரியில்லை ....அதனால் மணி 11.30 மணி தாண்டி விட்டதால் ஆரத்தி தொடங்கி விட்டது .காத்திருக்கும் நேரத்தில் ஆரத்தி திரையிடுகிறார்கள் ,....தீபாவளிக்கு முந்தைய தினம் என்பதால் கூட்டமே இல்லாமல் மிக நிதானமாக பாபாவின் தரிசனம் பார்த்தோம் .....
... அங்கிருந்து வரும் வழியில் பக்கத்தில் தான் சனிசிக்னாபூர் எனும் சனீஸ்வரன் கோயில் என்றும் அதை பார்த்து விட்டு போகலாம் என்றும் சொன்னதுமே இன்னொரு கோயிலா என்று முகமே உம்மென்று மாறி விட்டது....இருந்தும் வேறு வழி இல்லை என்பதால் சரி என்று ஒத்துக்கொண்டனர் ....போகிற பாதை முழுவதும் அழகான வயல்வெளிகளும் கரும்பு தோட்டங்களும் நிறைந்து காணப்படுகிறது .....
.... வழி எங்கும் கரும்பு ஜூஸ் கடைகளாக இருக்கிறது....கடைகளை கலர் கலர் பலூன்கள் கட்டி ஏழு எட்டு ஊஞ்சல்கள் போட்டு கவர்ந்திழுக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள்..,செக்கில் எண்ணைய் எடுப்பது போல மாடுகளை வைத்து கரும்பு ஜூஸ் பிழிகிறார்கள் ....பார்க்கவே புதுமையாக இருக்கிறது .....ஊஞ்சலில் ஆடி கொண்டே ஆளுக்கு இரண்டு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடித்து கிளம்பினோம்.,,,
. சனி சிக்னாபூர் .....சனி பகவான் பூமியில் வந்து இறங்கிய இடம் இது என்கிறார்கள்...ஒற்றை கல் தூண் போல நிற்கிறார் சனி,,அங்கேயும் கூட்டம் இல்லாததால் நிதானமாக தரிசனம் பார்த்து கிளம்பினோம்......அடுத்த நாள் தீபாவளியை மருமகள் குடுபத்தினருடன் மகிழ்ச்சியாய் கொண்டாடி முடித்து சென்னை வந்து சேர்ந்தோம்...... 😊.(நிறைவு )




ஞாயிறு, 10 நவம்பர், 2019

நிலம்கொத்தி பறவை

மரம்கொத்தி  பறவையை
கண்டிருக்கிறோம்
மண்கொத்தி பறவையையும்
கண்டிருக்கிறோம்
இன்று
புதிதாய் முளைத்திருக்கிறது
நிலம்கொத்தி பறவையொன்று ...
விவசாயியின் வயிற்றிலடித்து
அவர்களின்
வறுமையை சாதகமாக்கி
அவர்தம் நிலங்களை
பிடுங்கி தின்று
உயிர் கொத்தி தின்கிறது

பெரும்வணிகம் எனும்
நிலம்கொத்தி பறவை. ....

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

. சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....4



புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....

       இந்த வாள் 2010 ல் நாங்க  ஜெய்ப்பூர் போயிருந்தபொழுது வாங்கியது. .அங்கே தெருக்களில் இதைப்போல நிறைய மாடல்களில் பல நிறங்களில் வாள்களை விற்கிறார்கள். ..அங்குள்ள வீடுகளில் இந்த ஒரு கலைபொருளை அனைவரும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.. , நெடுவாள்,சின்ன குத்துவாள் சிறிய கத்தி  என பலவிதமான வகையினில் இருந்தாலும் எனக்கு பிடித்தது இந்த போர்வாள் தான். ...இதை கையில் வைத்து பார்க்கும் போது ஒரு மகாராணி உணர்வை  தந்ததால் இதை விருப்பப்பட்டு வாங்கி வந்தேன். ...கம்பீரமான இந்த வாளை பார்க்கும் போதெல்லாம்  அந்த பிங்க் சிட்டியின் அழகு கண்ணில் வந்து போகும். .....உங்களுக்கும் அங்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் அவசியம் இதை வாங்கி வந்து நீங்களும் மகாராஜாவாகவோ மகாராணியாகவோ மாறிவிடுங்கள் 😆😛😜😜

ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....3



புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....
   இந்த ஷோபீஸ் நான்  சவுத்ஆப்ரிக்கா போயிருந்தபொழுது  வாங்கியது...  அங்கே அவுட்ஷ்ரோம் னு ஒரு இடம்.. அங்கே உள்ள ஆஸ்ட்ரீச்(நெருப்புகோழி ) பண்ணைக்கு போயிருந்தோம் ..அதனுடைய  முட்டை ஓடு மிக பலமாக இருக்கும்.. அதன் மேல் ஏறி நின்றாலும் அது உடையாது..அவ்வளவு ஸ்ட்ராங் ..முன்பெல்லாம் ஆஸ்ட்ரீசோட இறகுகள் தங்கத்திற்கு இணையாக விற்பனை ஆகியதாம்..வெள்ளையர்கள் அதை அணிவதில் மிக பெருமை கொண்டார்களாம்..உலக போருக்கு பின் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையால் இறகு வாங்குவதை நிறுத்தியதால் அந்த தொழில் நசிந்து விட்டதாம் .. ..இப்பொழுது சில பண்ணைகள் மட்டுமே இருக்கிறது,அங்கு யானைசவாரி போல ஆஸ்ட்ரீச் மேல் நாம  சவாரி செய்யலாம் தைரியமிருந்தால். .. அங்கு இருக்கும் கடைகளில் ஆஸ்டிரிச் முட்டை ஓடுகளால் ஆன அலங்கார பொருட்களை விற்பனை செய்கிறார்கள். ..அந்த இடத்தின் நினைவாக ஆஸ்ட்ரீச்  ஓட்டின் மீது செய்த  து இந்த  ஷோபீஸ்😊...இதை பார்க்கும் போதெல்லாம் அதன் மேல் செய்த சவாரி நினைவினில் வந்துபோகும்😊

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....2


      புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....
      இந்த இரு பழங்குடி இனத்தவரின் பொம்மை வாங்கியது அந்தமானில். ..அந்தமானில் வசிக்கும் ஆதிவாசிகளை பார்ப்பது கொஞ்சம் அரிதான விஷயம் தான். ...முன்பெல்லாம் சகஜமாக நடமாடி கொண்டிருந்த அவர்களை அங்கு செல்லும் பயணிகள் திண்பண்டம்,போதைபொருட்கள் கொடுப்பது என பழக்கப்படுத்தியதால் இப்போதும் அவர்களை நெருங்க விடுவதில்லை. இப்போதெல்லாம் மிக கட்டுபாடுடன் போலீஸ் துணையுடன் தான் அப்பகுதியை சுற்றி பார்க்க அனுமதிக்கின்றனர். ..நாங்கள் சென்றபோது இரு ஆதிவாசி சிறுவர்களை கண்டோம்...மரத்தின் மீதமர்ந்து பளிச்சென்று மின்னும் கண்களுடன் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ...அந்த பயணத்தை என்றென்றும் நினைவில் கொள்ள அங்கிருந்து அழைத்துச் கொண்டு வந்ததோம் இந்த இருவரையும் 😆😛

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....

சில பயணங்களும் சில நினைவுப்பொருட்களும் ....
      புகைப்படங்கள் எப்படியோ அப்படி தான் சில பொருட்களும் ...நாம்  பயணித்த நாட்களை நம் கண் முன் நிறுத்தும் ...அப்படி பயணத்தின் போது வாங்கி என் வீட்டில் நினைவு பொருளாக இருக்கும் சிலவற்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன்....
       இந்த மரவேலைப்பாடுள்ள ஸ்டாண்ட் வாங்கியது 2013 ல் ....அப்பொழுது அப்பா பக்கவாத நோயால் ஒரு கையும் ,காலும்,  குரலும் செயலிழந்து இருந்தார் ...  ஆயினும் வாக்கிங் ஸ்டிக்  துணையுடன் நடப்பார் ...தன்  தேவைகளை இடது கையால் எழுதி காட்டுவார் .....பயணங்கள் மேல் என்போலவே பெரும் காதல் கொண்டவர்...அந்த நிலையிலும் 10 நாள் பயணமாக மூகாம்பிகை ஹூப்ளி .சாரதா மடம் .உடுப்பி, சிருங்கேரி. ஹம்பி .சாமுண்டீஸ்வரி கோவில் .மைசூர் அரண்மனை என கர்நாடகா முழுவதும் எங்களுடன் உற்சாகமாக சுற்றி வந்தார்...அது போலவே கலை பொருட்கள் சேகரிப்பதில் பேராவல் கொண்டவர்....அந்த பயணத்தை முடித்து  திரும்புகையில் மலைத்தொடரின் மேல் விற்று கொண்டிருந்த இதை வாங்க விரும்பினார் ....அவர் ஆசைக்காக வாங்கிய இந்த  ஸ்டாண்ட் அவரையும் அவருடனான அந்த கடைசி பயணத்தையும் எப்போதும் பசுமையாக என் நினைவில் வைத்திருக்கிறது ......

வியாழன், 31 ஜனவரி, 2019

கொலுசொலி

அப்பாவை எழுப்ப சென்ற
படுக்கையறை மூலையில் ஒரு முத்து
தம்பியை படிக்க சொல்லி மிரட்டிய
அறையின் கோடியில்  ஒருமுத்து
சமையலறையின் பரபரப்பில்
அம்மியின் பின் ஒளிந்த
ஒரு முத்து
வேலைக்காரியின் பின் அலைந்த
பொழுதினில் விழுந்த ஒரு முத்தென
வீடெங்கும் ஒளிந்து  கிடக்கும்
அம்மாவின் கொலுசு முத்துக்கள்
அவளில்லா இப்பொழுதிலும்
இசைத்து கொண்டிருக்கிறது
அவளின் இருப்பை .....