ஞாயிறு, 11 மே, 2014

               அன்னையர் தின வாழ்த்துக்கள் 


அவள் மட்டுமே அறிவாள்

"பிள்ளைகளின் புன்னகைக்கு
பின்னே மறைத்திருக்கும் 
வருத்தங்களை "

"சிரித்த முகத்தினுள் புதைதிருக்கும் 
சோகங்களை"

"மனதில் புதைதிருக்கும்
ரகசியங்களை "
"பிறர் மேல் காட்ட இயலாத 
கோபங்களின் சுவடுகளை"
"தோல்விகளின் வலிகளை"

"தாங்கிட இயலா மனபாரங்களை"
"முகமூடியினுள் புதைந்திருக்கும் 
பிள்ளைகளின் நிஜமுக தரிசனங்களை 
அவள் மட்டுமே அறிவாள்"

அவள் தான் 

அம்மா .........


வியாழன், 8 மே, 2014

பயணங்களின் பதிவுகள்( ஊட்டி )

      சில வருடங்களுக்கு முன் ஊட்டி ஒரு சொர்க்கபுரி ,மலை ஏறும் வழி எங்கும் நிறைந்திருக்கும் தேயிலை தோட்டங்கள் பசுமையின் வழிநடத்தி நம்மை அழைத்து செல்லும் ..உடலை ஊடுருவும் குளிர் இறுக்க போர்த்தி கொள்ள சொல்லும் ...சூரிய வெப்பம் எவ்வளவு முயன்றாலும் நம்மை தாக்க முடியாமல் தோற்று போகும் ..இரவில் குளிர் வாட்டி விடும் ....அடுக்கி வைத்து போல் வளர்ந்து நிற்கும் தேயிலை தோட்டங்களின் இடையே நடப்பது அப்படி ஒரு சந்தோஷம் அளிக்கும்.....பொட்டானிக்கல் தோட்டம் புல்தரை பஞ்சு மெத்தை விரித்தது போல் பரந்து கிடக்கும் அனைவரும் அதில் உருண்டு புரண்டு விளையாடி உலகை மறப்பார்கள் ..கால்கள் புதைய அதில் நாள் முழுவதும் நடந்தாலும் களைப்பு என்பதே தெரியாது ... மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா இதன் மேல் இருந்து  பார்க்க டெலஸ்கோப் இருக்கும் அதன் வழியாக ஊட்டி குன்னூர் கோத்தகிரி இவற்றின் அழகை ரசிக்கலாம் ...ஊசியென குத்தும் குளிருக்கு இதமாய் சூடான சோளம் ,வேர்கடலை,சுண்டல் விற்பார்கள் .. நேரம் போவதே தெரியாமல் அங்கு அமர்ந்து இருப்பது மனதுக்கு அமைதியாக இருக்கும்...அடுத்து பைகாரா நீர்வீழிச்சி கரை புரண்டு ஓடும் தண்ணீரை காண்பது அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்..ஊட்டி படகு துறை குடும்பம் குடும்பமாக படகு சவாரி செய்வது என ஊட்டி நம்மை புதியதாய் பிறந்தது போல் உற்சாகமாக உணர வைக்கும் ...இதெல்லாம் ஒரு காலம் இன்றைய ஊட்டியின் நிலையே வேறாக உள்ளது எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் ....எங்கேயாவது ஓரிரு இடங்களின் தான் தோட்டங்களை பார்க்க முடிகிறது ...பசுமையை அழித்து கட்டிடங்கள் ஆக்கி விட்டதால் வெப்பம் கொளுத்துகிறது ...பகல் பொழுது சூரியன் சுடுகிறது ...நாம் சென்னையில் இருகிறோமோ என்றே என்ன தோன்றுகிறது ...இரவிலும் குளிர் தாக்குவதில்லை ....அடைத்து வைத்து போல் மூச்சு முட்டுகிறது...எங்கு பார்த்தாலும் ட்ராபிக் மலை பாதை என்பதால் பயணத்திலேயே நேரம் வீணாகிறது ...பொட்டானிக்கல் தோட்டம் காய்ந்து போய் உட்கார இடம் இல்லாமல் சேறாக உள்ளது ...தொட்டபெட்டாவில் டெலஸ்கோப் பழுதாகி விட்டதால்எடுத்து விட்டார்கள் ...கழிப்பிடங்களில் தண்ணீர் வசதி இல்லை...நீர்வீழ்ச்சி என்ற பெயர் தான் உள்ளது அதில் தண்ணீர் இல்லை ...படகு துறையில் திறமை உள்ளவர்களுக்கே முன்னுரிமை ...மொத்தத்தில் மலைகளின் ராணி பாரம் தாங்க முடியாமல் மூச்சு திணறுகிறாள் ...அவளை சற்று இளைப்பாற விடுவோம்..... ஊட்டி செல்வதை தவிர்ப்போம் ....





  

சனி, 26 ஏப்ரல், 2014

பயணங்களின் பதிவுகள் (சிம்லா மணாலி)

கோடைக்கு இதமாக சிம்லா மணாலி பயணம் பற்றி எழுதுகிறேன் ...      பெரும் எதிர்பார்போடு சென்ற சிம்லா சிறிது ஏமாற்றமே அளித்தது சிம்லாவில் ஹோட்டல் ரூம் வாசலில் இருந்து நிமிர்ந்து பார்த்தால் மலை மேல் அடுக்கி வைத்து போல் கட்டிடங்கள் நிற்கிறது...குளிர் அதிகமாக இல்லை ஊட்டி குளிர் போல் இதமாக இருந்தது...அங்கிருந்து குப்ரி  என்ற இடத்திற்கு சென்றோம் ..அது ஒரு மலை பாதை குதிரை மேல் ஏறி அரைமணி நேரம் பயணம் ...மலை பாதையில் பழக்கமான குதிரை வேகமாக போகிறது ..எங்கே கால் தவறி பள்ளத்தில் விழுந்து விடுமோ என்கிற  பயத்துடனே பிரயாணம் செய்தோம் ..ஆனாலும் மிக ரசித்து பயணித்தோம் ...அங்கிருந்து மணிக்கரன்  சென்றோம் அங்கு குளிர்  சற்று அதிகமாக இருந்தது அங்குள்ள வெந்நீர் ஊற்றில் குளித்தோம் ..சில்லென்ற பியாஸ் நதியில் வெந்நீர் ஊற்று பார்க்க மிக ரம்மியமாக இருந்தது ...வழி எங்கும் ஆப்பிள் மரங்கள் இருக்கிறது நாங்கள் சென்ற நேரம் பழங்கள் இல்லை வெறும் மரங்களை மட்டும் பார்த்தோம் ...அங்கிருந்து  அடுத்து மணாலி சென்றோம் செல்லும் வழி எங்கும் பியாஸ் நதி அழகை ரசித்து கொண்டே சென்றோம் ...மணாலியில் இரவு தங்கி இருந்தோம் ..மறுநாள் காலை கண்விழித்து வெளியில் வந்து பார்த்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது   கண்ணுக்கெட்டிய தூரம் முழுவதும் வெண்ணிற மலைகள் ..ஐஸ் மலை பார்த்ததும் அப்படியொரு பேரானந்தம் எங்களுக்கு ...சந்தோஷத்தில் துள்ளி குதித்து எல்லோரையும் எழுப்பி காண்பித்து எங்களது இன்பத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டோம் ...அங்கிருந்து ஜீப்பில் ரோதங் பாஸ் சென்றோம் அங்கு வழி எங்கும் பனிபாறைகள் வெட்டி அமைத்தது போல்  சாலை  இருந்தது ..அங்கு நிறைய கடைகள் உள்ளது அந்த கடைகளில் குளிர் தாங்கும் ஆடைகள் வாடகைக்கு கிடைக்கிறது ...அதை எடுத்து மாட்டி கொண்டு நடப்பது நிலவில் நடப்பது போல் கடினமாக இருந்தது ....பனி மலையின் மீது சிரமப்பட்டு ஏறி செல்லும் போது கால்கள் புதைந்து பல முறை வழுக்கி விழுந்தோம் ...புதைந்த கால்களின் ஷூவின்  உள்ளே பனி கட்டிகள் போனதும் முதலில் சில் என்று இருந்தாலும் சிறிது நேரத்தில் வலிக்கிறது...ஒருவர் வீழுந்தால் மற்றவரையும் சேர்த்து இழுத்து பனியில் உருண்டு ஒருவர் மீது ஒருவர் பனியை வாரி அடித்து விளையாடி மகிழ்ந்தது மறக்க முடியாத பயணமாக அமைந்தது .......(முக்கியமாக இந்த புகைப்படம்.... நான் விழுந்ததும் என் கணவரையும் சேர்த்து விழ வைத்து விட்டேன்  ..விழுந்ததையும் கொண்டாடும் நானும் என் கணவரும் ..அவமானமாக கருதிய என் மகள் என்னமா இது எழுந்திருமா என்று சலிப்பதையும் என் மகன் இதை பார்த்து ரசித்து சிரிப்பதும் மறக்க முடியாத எனக்கு மிகவும் பிடித்த புகைப்படமாக அமைந்து விட்டது ....)









சனி, 29 மார்ச், 2014

பயணங்களின் பதிவுகள் (கேரளா)

மயிலாடும்புழா 

   கேரளாவின் பாலக்காடு பகுதியில் இருக்கிறது மலம்புழாஅணை...எப்பொழுது கேரளா சென்றாலும் அந்த அணைக்கு ஒரு நாள் சென்று வருவோம் ..சென்ற முறை அணையின் பின்புறம் மயிலாடும்புழா என்றொரு இடம் இருப்பதாக கேள்விப்பட்டு சென்று பார்த்தோம்.அழகான வளைவான பாதைகள் பசுமை படர்ந்த மரங்கள் தொடர்ச்சியான மலைத்தொடர் பெரிய நீர்த்தேக்கம்  என்று மனதை கொள்ளை கொள்ளும் மிக ரம்மியமான இடம் ....மலை பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சென்றோம்...உள்ளே செல்ல செல்ல அங்குள்ள மக்கள் எங்கள் காரை விநோதமாக பார்த்தனர்...அதிக வாகனகள் செல்லாத இடம் ...எங்கள் கார் சென்ற பாதையில் எதிரில் யாரும் நடந்து கூட வர முடியாத அளவில் குறுகலாக இருந்தது ..மழை பெய்து சேறாகி கிடந்த பாதை அதில் வண்டி மாட்டினால் மீள்வது கடினம் என பயந்து கொண்டே பயணித்தோம் ...அங்கு முட்புதர் போல் அடர்ந்து கிடந்த இடத்தை காட்டி இது தான் மயிலடும்புழா ஆறு என்றனர் ...எங்களுக்கு சப்பென்று ஆகி விட்டது இதற்கா இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்றாகி விட்டது..இறங்கி தான் பாப்போம் என்று துணிந்து இறங்கினோம்..புதர்களின் பின்புறம் பாறைகளின் வளைவில் அழகாய் ஓடி கொண்டு இருந்தது ஆறு..அதில் இறங்கி குளிக்க தொடங்கியவுடன் புரிந்தது அதன் அற்புதம் ..அவ்வளவு சுத்தமான நீர் ...பன்னீரில் குளித்து போல் அப்படி ஒரு புத்துணர்ச்சி ...மலையில் இருந்து நேரிடையாக வரும் புத்தம் புதிய நீர் ...கஷ்டப்பட்டு பயணித்து வந்தது வீண் போகவில்லை என்று சந்தோஷ பட்டோம்.... கொண்டு போன உணவை உண்டு விட்டு மாலை வரை நீரிலேயே கிடந்தோம் இருள் வர போகிறது என்றதும் பிரியவே மனம் இல்லாமல் அந்த இர்டத்தை பிரிந்து வந்தோம் ..யாருக்கேனும் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல்




 அந்த இடம் சென்று பார்த்து வாருங்கள் .....

திங்கள், 10 மார்ச், 2014

இன்று போல் நினைவிருக்கிறது....
//உனக்கு பிடித்த ஜாதிமல்லி சூடினால் 
தலை வலிக்குமென்று கூறி எனக்கு நீ சூடியதும்.//...
உப்புமாவின் அடிபிடித்த பாகம் தான் 
பிடிக்குமென்று கடைசியாக உண்டதும் //....
//ஜன்னலோர இருக்கை குளிருமென்று
என்னை அமர வைத்து 
தூர அமர்ந்து ரசித்து பயணித்ததும்//..... 
//நாள் முழுவதும் உழைத்து களைத்தாலும்
மெத்தையில் படுத்தால் 
தூக்கம் வராது என்று கூறி
என்னை உறங்க வைத்து
தரையில் தூக்கமின்றி புரண்டதும் //.....
//புது செருப்பு கால் கடிக்குதென எனக்களித்து
பழயதை  மாட்டி நீ  நடந்ததும்//....
//புது புடவை கன்னி பெண்கள் 
உடுத்த வேண்டுமென எனக்குடுத்தி
 அழகு பார்த்ததும்//....
இப்பொழுது  தான் புரிகிறது
 அத்தனையும் தியாகங்கள் என  ..
இத்தனை வயதாகியும்  
எத்தனை முயன்றும் 
கற்று கொள்ள முடியவில்லை 

""அம்மா 

உன் போல் விட்டு கொடுப்பதே தெரியாமல்
விட்டு கொடுக்கும் கலையை .... 




ஞாயிறு, 2 மார்ச், 2014

குழந்தை மனம்

மண்ணில் புரண்டு புழுதியோடும் சேற்றில் விழுந்து சகதியோடும்விளையாடி திரியும் பிள்ளைகள் படுத்ததும் உறங்குகின்றன சுகமாய் ....வெள்ளை உடை உடுத்தி தூசு படாமல் வலம் வருபவர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர் மனதினில் அழுக்கினை சுமப்பதால்.....

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

உன்னை .......




பின்னோக்கி செல்வதற்கு
என்றேனும் வாய்ப்பு கிடைத்தால்
நிற்காமல் கடந்து விடுவேன்
உன்னை சந்தித்த நிமிடங்களை...........