சனி, 26 ஏப்ரல், 2014
பயணங்களின் பதிவுகள் (சிம்லா மணாலி)
கோடைக்கு இதமாக சிம்லா மணாலி பயணம் பற்றி எழுதுகிறேன் ... பெரும் எதிர்பார்போடு சென்ற சிம்லா சிறிது ஏமாற்றமே அளித்தது சிம்லாவில் ஹோட்டல் ரூம் வாசலில் இருந்து நிமிர்ந்து பார்த்தால் மலை மேல் அடுக்கி வைத்து போல் கட்டிடங்கள் நிற்கிறது...குளிர் அதிகமாக இல்லை ஊட்டி குளிர் போல் இதமாக இருந்தது...அங்கிருந்து குப்ரி என்ற இடத்திற்கு சென்றோம் ..அது ஒரு மலை பாதை குதிரை மேல் ஏறி அரைமணி நேரம் பயணம் ...மலை பாதையில் பழக்கமான குதிரை வேகமாக போகிறது ..எங்கே கால் தவறி பள்ளத்தில் விழுந்து விடுமோ என்கிற பயத்துடனே பிரயாணம் செய்தோம் ..ஆனாலும் மிக ரசித்து பயணித்தோம் ...அங்கிருந்து மணிக்கரன் சென்றோம் அங்கு குளிர் சற்று அதிகமாக இருந்தது அங்குள்ள வெந்நீர் ஊற்றில் குளித்தோம் ..சில்லென்ற பியாஸ் நதியில் வெந்நீர் ஊற்று பார்க்க மிக ரம்மியமாக இருந்தது ...வழி எங்கும் ஆப்பிள் மரங்கள் இருக்கிறது நாங்கள் சென்ற நேரம் பழங்கள் இல்லை வெறும் மரங்களை மட்டும் பார்த்தோம் ...அங்கிருந்து அடுத்து மணாலி சென்றோம் செல்லும் வழி எங்கும் பியாஸ் நதி அழகை ரசித்து கொண்டே சென்றோம் ...மணாலியில் இரவு தங்கி இருந்தோம் ..மறுநாள் காலை கண்விழித்து வெளியில் வந்து பார்த்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது கண்ணுக்கெட்டிய தூரம் முழுவதும் வெண்ணிற மலைகள் ..ஐஸ் மலை பார்த்ததும் அப்படியொரு பேரானந்தம் எங்களுக்கு ...சந்தோஷத்தில் துள்ளி குதித்து எல்லோரையும் எழுப்பி காண்பித்து எங்களது இன்பத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டோம் ...அங்கிருந்து ஜீப்பில் ரோதங் பாஸ் சென்றோம் அங்கு வழி எங்கும் பனிபாறைகள் வெட்டி அமைத்தது போல் சாலை இருந்தது ..அங்கு நிறைய கடைகள் உள்ளது அந்த கடைகளில் குளிர் தாங்கும் ஆடைகள் வாடகைக்கு கிடைக்கிறது ...அதை எடுத்து மாட்டி கொண்டு நடப்பது நிலவில் நடப்பது போல் கடினமாக இருந்தது ....பனி மலையின் மீது சிரமப்பட்டு ஏறி செல்லும் போது கால்கள் புதைந்து பல முறை வழுக்கி விழுந்தோம் ...புதைந்த கால்களின் ஷூவின் உள்ளே பனி கட்டிகள் போனதும் முதலில் சில் என்று இருந்தாலும் சிறிது நேரத்தில் வலிக்கிறது...ஒருவர் வீழுந்தால் மற்றவரையும் சேர்த்து இழுத்து பனியில் உருண்டு ஒருவர் மீது ஒருவர் பனியை வாரி அடித்து விளையாடி மகிழ்ந்தது மறக்க முடியாத பயணமாக அமைந்தது .......(முக்கியமாக இந்த புகைப்படம்.... நான் விழுந்ததும் என் கணவரையும் சேர்த்து விழ வைத்து விட்டேன் ..விழுந்ததையும் கொண்டாடும் நானும் என் கணவரும் ..அவமானமாக கருதிய என் மகள் என்னமா இது எழுந்திருமா என்று சலிப்பதையும் என் மகன் இதை பார்த்து ரசித்து சிரிப்பதும் மறக்க முடியாத எனக்கு மிகவும் பிடித்த புகைப்படமாக அமைந்து விட்டது ....)
சனி, 29 மார்ச், 2014
பயணங்களின் பதிவுகள் (கேரளா)
மயிலாடும்புழா
கேரளாவின் பாலக்காடு பகுதியில் இருக்கிறது மலம்புழாஅணை...எப்பொழுது கேரளா சென்றாலும் அந்த அணைக்கு ஒரு நாள் சென்று வருவோம் ..சென்ற முறை அணையின் பின்புறம் மயிலாடும்புழா என்றொரு இடம் இருப்பதாக கேள்விப்பட்டு சென்று பார்த்தோம்.அழகான வளைவான பாதைகள் பசுமை படர்ந்த மரங்கள் தொடர்ச்சியான மலைத்தொடர் பெரிய நீர்த்தேக்கம் என்று மனதை கொள்ளை கொள்ளும் மிக ரம்மியமான இடம் ....மலை பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சென்றோம்...உள்ளே செல்ல செல்ல அங்குள்ள மக்கள் எங்கள் காரை விநோதமாக பார்த்தனர்...அதிக வாகனகள் செல்லாத இடம் ...எங்கள் கார் சென்ற பாதையில் எதிரில் யாரும் நடந்து கூட வர முடியாத அளவில் குறுகலாக இருந்தது ..மழை பெய்து சேறாகி கிடந்த பாதை அதில் வண்டி மாட்டினால் மீள்வது கடினம் என பயந்து கொண்டே பயணித்தோம் ...அங்கு முட்புதர் போல் அடர்ந்து கிடந்த இடத்தை காட்டி இது தான் மயிலடும்புழா ஆறு என்றனர் ...எங்களுக்கு சப்பென்று ஆகி விட்டது இதற்கா இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்றாகி விட்டது..இறங்கி தான் பாப்போம் என்று துணிந்து இறங்கினோம்..புதர்களின் பின்புறம் பாறைகளின் வளைவில் அழகாய் ஓடி கொண்டு இருந்தது ஆறு..அதில் இறங்கி குளிக்க தொடங்கியவுடன் புரிந்தது அதன் அற்புதம் ..அவ்வளவு சுத்தமான நீர் ...பன்னீரில் குளித்து போல் அப்படி ஒரு புத்துணர்ச்சி ...மலையில் இருந்து நேரிடையாக வரும் புத்தம் புதிய நீர் ...கஷ்டப்பட்டு பயணித்து வந்தது வீண் போகவில்லை என்று சந்தோஷ பட்டோம்.... கொண்டு போன உணவை உண்டு விட்டு மாலை வரை நீரிலேயே கிடந்தோம் இருள் வர போகிறது என்றதும் பிரியவே மனம் இல்லாமல் அந்த இர்டத்தை பிரிந்து வந்தோம் ..யாருக்கேனும் வாய்ப்பு கிடைத்தால் தவறாமல்
அந்த இடம் சென்று பார்த்து வாருங்கள் .....
அந்த இடம் சென்று பார்த்து வாருங்கள் .....
திங்கள், 10 மார்ச், 2014
இன்று போல் நினைவிருக்கிறது....
//உனக்கு பிடித்த ஜாதிமல்லி சூடினால்
//உனக்கு பிடித்த ஜாதிமல்லி சூடினால்
தலை வலிக்குமென்று கூறி எனக்கு நீ சூடியதும்.//...
உப்புமாவின் அடிபிடித்த பாகம் தான்
பிடிக்குமென்று கடைசியாக உண்டதும் //....
//ஜன்னலோர இருக்கை குளிருமென்று
என்னை அமர வைத்து
தூர அமர்ந்து ரசித்து பயணித்ததும்//.....
//நாள் முழுவதும் உழைத்து களைத்தாலும்
மெத்தையில் படுத்தால்
தூக்கம் வராது என்று கூறி
என்னை உறங்க வைத்து
என்னை உறங்க வைத்து
தரையில் தூக்கமின்றி புரண்டதும் //.....
//புது செருப்பு கால் கடிக்குதென எனக்களித்து
பழயதை மாட்டி நீ நடந்ததும்//....
//புது புடவை கன்னி பெண்கள்
உடுத்த வேண்டுமென எனக்குடுத்தி
அழகு பார்த்ததும்//....
இப்பொழுது தான் புரிகிறது
அத்தனையும் தியாகங்கள் என ..
அத்தனையும் தியாகங்கள் என ..
இத்தனை வயதாகியும்
எத்தனை முயன்றும்
கற்று கொள்ள முடியவில்லை
""அம்மா
உன் போல் விட்டு கொடுப்பதே தெரியாமல்
விட்டு கொடுக்கும் கலையை ....
ஞாயிறு, 2 மார்ச், 2014
ஞாயிறு, 26 ஜனவரி, 2014
வியாழன், 14 நவம்பர், 2013
சாம்பியா to இந்தியா
.மதியம் 3.15 சாம்பஸி ஆற்றின் மீது இரண்டு மணி நேரம் ஆப்ரிக்கன் குயின் என்னும் பொழுதுபோக்கு படகில் பயணித்தோம்...மதியம் தொடங்கிய பயணம் சூரிய அஸ்தமனம் வரை நீடித்து.,சூரியன் அஸ்தமித்தும் திரும்பி ஆரம்பித்த இடத்திற்கு வருகிறது.. முதலில் பயணம் சுவாரசியமாக இல்லை ..இரு கரைகளிலும் யானைகள் குடும்பம் மற்றும் காண்டா மிருகம் ,ஒட்டகம் போன்றவற்றை பார்த்து கொண்டே செல்லலாம் ....படகில் ஏறியதில் இருந்தே எல்லோரும் குடிக்க ஆரம்பித்தனர் ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் குடித்து கொண்டே வந்தனர்....அதற்கு துணையாக சிற்றுண்டிகளும் கொடுத்தனர் ...இலவசமாக எவ்வளவு வேண்டும் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் ...நாங்கள் மூவர் மட்டும் குளிர்பானம் குடித்ததை பார்த்த அவர்கள் எங்களை வேற்று கிரகவாசி போல் பார்த்து சென்றனர்..அங்கு எங்களுடன் பயணித்த ஒரு பெண்மணி நாங்கள் குடும்பமாக வந்ததை பெரும் அதிசயமாக கேட்டார்..அவர் அவரது நண்பருடன் வந்திருந்தார்...வெகு தூரம் சென்ற பிறகு சூரிய அஸ்தமனம் தொடங்கியது அழகிய அந்த ஆறு சூரிய ஒளியால் ஆரஞ்சு வண்ணத்திற்கு மாறியது ..பொன்னிறமாக மாறிய ஆற்றின் முடிவில் சூரியன் மறைய தொடங்கிய நேரம் எல்லோரும் 3,2,1 என எண்ண தொடங்கினர் பூஜ்யம் சொல்லியதும் சூரியன் மறைவதும் ஒன்றாக இருந்தது...எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்...மிக இனிய அனுபவமாக இருந்தது..மீண்டும் கரைக்கு திரும்பியது படகு..மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு ஜோன்ஸ்பர்க் வந்தோம்...என் மகன் பள்ளியில் பிராய் எனப்படும் இரவு விருந்தை கொண்டாடினோம்..நெருப்பு மூட்டி அதை சுற்றி அனைவரும் அமர்ந்து சந்தோஷமாக பொழுதை போக்கினோம்...எங்கள் மகனுடன் மீதி நாட்களை கழித்து விட்டு இந்தியா வந்து சேர்ந்தோம் ......
வியாழன், 19 செப்டம்பர், 2013
சவுத் ஆப்ரிக்கா to சாம்பியா
சாம்பியா உலகின் மிக பெரிய நீர்வீழ்ச்சியான விக்டோரியா பால்ஸ் ஐ தன்னுளே வைத்து கொண்டு இருக்கும் ஒரு ஏழை நாடு ....ஜோன்ஸ்பெர்க் இல் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேசில் பயணித்து இரண்டு மணி நேரத்தில் லிவிங்ஸ்டன் விமான நிலையம் சென்றடைதோம்..பதினெட்டு வயதுக்கு கீழ உள்ளவர்களுக்கு விசா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை அதனால் என் மகளுக்கு எடுக்கவில்லை...மகன் வர முடியாததால் நாங்கள் மூவர் மாட்டும் சென்றோம் ..ஏர்போர்ட் மிக சிறியதாக இருந்தது..அங்கிருந்து போகும் பாதையில் ஊர் மிகவும் காய்ந்து போய் ஒரு சுற்றுலா தளமாகவே தோன்றவில்லை..எங்கு பார்த்தாலும் ஏழை கறுப்பின மக்கள் தான் தென்பட்டனர்,அங்கிருந்து சன் ஹோட்டல் சென்றோம்...சன் ஹோட்டலின் வாயிலில் கறுப்பின பழங்குடியினர் வரவேற்பு அளித்தனர்.. ஹோட்டல் மிக அழகாக அலங்காரம் செய்ய பட்டு வெளி உலகிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது .சிறிது ஓய்வெடுத்து விட்டு பால்ல்ஸ் பார்க்க போனோம் ,அருவி ஆறாக ஓடி வரும் அழகினை பார்த்து விட்டு திரும்பி வந்து விட்டோம்...மிக ஆபத்து நிறைந்த இடம் ஆதலால் தனியாக செல்வது அபாயகரமானது ...மறுநாள் காலை எங்கள் கைடு வந்து எங்களை அழைத்து சென்றார் ,போகும் போது சாட்ஸ் மற்றும் ரப்பர் செருப்பு போட்டு கொண்டு வர சொன்னார் அவர் மழை கோட்கொண்டு வந்தார் ,அருவியை முதன்முதலில் வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்திய டேவிட் லிவிங்ஸ்டன் பற்றி கூறினர் டேவிட் இந்த பகுதிக்கு வந்தபோது அதுவரை வெள்ளையர்களை பார்த்திராத கறுப்பின பழங்குடி மக்கள் அவரை பேய் என்று நினைதனராம் ,பிறகு அவருக்கு உணவளித்து அவர் உண்டதும் அவர் பேய் இல்லை என்று எண்ணினார்களாம்.பேய்கள் உணவு உண்ணாது என்பது அவர்கள் நம்பிக்கை.அவர்களுடன் நன்கு பழகிய அவர் தான் இந்த அருவியின் அழகினை வெளி உலகிற்கு தெரிவித்து உலகின் பார்வை இதன் மீது பட காரணமாக இருந்தவர் . அவரது பெயரயே இந்த இடதிற்கு வைத்து விட்டனர். .அருவியின் முன்பக்கம் அழைத்து சென்றார் கைடு ..."ப்ப்ப்ப்ப்பா" வாழ்கையில் அழகு என்பதின் முழு அர்த்தம இன்று தான் பார்த்தோம் சொல்லில் வடிக்க முடியாத அழகு ...அப்படிப்பட்ட அழகு ...நம் கண் முன்னே அருவி கண்ணுக்கெட்டும் தூரம் வரை கொட்டுகிறது ...மூன்று வானவில்கள் எப்போதும் தெரிகிறது ..நாம் மேலே இருந்து விழும் அருவியை கீழ் இருந்து அன்பவித்து ரசித்து இருப்போம் இது நம் கண் முன்னே கீழ விழுகிறது கீழே பட்டு தெறிக்கும் நீர் மேல் நோக்கி வந்து நம்மை நனைக்கிறது...பாசி படர்ந்த இரும்பு பாலத்தின் மேல் நடந்து செல்வது திகிலூட்டும் அனுபவமாக இருந்தது ..அந்த இடத்தை விட்டு வருவதற்கே மனது இல்லாமல் பிரிந்து வந்தோம் ....

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






