சனி, 8 ஜூன், 2013

பயணங்களின் பதிவுகள் {சவுத் ஆப்ரிக்கா}

இந்த ஆண்டு விடுமுறையில்  எனது மகன் படிக்கும் சவுத் ஆப்ரிக்கா நாட்டுக்கு பயணம் செல்ல முடிவெடுத்து நான் எனது கணவர் மகள் மூவரும் பயணித்தோம்..சென்னையில் இருந்து அபுதாபி அங்கிருந்து ஜோஹன்ஸ்பர்க்  போய் சேர்ந்தோம் ...பனிரெண்டு மணி நேர பயணம் ....36000 அடி உயரத்தில் பயணிக்கும் போதே நமக்கு கீழ்  பாலைவனங்கள் , மலைகள். பஞ்சுபோன்ற  மேகங்கள் தெரிகிறது , பார்க்கும் போதே கொள்ளை அழகாக உள்ளது ....ஜன்னல் வழியாக பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் நம் முன்னாடி உள்ள மானிட்டர் வழியாகவே பார்த்து கொண்டு வர முடிகிறது .....அங்கே போய் இறங்கியதுமே ஓர் லேடி கஸ்டம்ஸ் அதிகாரி எங்களை அழைத்து சோதனையிட்டார் ...எங்கள் மகனுக்காக கொண்டு சென்றிருந்த உணவு பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்று கூறினார்...அவ்வளவு உணவு பொருட்களை எடுத்து சென்று மகனிடம் சேர்க்க முடியாமல் போய் விடுமோ என்று கவலையுடன் விவாதம் செய்து கொண்டு இருந்த போது ஒரு முஸ்லிம் நண்பர் அவர்கள் பணத்தை எதிர் பார்கிறார்கள் 200 ரேண்டு கொடுத்தால் விட்டு விடுவார்கள் என்று சொன்னார் .நமது மதிப்பில் 1200 ருபாய் கொடுத்ததும் பேசாமல் அனுப்பி விட்டார்கள்....எங்கே போனாலும் ஊழல் இருக்கும் என்பது புரிந்தது .......அன்று இரவு எனது மகனின் நண்பர் வீட்டில்  தங்கினோம்.....

.தொடர்வேன்.....

ஞாயிறு, 31 மார்ச், 2013

நினைவுகளின் பாரம்

யாரிடமாவது பகிர வேண்டுமெனநினைக்கையில் நீ தான் முதலில் நினைவில் வருகிறாய் ...பயணிக்க வேண்டுமெனில் உன் துணையை தான் தேடுகிறேன் ...சந்தோஷ வேளைகளில் உன் சிரிப்பை எண்ணுகிறேன்...துயரம் சூழ்கையில் உன் ஆறுதலை தேடுகிறேன் ...எல்லாமும் நீதான் ஆனாலும்..?யாரையாவது மறக்க வேண்டுமெனில்உன்னைத்தான் மறக்க நினைக்கிறேன்உன் நினைவுகளின் பாரம் தாளாமல்.........



செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

வெற்றிடம்....

வெற்றிடமாகவே இருக்கிறது
நீ விலகி போன பின் என் இதய அறை
உன் போலவே சிரித்தவரிடம்
உன் தெற்றுப் பல்லின் அழகில்லை 
உன் போலவே பேசியவரிடம்
உன் அறிவின் கூர்மை இல்லை 
உன்னைப் போலவே பழகியவரிடம்
உன் போல அன்பில்லை 
உன் உள்ளம் போல யாருக்கும் 
உள்ளம் வெள்ளையில்லை
நீ நேசித்ததை போல் யாருக்கும் 
என்னை நேசிக்க தெரியவில்லை 
எவ்வளவு பேர் கடந்தாலும் 
யாரும் நிரப்பவில்லை 
உன்னால் ஆன வெற்றிடத்தை ..........

வெள்ளி, 30 நவம்பர், 2012

ரகசிய நூல்

பல்வேறு சொற்களை சேர்த்து
வார்த்தைகளாய் பேசுகின்றேன் உன்னிடம்
அவ்வார்த்தைகளை கோர்த்திருக்கிறது
ரகசிய நூலொன்று.....
வார்த்தைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ளும்
உனக்கு நூலின் ரகசியம் புரிவதில்லை
என்றேனும் ஒருநாள்
வார்த்தைகள் மறைந்து போகலாம்
அன்று நூலின் ரகசியங்கள் புரியுமுனக்கு
காய்ந்த பூக்களின் உதிர்வுக்கு பின்
தெரியும் நாராய்......

சனி, 27 அக்டோபர், 2012

பெயரை தொலைத்தவள்

உன்னை முதன்முதலில்
பார்த்த போது வேணு மாமாவின்
மனைவி என்று எல்லோருக்கும் அறிமுகபடுத்தப்பட்டாய்
பாலா பிறந்த பின் எல்லோரும் பாலாவின்
அம்மா என்றே அழைத்தனர்
மாமாவின் கடையை பார்த்து கொண்டதால்
கடைக்காரம்மா என்று அழைத்தனர் பலர்
நேசத்தையும் பிரியத்தையும் மட்டுமே பகிர
தெரிந்த உன்னை பிரிந்து புகுந்த வீடு
சென்ற அன்று உன்னை கட்டியணைத்து
அழுது பிரிந்தவள்
பின்னொரு நாளில் விசாலாட்சி இறந்து விட்டாள்
என்கிற செய்தி கேள்வியுற்ற போதினில் அந்த செய்தி
எளிதாய் என்னை கடந்து சென்றது
உன் பெயர் தொலைத்த காரணத்தினால் .....






வெள்ளி, 5 அக்டோபர், 2012

சொல்ல முடியவில்லை ...

நீ பார்க்கவில்லை என்பதால்
அலங்கரிப்பதை நிறுத்தினேன்....
நீ கேட்கவில்லை என்பதால்
என் கொலுசுகளை கழற்றினேன்...
நீ ரசிக்கவில்லை என்பதால்
என் புன்னகையை தொலைத்தேன்...
நீ நினைப்பதில்லை என்பதால்
உன்னை நினைப்பதில்லை என்று மட்டும்
சொல்ல முடியவில்லை என்னால்.......



செவ்வாய், 11 செப்டம்பர், 2012

ஜன்னலோர இருக்கை

என்றுமே வாய்ப்பதில்லை
பிரியமான ஜன்னலோர இருக்கை
இயற்க்கையின் அழகையும்
பின்னோக்கி ஓடும் மரங்களையும்
சில்லென்ற காற்றையும் தூர இருந்தே
ரசிக்க முடிகிறது எப்பொழுதும்
சிறுவயதினில் அண்ணனின் அடக்குமுறையால்
பின் தம்பியின் ஆசை என்று சொல்லி
வயது வந்த பின் ஆண்களின்
பார்வை பட கூடாதென்று சொல்லி
திருமணம் ஆனதும் கணவரின் சொல்படி
பின் பிள்ளைகளின் விருப்பமென
எப்பொழுதும் இழந்து கொண்டே இருக்கிறேன்
என் பிரியமான ஜன்னலோர பயணத்தை
என்னிடம் இருந்து பிடுங்கப்படும்
ஒவ்வொரு முறையும் பெயரிடப்படுகிறது
விட்டுகொடுத்தல் என்று..........