வெள்ளி, 30 மார்ச், 2012

மாமாவின் மரணசெய்தி..

அதிகாலை வேளையில்
அலறி அழைத்த தொலைபேசியில் வந்தது
அன்பும் பாசமுமாய்
தோளில் தூக்கி வளர்த்த
மாமாவின் மரணசெய்தி ....
கணக்கிட்டது பல காரணங்களை
பணம் மட்டுமே பிரதானமென
மாறிவிட்ட பொருளாதார மனது...
பயணதூரம் கணக்கிடப்பட்டது முதலில்
தொலைவும் அதிகம் பணமும் விரயம்,
பிள்ளைகளின் படிப்பு பாழகுமோ ஒருநாள்?
எங்கள் வீட்டு துயரத்திற்கு
துக்கம் கேட்காமல் போனாரே!
அம்மாவும் தம்பியும் போனால் போதாதோ?
என்றெல்லாம் எண்ணமிட்டது மனது
இறுதியாய் முடிவெடுத்து
ஒரு ரூபாய் செலவழித்து
தொலைபேசியில் இரங்கல் தெரிவித்து
ஊரிலேயே இல்லை நான்
என்கிற ஒற்றை பொய்யுடன் முடிந்து போனது
மாமாவின் மரணசெய்தி.......

ஞாயிறு, 25 மார்ச், 2012

காதல் கவிதைகள்

காத்திருத்தல்

காத்திருப்பதின் வலி உனக்கு
புரிய வைக்க காத்திருக்க வைத்தேன்
இப்போதும் எனக்கு தான் வலிக்கிறது
உன்னை காத்திருக்க வைத்ததால்......

மணம்
என்றுமே மணத்ததில்லை மல்லிகை
இன்று உன் கையில் வாங்கி சூடிய போது
மணத்தது போல் .....

புகைப்படம்
உற்று பார்க்காதே என்னிடம் உள்ள
உன் புகைப்படத்தை
என் உதட்டின் ரேகைகள் மறைத்திருக்கிறது
உன் முகத்தின் அழகை ....

நினைவு விதை
வேரோடு பிடுங்குவதாய் எண்ணி
முழுவதும் களைந்து எறிந்தேன்
உன் காதலை
நியாபக தூறல்கள் விழும் போதெல்லாம்
துளிர்த்து எழுகிறது எங்கோ ஆழத்தில்
படிந்திருக்கும் உன் நினைவு விதைகள் .....

பார்வை
ஆயிரம் வார்த்தைகள் பேசும்
உன் உதடுகளை விட
உன் ஆழ பார்வை ஒன்றே
என் மீதான உன் காதலை
அதிகம் சொல்கிறது ......

செவ்வாய், 13 மார்ச், 2012

இன்றும் ......

பால் வாங்குவதிலும் பேப்பர் வாங்குவதிலும்
ஆரம்பிக்கிறது காலை பொழுது
கணவனிடம் பணிவிடை செய்ய தொடங்கி
பிள்ளைகளிடம் தாயாய் சேவை செய்து
மாமனார் மாமியாரிடம் நல்ல மருமகளாய் பணிந்து
நாள்ளெல்லாம் உழைத்து களைத்து
இரவு கண்மூடி உறங்க போகும் வேளையில்
நினைவினில் வருகிறது ....
ரசிக்காமல் போன தோட்டத்து ரோஜாவும்
கேட்காமல் போன இளையராஜாவின் புதியவெளியீடும்
விசாரிக்காமல் போன அம்மாவின் கால்வலியும்
எழுதாமல் மறந்து போன கவிதை வரிகளும்
வரிசையாய் நினைவுக்கு வருகின்றன........
நாளையேனும் எனக்கென ஒதுக்க வேண்டும்
சிலமணி நேரத்தை என்று எண்ணியபடியே
கழிகிறது இன்று இரவும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........

திங்கள், 27 பிப்ரவரி, 2012

பறவையாய் இருந்த நான் ........

இணையாய் பறப்போமென்று இணைந்தோம்
திருமணத்தில் ....
பருந்தென நீ உயரும் போதெல்லாம்
ஊர்குருவியாய் வரையறுக்கப்பட்டது
என் எல்லைகள் ....
வெகு தூரங்களை நீ கடக்கும் போதெல்லாம்
அதில் பாதி தான் என் அளவென்றாய்....
சுதந்திரங்கள் என்பது உனக்கு மட்டும் சொந்தமாயின
என் கைகளுக்கு விலங்கிடப்பட்டு ....
நாட்கள் செல்ல செல்ல என் சிறகுகள் ஒவ்வொன்றாய்
பிடுங்கப்பட்டு நூல்களாய் கோர்க்கப்பட்டன....
நூல்கள் உன் கைகளில் சிறைபட்டு
பறவையாய் இருந்த நான் பட்டமானேன்....

வியாழன், 16 பிப்ரவரி, 2012

அழகோ அழகு .......

புதியதாய் பூத்த மலரின்
அழகை கண்டு ரசித்த நாளில்
இது தான் உலகிலேயே அழகென்று
எண்ணி வியந்தேன் ....

பௌர்ணமி நிலவின் ஒளி
விழுந்த கடல் அலைகளை
வெள்ளியின் உருகலாய்
பார்த்த அன்று இதுவன்றோ
அழகென்று சிலிர்தேன் ...

உச்சி மலையின் மீது
சில்லென்ற பனிகாற்றில்
மேக கூட்டத்தின் உள்
நடக்கையில் இதைவிட அழகுண்டா
என்று எண்ணி ரசித்தேன் ....

பார்த்து வியந்து சிலிர்த்து ரசித்த
காட்சிகளின் அழகெல்லாம் தோற்றது
இதழ் கடித்து நீ சிரித்த ஒற்றை சிரிப்பினில் .......

திங்கள், 23 ஜனவரி, 2012

சாத்தியமில்லாத ஒன்று

பொய் இல்லாத அரசியல்வாதி
உண்மை பேசும் வக்கீல்
கோபமில்ல ஆண்கள்
கண்ணீரில்லாத பெண்கள்
ஒப்பனை இல்லா யுவதி
சிரிப்பில்லா குழந்தை ....

இதெல்லாமும் சாத்தியமாகலாம்
ஒருநாள்
சாத்தியமே இல்லாத ஒன்று உண்டென்றால்
அது நீயில்லாத நான் ......

வியாழன், 29 டிசம்பர், 2011

குமரியின் குமுறல்

குழந்தையாய் இருந்த நான்
குமரி ஆனேன் நேற்று ....
நேற்று வரை எனக்கும்
எனது தோழனுக்கும் இருந்த உறவு
இன்று ஆனது தப்பாய் ....
இதுவரை எங்களது பார்வையில்
அன்பும் சந்தோஷமும் கண்டவர்கள்
இன்று அதை காதல் என்கிறார்கள் ...
நேற்றுவரை எங்களது சிரிப்பை
உல்லாசம் குழந்தை தனம் என்றவர்கள்
இன்று கள்ளத்தனம் பல்லிளிப்பு என்கிறார்கள் ....
நேற்று வரை எங்களது கைகோர்பில்
வெள்ளந்தி தனமும் நட்பும் பார்த்தவர்கள்
இன்று அதை காமம் என்கிறார்கள் ....
குற்றம் எங்கள் மீதல்ல
இன்னமும் நாங்களே கடந்திராத எங்களது பால்யத்தை
நீங்கள் கடந்தது தான் குற்றம் .......