வியாழன், 8 செப்டம்பர், 2011

அடையாளம் தொலைத்தவள்

அலுவலகம் செல்லும்
கணவனின் கழுத்தில் தொங்குகிறது
தான் இன்னாரென்று அறிவிக்கும்
அடையாள அட்டை .....

பள்ளி செல்லும் பிள்ளையின்
கழுத்தினில் அவன் யாரென்று
கூறும் அடையாள அட்டை .....

மழலையர் வகுப்பினில் தவழும்
குழந்தையின் கழுத்திலும் அவளைப் பற்றி
தகவல்களை பற்றிய அடையாள அட்டை ...

அவர்கள் வீட்டினில் கட்டி போடப்பட்டு இருக்கும்
நாயின் கழுத்தினிலும் ஓர் அடையாள அட்டை
அதனை பற்றிய விவரங்களோடு .....

அவரகளுக்காகவே நாள்முழுக்க பாடுபட்டு
அவர்களை எல்லாம் அன்போடு
பாதுகாக்கும் அந்த வீட்டு பெண்ணிடம் மட்டும்
எந்த வித அடையாளமுமில்லை
தானென்ற அடையாளம் தொலைத்தவள் அவள் .....

விசித்திர மனம்

உன் முகத்தில் விழிப்பதில்லை
உன் நிழல் விழும் இடங்களிலும் நிற்பதில்லை
உன் பார்வையில் படுவதில்லை
உன்னை எண்ணி பார்க்க போவதுமில்லை
நீ பேசினாலும் மறுபேச்சு பேசுவதில்லை
என்றெல்லாம் சபதமேற்றபடி
வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன் உனக்காக .........

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ஊழல் எதிர்ப்பு

வெகு தூரத்தில் நடக்கிறது
ஊழல் எதிர்ப்பு போராட்டம்
எப்படியேனும் கலந்து கொண்டு
காண்பிக்க வேண்டும் என் ஆதரவை
என்றெண்ணி தேடினேன் வாகனங்களை

வாகனம் ஒன்றும் கைவசமில்லை
பேருந்திலும் இடமில்லை
ரயில் வண்டியிலும் இடமில்லை

இறுதியாய் பெரும் முயற்சி செய்து
ரூபாய் நூறு கையூட்டளித்து
பயணசீட்டை பெற்று பயணப்பட்டேன் பெருமிதமாய் .....

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அந்தரங்க டயரிகள்

தினந்தோறும் இரவில்
எழுதபடுகிறது டயரி.....
எழுத கூடிய விஷயங்கள் தாள்களிலும்
மறைக்க வேண்டிய விஷயங்கள் மனதின்
ரகசிய அறைகளிலும்.......
என்றேனும் ஒருநாள் படிக்கப்படலாம்
தாள்களில் எழுதப்பட்டவை ...
என்றுமே வெளிவராமல் உடலோடு
புதைக்கபடுகின்றன பல அந்தரங்க டயரிகள்.....

சனி, 13 ஆகஸ்ட், 2011

மறவாத காதல்

நீ நடந்த பாதையில்
நடந்ததில் என் பாதை
எதுவென்று மறந்தேன் .......

நீ ரசித்தவற்றையே
நானும் ரசிப்பதனால்
என் ரசனைகளை மறந்தேன் ....

உன் பேச்சினையே
கிளிப்பிள்ளை போல்
நானும் பேசுவதால் என்
பேச்சு திறமையை மறந்தேன்......

எதை மறந்த போதிலும்
நான் மறவாத ஒன்று உண்டென்றால்
அது நான் உன் மேல் கொண்ட காதல் ......

சனி, 23 ஜூலை, 2011

"படி தாண்டா பத்தினி பெண்கள் "

திரைப்பட பின்னணி பாடகியாக
பெயர் வாங்க விரும்பிய
குயில் போல் பாடும் குரல் கொண்ட
மீனா இன்று பாடுகிறாள்
அவள் வீட்டு குளியறையில்....

கதைகள் எழுதி குவித்து
பெரும் பெயர் வாங்குவேன் என்று
சூளுரைத்த கவிதாவின் கதைகள்
இன்று வெளிவராமல் கிடக்கின்றன
அவள் வீட்டு பரண் மேல் ......

ஓட்ட பந்தயத்தில் எப்பொழுதும்
முதல் பரிசு வாங்கும் பவித்ராவின் கனவு
தடகளத்தில் இந்தியாவிற்கு முதல்பெயர்
வாங்கி தருவது இன்று அவள் ஓடுகிறாள்
பிள்ளைகளின் பின்னே ....

நல்லாசிரியர் பெயர் வாங்க
கனவு கண்ட வேணி அக்கா
இன்று ஆசிரியராக இருக்கிறாள்
அவள் பிள்ளைகளுக்கு மட்டும் ....

பல துறைகளில் பெயர் வாங்க துடித்த
இவர்கள் எல்லாம் இன்று ஒரே பெயர்
வாங்கினார்கள் ....
"படி தாண்டா பத்தினி பெண்கள்" என்று .........

செவ்வாய், 5 ஜூலை, 2011

மனிதம் தொலைத்தவன்

நேற்று வரை நோயின் பிடியில்
நல்ல உணவுக்கும் வழியில்லை
மருந்து வாங்கவும் பணமில்லை
குடிக்க நீர் தரவும் ஆளில்லை .....

சதை எதுவும் இல்லாமல் எலும்பும் தோலுமாய்
கிழிந்த பாயில் கிடந்த அந்த மனிதரின் இறப்பில் ....

இன்று ஊரெங்கும் இரங்கல் போஸ்டர்
தேர்போல் ஜோடனை பல்லாக்கு
சின்னதும் பெரியதுமாய் மாலைகள்
தெருவெங்கும் பூக்குவியல்
அரசியல்வாதிகளின் அணிவகுப்பு அதில்
கண்ணீரில்லாத கண்களை துடைத்து கொண்டு
தகப்பனின் சாவில் சுயவிளம்பரம்
தேடும் இவனுமொரு மனிதனா ...?
மனிதம் தொலைத்த மிருகமா ...........