செவ்வாய், 24 ஜூலை, 2012

தொலைபேசி காதல்

முன்பெல்லாம் எப்போதும் தொடர்பில் இருந்தாய் அழைப்புக்கெல்லாம் பதில் அளித்தாய் நாட்கள் சென்றதும் என் அழைப்புக்கள் எல்லாம் தொலைக்கப்பட்டது பின் அழைத்த போதெல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டது உனது எண் அழைப்புகளோ ஏற்புகளோ இல்லை எனினும் எனது தொலைபேசி உனது எண்ணையும் என் இதயம் உன்னையும் அழிக்காமல் பதிந்துள்ளது அன்பின் மிச்ச சுவடுகளாய் ......

ஞாயிறு, 27 மே, 2012

காத்திருக்கிறேன்

.......
ஒற்றை பாதையில் இணைந்து நடந்தோம் இன்பமாய் பிரிவொன்று வந்தது ஓர்நாள்.... பிரிந்து நீ சென்றாலும் பல வழிகளில் தொடர்கிறது உன் பயணங்கள்..... என்றேனும் ஓர் நாள் மீண்டும் நாம் இணைந்து பயணிப்போம் என்றெண்ணி நீ வரும் வழியை பார்த்து கொண்டே காத்துக் கொண்டு இருக்கின்றேன் நீ விட்டு சென்ற இடத்திலேயே......

திங்கள், 16 ஏப்ரல், 2012

அத்தையின் வீடு

தாண்டி போக மனமின்றி
அழகாய் வரவேற்கும்
அத்தை வீட்டு முற்றம்
காதுக்கினிய கொலுசொலியின் கூடவே
ஒத்து ஊதும் அத்தையின் மெட்டி சத்தம்
ஊதுபத்தியின் மணம் மனதினை மயக்கும்
வாய் நிறைய சிரிப்பின் ஊடே
வாடி என்றழைக்கும் பாசமிகு அத்தை
கட்டினாள் மாடி வீடு ...
இன்று உட்கார்ந்தாலே அழுக்காகி விடுமோ
புத்தம்புது சோபா என்று
முகம் சுளிக்கும் வரவேற்பு
கொலுசொலிக்கு பதிலாக வீட்டினுள்ளே
பணத்தின் செழிப்பை உணர்த்தும்
செருப்பினது சத்தம்
ஊதுபத்தி மணமில்லை ஆளுக்கொரு
விதமாய் பூசும் நறுமணத்தின் வாசம்
பாதி கண்கள் தொலைகாட்சியிலும்
பாதி புன்னகை உதட்டிலும் கொண்டு
வா என்று அழைக்கும் அத்தையின் வீடு
இன்று உடனே தாண்டி போக சொல்கிறது
உள் நுழைய மனமின்றி .......

சனி, 7 ஏப்ரல், 2012

தொலைக்கபடும் பொருள்

உன் கைகளில் கிடைக்கும் பொருளாய்
இருப்பதை விட உன்னால்
தொலைக்கப்படும் பொருளாய்
இருப்பதையே விரும்புகிறேன்
நேசிக்கபடுவதும் தேடப்படுவதும்
தொலைக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே என்பதால் ...♪♫♪.¸¸.♪♫♪♫♪.¸¸.♪♫

வெள்ளி, 30 மார்ச், 2012

மாமாவின் மரணசெய்தி..

அதிகாலை வேளையில்
அலறி அழைத்த தொலைபேசியில் வந்தது
அன்பும் பாசமுமாய்
தோளில் தூக்கி வளர்த்த
மாமாவின் மரணசெய்தி ....
கணக்கிட்டது பல காரணங்களை
பணம் மட்டுமே பிரதானமென
மாறிவிட்ட பொருளாதார மனது...
பயணதூரம் கணக்கிடப்பட்டது முதலில்
தொலைவும் அதிகம் பணமும் விரயம்,
பிள்ளைகளின் படிப்பு பாழகுமோ ஒருநாள்?
எங்கள் வீட்டு துயரத்திற்கு
துக்கம் கேட்காமல் போனாரே!
அம்மாவும் தம்பியும் போனால் போதாதோ?
என்றெல்லாம் எண்ணமிட்டது மனது
இறுதியாய் முடிவெடுத்து
ஒரு ரூபாய் செலவழித்து
தொலைபேசியில் இரங்கல் தெரிவித்து
ஊரிலேயே இல்லை நான்
என்கிற ஒற்றை பொய்யுடன் முடிந்து போனது
மாமாவின் மரணசெய்தி.......

ஞாயிறு, 25 மார்ச், 2012

காதல் கவிதைகள்

காத்திருத்தல்

காத்திருப்பதின் வலி உனக்கு
புரிய வைக்க காத்திருக்க வைத்தேன்
இப்போதும் எனக்கு தான் வலிக்கிறது
உன்னை காத்திருக்க வைத்ததால்......

மணம்
என்றுமே மணத்ததில்லை மல்லிகை
இன்று உன் கையில் வாங்கி சூடிய போது
மணத்தது போல் .....

புகைப்படம்
உற்று பார்க்காதே என்னிடம் உள்ள
உன் புகைப்படத்தை
என் உதட்டின் ரேகைகள் மறைத்திருக்கிறது
உன் முகத்தின் அழகை ....

நினைவு விதை
வேரோடு பிடுங்குவதாய் எண்ணி
முழுவதும் களைந்து எறிந்தேன்
உன் காதலை
நியாபக தூறல்கள் விழும் போதெல்லாம்
துளிர்த்து எழுகிறது எங்கோ ஆழத்தில்
படிந்திருக்கும் உன் நினைவு விதைகள் .....

பார்வை
ஆயிரம் வார்த்தைகள் பேசும்
உன் உதடுகளை விட
உன் ஆழ பார்வை ஒன்றே
என் மீதான உன் காதலை
அதிகம் சொல்கிறது ......

செவ்வாய், 13 மார்ச், 2012

இன்றும் ......

பால் வாங்குவதிலும் பேப்பர் வாங்குவதிலும்
ஆரம்பிக்கிறது காலை பொழுது
கணவனிடம் பணிவிடை செய்ய தொடங்கி
பிள்ளைகளிடம் தாயாய் சேவை செய்து
மாமனார் மாமியாரிடம் நல்ல மருமகளாய் பணிந்து
நாள்ளெல்லாம் உழைத்து களைத்து
இரவு கண்மூடி உறங்க போகும் வேளையில்
நினைவினில் வருகிறது ....
ரசிக்காமல் போன தோட்டத்து ரோஜாவும்
கேட்காமல் போன இளையராஜாவின் புதியவெளியீடும்
விசாரிக்காமல் போன அம்மாவின் கால்வலியும்
எழுதாமல் மறந்து போன கவிதை வரிகளும்
வரிசையாய் நினைவுக்கு வருகின்றன........
நாளையேனும் எனக்கென ஒதுக்க வேண்டும்
சிலமணி நேரத்தை என்று எண்ணியபடியே
கழிகிறது இன்று இரவும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........